நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முன்னோர் வாக்கு, ஒருவர் இவ்வுலகை வாழ்வை அனுபவிப்பதற்கு நோயற்ற உடல் அவசியம். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை. தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பது நல்ல தொரு தேகப்பயிற்சி, பத்திரமானது. செலவே இல்லாதது. எமது அன்றாட அலுவல்களுடன் எளிதாக இதனையும் மேற்கொள்ளலாம். இது எமது வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய மகிழ்ச்சி தரும் பயிற்சியாகும். எனினும் ஒரே தடவையில் நீண்ட தூரத்தை இலக்காக வைத்து நடக்க வேண்டாம். ஆரம்பத்தில் 5 – 10 நிமிடங்கள் நடக்கவும். பின்பு மெதுவாக நடக்கும் நேரத்தைக் கூட்டவும். மெதுவாக நடக்கும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டு போனால் இயற்கையாகவே செல்லும் தூரம் அதிகமாகும். ஆரம்பத்தில் ஒருவர் 30 நிமிடங்களில் ஒரு மைல் நடப்பார் என்றால் ஒர் அனுபவஸ்தர் அதையே 10 – 12 நிமிடங்களில் நடந்து முடித்துவிடுவார். உங்களால் முடிந்த வரையில் உடல் சௌக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடிய வேகத்தில் நடக்கவும். இந்தப் பயிற்சியில் ஈடுபாடு உடைய நண்பர் ஒருவர் உங்களுக்கு கிடைப்பாரானால் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு அலுப்பு, சோர்வு ஏற்படும் போது அவருடைய ஈடுபாடு உதவியாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் 40 நிமிடங்களுக்கு வேகமாக நடைப்பயிற்சி செய்வது நல்லது. நடக்கும்போது கைகளை வீசி நடவுங்கள். இறுக்கமான ஆடை அணிவதைத்தவிருங்கள். உடல் வியர்வை வெளியேற்றும் தளர்வான ஆடைகளை அணியுங்கள். தரமான எடை குறைவான செருப்பு, சப்பாத்துக்களை உங்கள் வயது விருப்பத்துக்கு ஏற்ற காலணிகளை அணியுங்கள். அத்துடன் நடக்கும்போது முழங்காலில் இருந்து அடி எடுத்து வைக்காமல் உங்கள் இடுப்பில் இருந்தே அடி எடுத்து வையுங்கள். நடக்கும்போது தலையை நிமிர்த்தி வைத்துக்கொண்டு நடவுங்கள்.
இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிக்கு (type II Diabetic) இன்சுலின் சரியான அளவில் சுரந்தாலும் அது முழுமையான அளவில் வேலை செய்யாது. இவர்களின் உடலில் இன்சுலின் இயங்காமல் இருப்பதற்கு இன்சுலின் எதிர்ப்பு நிலை இருப்பதே காரணம். அதாவது நமது உடலில் உள்ள கலங்வாங்கிகள் Insulin Receptors என்ற பூட்டுக்கள் திறக்கப்பட வேண்டும். இதற்கு இன்சுலின் என்ற சாவி தேவை நடைப்பயிற்சியின் போது மேற்படி இன்சுலின் வாங்கிகள் எல்லாம் தூண்டப்படுவதால் கலங்களில் காணப்படும் குளுக்கோஸ் நுழைவாசல்கள் திறக்கப்படுகின்றன இதனால் குருதியில் உள்ள வெல்லமானது கலங்களுக்குள் நுழைகின்றது. அத்துடன் சக்தியாக மாறுகின்றது. இது தசை திசுக்களின் செயற்பாட்டுக்கு உதவுகின்றது. இதன் மூலம் குருதியின் வெல்ல மட்டம் குறைகின்றது. எனவே நடைப்பயிற்சி நீரிழிவு நோயாளிக்கு நல்ல மருந்து.
அத்துடன் பெரும் பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கும். கொலஸ்ரோல் அதிகம் இருக்கும். இரத்த நாளங்களின் மீளும் திறனை நடைப்பயிற்சி அதிகப்படுத்துவதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இது தவிர எமது இருதயத்திற்கு தீமை செய்யும் எல்.டி. எல். (LDL) கொலஸ்ரோல் மற்றும் டிரைகிரைட்ஸ் அளவையும் குறைக்கின்றது. அத்துடன் உடலுக்கு நன்மை செய்யும் எச்.டி. எல் (HDL) கொலஸ்ரோலையும் அதிகப்படுத்துகின்றது. இதன் காரணமாக மாரடைப்பு வரும் வாய்ப்புக்கள் நடைப்பயிற்சி செய்வோருக்கு குறைவடைகின்றது. மேலும் சாதாரண வேளைகளில் தசைகளுக்குள் சோம்பிக்கிடக்கும் மெல்லிய இரத்த நாளங்கள் கூட நடைப்பயிற்சியின் போது விரிவடைகின்றன இதனால் பல புதிய நாளங்கள் தோன்றுகின்றன.இதன் போது இரத்தத்தில் மிகுந்து இருக்கும் வெல்லத்தைப் பயன்படுத்த இப்பொழுது அதிக இடம் கிடைக்கின்றது. இதன் மூலம் குருதியின் வெல்ல அளவு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
உடல் எடை அதிகரிப்பானது எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாககும். நடைப்பயிற்சியின் போது பெரும்பாலான தசைகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து வேலை செய்வதால் அதிகளவில் சக்தி வெளியேறுகின்றது. இதற்கு கொழுப்பு பயன்படுத்தப்படுகின்றது. இதன் பயனாக உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்பு குறைவதால் உடல் எடை குறைகின்றது. உடல் எடையைக் குறைப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் ஒர் இலகுவான வழி நடைப்பயிற்சி ஆகும். அத்துடன் எடை அதிகரிப்பால் உருவாகும் நீரிழிவை நடைப் பயிற்சியால் தவிர்க்க முடியும. நடக்கும்போது எவ்வாறு சுவாசிக்கின்றோம் என்பதை உணருங்கள். முதலாவதாக, ஆழ்ந்த மூச்சை வெளியே விடுங்கள். பின்னர் உங்களை சுற்றி இருக்கும் வளியை ஆகாயத்தை முகர்வது போன்று முயற்சி செய்யுங்கள் அதிகாலை வேளையில் திறந்த வெளிகளில் மலைகள் மீதான பாதைகளில் வேகமாக நடக்கும் போது அமைதியான சுற்றுச் சூழலுடன் தூய்மையான வளி மண்டலக் காற்றை நுகர முடியும். இதன் மூலம் உங்கள் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகின்றன. அத்துடன் எமது மூளையில் உண்டார்பின் (Endorphin) எனப்படும் ஹோர்மோன் தூண்டப்படுவதால் மன அழுத்தம் குறைகின்றது. மன அமைதிக்கு வழி செய்தால் நாள் முழுவதும் உற்சாகமாக உழைப்பது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் உருவாகும் நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம். எனவே ஒருவர் நடக்காவிட்டால் அவர் நீரிழிவை நோக்கி நடக்கின்றார் என்பதை உணருங்கள்.
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்