உலக காசநோய் விழிப்புணர்வு தினமானது 1982ம் ஆண்டிலிருந்து வருடம்தோறும் மார்ச் மாசம் 24ம் திகதி பிரகடனப்படுத்தப்படுகின்றது. டாக்கடது.றொபேட்குக் என்பவர் காசநோயிற்குரிய காரணி Tuberculosis எனப்படும் ஒரு வகை பக்ரீறியா என்று பெர்லின் நாட்டில் இருந்தபடி அறிவித்தபோது, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இந்நோயாளது ஏழு பேரிற்கு ஒருவர் என்ற விகிதத்தில் இறப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவரின் கண்டுபிடிப்பே காசநோயை இனங்காணுவதற்கும் குணப்படுத்துவதற்கும் வெளிச்சமான ஒரு பாதையை ஏற்படுத்தித் தந்தது.
ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு தொனிப்பொருளை மையமாக வைத்தே இவ்விழிப்புணர்வு தினம் பிரகடனப்படுத்தப்படும் உதாரணமாக 2013ம் ஆண்டிற்கான தொனிப்பொருளாக “ எம்வாழ்வில் காசநோய் வராமல் தடுப்போம் காசநோய் இல்லாத உலகை உருவாக்குவோம்” அமைந்தது. இதேபோன்று இவ் ஆண்டு 2015ற்கான தொனிப்பொருள் காசநோயை இனங்கண்டு சிகிச்சையளிப்பதன் மூலமாக எல்லோரும் இணைந்து காசநோயை இல்லாதொழிப்போம் என்பதாகும். இவ்வாறு வருடந்தோறும் இத்தினம் பிரகடகப்படுத்துவதன் மூலம் காசநோய் பற்றிய அடிப்படை தகவல்கள், அதாவது காசநோய் உருவாகுவதற்குரிய காரணம், பரவும் முறை, சிகிச்சை முறை, முழுமையாக இல்லாதொழிக்கும் முறை பற்றிய தகவல்களை மக்களிற்கு தெரியப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.
காசநோயானது Mycobacterium tuberculosrs எனும் பக்ரீறியாவால் ஏற்படுத்தப்படுகின்றது. காசநோய்யினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது, கதைக்கம் போது அல்லது எச்சில் சளியினைத் துப்பும்போது அவரிடம் இருந்து மற்றவருக்கு கடத்தப்படுகிறதே தவிர இது பரம்பரை நோயல்ல காசநோயானது பெரும்பாழும் (80 வீதம்) நுரையீரலையே தாக்கினாலும் சுவாசப்பைக்கு வெளியே உள்ள சிறுநீரகம், மூளைக் கலங்கள், முள்ளந்தண்டுப்பகுதி, எலும்பு போன்ற பகுதிகளையும் தாக்குகின்றது. மேற்கூறிய பக்ரீறியாவல் தாக்கப்பட்ட ஒருவர் உடனடியாகவே காசநோயாளியாக மாறுவதில்லை ஏனெனில் அப்பக்ரீறியா உடலினுள் செயலிழந்த நிலையில்காணப்படுவதுண்டு. இதனால் குணங்குறிகளும் தென்படாமல் விடுவதுண்டு. அத்துடன் நோயைப் பரப்புவதுமில்லை. மாறாக, அப் பக்ரீறியா அவரது உடலினுள் தங்கி நின்று நாட்பட்ட குணங்குறிகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கும். அதாவது உடலின் எதிர்ப்புசக்தியினளவில் தங்கியுள்ளது. இதனால் இவ்வாறானவர்களிற்கும் கிரமமான மருந்து சிகிச்சைமுறை அவசியமானதே. இதன்மூலம் ஆரம்பகட்டத்திலேயே இலகுவாக காசநோயின் தோற்றுவாய் குறைக்கப்படுகின்றது. இல்லாதொழிக்கப்படுகின்றது. Isoniazid, Rifampicin. Rifapentine போன்ற மருந்துகள் சிகிச்சைக்காப் பாவிக்கப்படுகின்றது.
மற்றைய வகை என்னவெனில், மேற்கூறிய பக்ரீறியாவால் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட ஒருவர் காசநோயிற்கு முழுமையாக உள்ளாக்கபட்டவராவார். மூன்று வாரங்களிற்கு மேற்பட்ட இருமல், இருமும் போது நெஞ்சில் வலியை உணர்தல், இரத்தத்துடன் கூடியதாக சளி வரல், இரவு நேரத்தில் கடுமையாக வியர்த்தல், உடல் மெலிந்து கொண்டு போதல், உணவில் நாட்டம் குறைந்து செல்லுதல், இரவு நேரத்தில காய்ச்சல்லேற்படல், பொதுவாக கழுத்துப்பகுதியிலுள்ள நிணநீர்கணுக்கள் வீக்கமடைந்து காணப்படல் போன்றவாறு அறிகுறிகள் தென்படுமாயின் அவரை காசநோயாளியாக இனங்கண்டு மேலதிக பரிசோதனைகளும் செய்யப்படல் வேண்டும்.
மேலதிக பரிசோதனைக்காக ஆழமாக உட்சுவாசித்தபின் அந்நோயாளி இருமும்போது சளி மாதிரி பெறப்படும். சுகாதார நிலையமொன்றில் சுகாதார உத்தியோகத்தர் முன்னிலையில் தம் வீட்டில் காலை எழுந்தவுடன் மீண்டும் சுகாதார நிலையத்தில் என்றவாறு மூன்று தடவைகள் சளிமாதிரிகள் பெறப்படும். இப்பரிசோதனை இலகுவானதும் திருது்தமானதும் ஆகும். மேலும் நெஞ்சுப்படம் எடுத்தல், ரியூபகுலோபின் பரிசோதனை ( மாண்டு சோதனை) , சளியை ஊடக வளர்ப்பு செய்து பார்த்தல் என்று வேறுசில பரிசோதனைகள் செய்யப்படும்.
இவ்வாறு சிகிச்சைகள் காசநோயாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவர் தவறாது மருந்து எடுக்கவேண்டும். Isoniazid, Rifampicn. Ethambutol, Pyruzinamide, என்றவாறு சில குளிசைகள் பாவிக்கப்படுகின்றன. முதல் இரு மாதங்களிற்கு 4 குளிசை வீதமும் அடுத்த நான்கு தொடக்கும் ஏழு மாதங்களிற்கு 2 குளிசை வீதமும் எடுத்து வரல் வேண்டும் ( வைத்திய ஆலோசனையுடன்) மொத்தத்தில் ஆறு தொடக்கம் ஒன்பது மாத காலப்பகுதிக்குரிய சிகிச்சை முறையாகும். கிரமமாக மருந்து எடுப்பதை நிறுத்திவிடின் நோயின் தாக்த்திற்கு மீண்டு உள்ளாக்கப்படுவதுடன் பிழையாக மருந்து எடுப்பின் பக்ரீறியா உடலினுள்ளேயே தங்கிவிடுவதனால் பிற்காலத்தில் அத்தகைய மருந்துகள் அப்பக்ரீறியாவிற்கெதிராக வேலை செய்யாது இறுதியில் நோயைக் குணப்படுத்துவது கடினமாக மாறிவிடும். மருந்து சிகிச்சை முறையின் பூர்த்தியாக்கமானது, எடுக்கப்பட்ட மருந்துகளின் அளவு, காலப்பகுதி, மற்றும் பிரத்தியேகமான சில சந்தர்ப்பங்களினால் ( எயிட்ஸ் நோயாளி, கர்ப்பிணி தாய்மார், சிறுபிள்ளைகள்) தீர்மானிப்கப்படும்
காசநோயின் சிகிச்சைமுறையின்போது நேரடி அவதானிப்பு சிகிச்சைமுறை ( DOTS : Directly Observed Treatment Shortcourse) பாவிக்கப்படுகின்றது. ஆறுமாதகால சிகிச்சையின் போது காசநோயாளியொருவர் தன் வீட்டிலோ அல்லது அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு சென்றோ சுகாதார சேவையாளர் முன்னிலையில் காசநோய்ற்கான மருந்துகளை உட்கொள்கிறார் என உறுதிப்படுத்தலே இம்முறையாகும். இது நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.
அடுத்ததாக இந்நோய்நிலமை தொற்றுவதை எங்ஙனம் தடுக்கலாம் என பார்ப்போம். அதாவது சரியான மருந்துகளை வைத்திய ஆலோசனைப்படி கிரமமாக 6 மாதங்களிற்கு உட்கொள்ளல், கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்தல், இருமும்போது அல்லது தும்மும்போது மூக்கு, வாயை மூடிக்கொள்ளல், காசநோயாளியின் சளியை எரித்து விடல் போன்றன மிகவும் முக்கியமான விடயங்களாகும்.
ஆகவே, காசநோயின் வீரியத்தைக் குறைப்பதற்கு மேற்கூறப்பட்டவாறு நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள அரசமருத்துவ மனைகளை நாடிச் சென்று அவர்களின் உதவியுடன் காசநோய் அல்லது மார்புநோய் சிகிச்சை நிலையத்திற்கு சென்று சரியான நேரத்திற்கு சரியான முறையில் மருந்து உட்கொள்ளவும் மற்றைய சேவைகளைப் பொறுக்கொள்ளவும். ஊக்குவித்தல் வேண்டுமு். யாழ்பாணத்தில், பண்ணையில் மாவட்ட மார்புநோய் சிகிச்சைப் பரிவில் இலவசமாக காசநோயிற்கான சிகிச்சை வழங்கப்படுவது யாவரும் அறிந்ததே இதை விடுத்து காசநோயாளியை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைத்தல் நியாயமன்று!
சி.சஸ்ரூபி
B.Sc( Nursing) M.Phil (Reading)