மிகப் பொதுவான கிருமித் தொற்றுக்களில் சிறுநீரகத் தொகுதிக் கிருமித் தொற்றும் ஒன்றாகும். குழந்தைகளிலும், சிறுவர்களிலும் சிறுநீரகத் தொகுதி கிருமித் தொற்று ஏற்படுமாயின் அதை நாம் முக்கியத்துவமானதாகக் கருதவேண்டும்.
ஏனேனில், குழந்தைகளுக்கு கிருமித் தொற்று சிறுநீரகத் தொகுதியில் ஏற்பட்டால் வளர்ந்து வரும் சிறு நீரகங்கள் பாதிக்கப்படுவதுடன், சிறுநீரகத் தொகுதியில் ஏதாவது பிறவிக்குறைபாடு உள்ளதன் காரணமாகவா கிருமித் தொற்று ஏற்பட்டது எனவும் பரிசோதிக்க வேண்டும். சிறுநீரகத் தொகுதிக் கிருமித் தொற்றானது பெண்பிள்ளைகளில் 100 பேரில் 8 பேருக்கும் ஆண்பிள்ளைகளில் 100 பேரில் 2 பேருக்கும் ஏற்படலாம்.
சிறுநீரகத் தொகுதி கிருமித் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?
சாதாரணமாக சிறுநீர் தொகுதியில் கிருமிகள் காணப்படாது. ஆனால் சலவாசலிலுள்ள தோல் பகுதிகளில் பொதுவாகவே கிருமிகள் காணப்படும். அவை சலவாசலினூடாக உட்சென்று சலப்பையில் பெருகி, சில சமயங்களில் சிறுநீரகத்தையும் சென்றடையலாம். கிருமிகள் சிறுநீர்த் தொகுதிக்குள் செல்லக்கூடியதற்கான வாய்ப்புகள் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்.
- பிள்ளைகளுக்கு மலச்சிக்கல் காணப்படுமாயின், சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேங்க வாய்ப்பு அதிகமாகும். அப்போது உட்சென்ற கிருமி அதிக நேரம் இருந்து பெருகலாம்.
- பாடசாலை செல்லும் பிள்ளைகள் சிறு நீர் கழிப்பதைத் தாமதித்து சிறுநீர் கழிப்பதை அடக்கும் போதும் சிறுநீர் தேங்கி கிருமிகள் பெருக வாய்ப்பு அதிகமாகும்.
- குறைந்தளவு நீராகாரங்களை உட்கொள்ளும்போது சிறு நீர் உருவாகுமளவு குறைவடைய தற்செயலாக உட்சென்ற கிருமி சிறுநீருடன் வெளியேறும் சாத்தியம் குறைவடைந்து அந்தக் கிருமிகள் பெருகலாம்.
- குழந்தைகளுக்கு, எந்நேரமும் அணையாடையை ( Napkin / Diaper) அணியும் போது அதனள் மலசலம் சேர்ந்து அவற்றிலுள்ள கிருமிகள் சலவாசலூடாக சிறு நீர்த் தொகுதியை அடையலாம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இது நிகழலாம்.
- மலங்கழித்த பின், குழந்தையைக் கழுவும் போது குறிப்பாக பெண் குழந்தைகளில் பின்புறமிருந்து முன்பக்கமாக கழுவும் போது மலத்திலுள்ள கிருமிகள் சல வாசலை அடைய வாய்ப்பு அதிகமாகும்.
- சில சமயங்களில் பிறப்பிலிருந்தே காணப்படும் சிறு நீர்த் தொகுதிக் குறைபாடுகள் காரணமாக சிறு நீர் அதிகளவு தேங்கவோ அல்லது சலப்பையிலிருந்து சிறு நீர் மேல்நோக்கி மீண்டும் சிறுநீரகங்களை அடையவோ நேரலாம். இதனால் கிருமித் தொற்று அதிகம் ஏற்படலாம்.
சிறுநீரகத் தொகுதி கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை எவ்வாறு அறியலாம்.
சிறுநீரகத் தொகுதி கிருமித் தொற்று வளர்ந்தவர்களுக்கு ஏற்படும் போது காணக்கூடிய பொதுவான அறிகுறிகள், வளர்ந்த சிறுவர்களில் காணப்படுமாயினும், சிறு குழந்தைகளில் காணப்படுவது குறைவாகும் வளர்ந்த சிறுவர்களில் பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்.
- நடுக்கத்துடனான கடும் காய்ச்சல்.
- அடிக்கடி சிறிதளவில் சலம் கழித்தல்
- சலம் கழிக்கும் போது வலியை உணருதல்
- அடிவயிற்றில் அல்து நாரிப் பகுதியில் வலிகாணப்படல்
- சில சமயங்களில் சலம் கலங்கலாகவும் இரத்தம் கலந்ததாகவும் போகலாம்.
இவற்றை விட சோர்வு, பசியின்மை, வாந்தி, தலையிடி போன்ற போதுவான அறிகுறிகளும் காணப்படலாம்.
எனினும் மேற்குறிப்பிட்ட அனைத்து அறிகுறிகுளும் சிறு குழந்தைகளில் காணப்படாது. எனவே குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படுகையில், காய்ச்சலுக்கான வேறு காரணங்கள் ( சளி, இருமல், வயிற்றோட்டம், காதுநோ, தொண்டைநோ, போன்றன) இல்லாதுவிடின், எப்போதும் சிறுநீர்த் தொகுதி கிருமித் தொற்று உள்ளதா எனவும் சோதிக்க வேண்டும்.
சிறுநீரகத் தொகுதி கிருமித் தொற்று ஏற்பட்டால் அதை எவ்வாறு கண்டறியலாம்?
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் சில காணப்படுமாயின் அல்லது காரணமின்றி காய்ச்சல் காணப்படுமாயின், சிறுநீரைச் சோதிக்க வேண்டும். சலப்பரிசோதனையில் உடனடியாகக் கிடைக்கக்கூடிய முடிவிலிருந்து சிறுநீர்த் தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதான என அறியமுடியும். எனினும் அது எவ்வகையான கிருமியால் ஏற்பட்டது என அறிய சிறுநீர் மாதிரியை ஒரு வகையான ஊடகத்தில் இட்டு கிருமி வளர்கின்றதா? அது என்ன கிருமி? எவ்வகையான அன்ரிபயோற்றிக் (antibiotic)மருந்துகள் அதை அழிக்கும்? போன்ற விடயங்கள் அறியமுடியும் ஆனால் அச்சோதனையின் முடிவு தெரிய சில நாள்கள் எடுக்கும். எனினும் மருத்துவர்கள் பிள்ளைகளுக்கு சிறுநீர்த் தொகுதி கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது எனத் தீர்மானிக்கும் போது சிறுநீர் மாதிரியை பரிசோதனைகளுக்கு கொடுத்த பின்னர் உடனடியாகவே அன்ரிபயோறிக் மருந்துகளை வழங்குவர். பரிசோதனை முடிவின் பின்னர் தேவையுற்படின் மேலதிக சிகிச்சை வழங்கப்படலாம்.
சலத்திலுள்ள கிருமியை வளர்த்துப் பார்க்கும் சோதனைக்கு சலம் எடுக்கும் போது மிக அவதானத்துடன் சலவாசலை அண்மித்த பகுதிகளிலுள்ள கிருமிகள் அல்லது எமது கைகளிலுள்ள கிருமிகள் சலமாதிரியை எடுக்கும் கிருமி அழிக்கப்பட்ட (sterile) போத்தலில் செல்லா வண்ணம் கைகளையும், சலவாசல் பகுதியையும் நன்றாகக் கழுவி அந்தப் போத்தலில் நேரடியாக எடுத்து உடனடியாக பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும். அதற்கான சரியான முறைகள் பற்றி வைத்தியசாலையில் சொல்லித் தரப்படவேண்டும். ஏதாவது சந்தேகம் ஏற்படின் வைத்தியரிடமோ, தாதியரிடமோ கேட்டறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சரியா முறைப்படி பெற்ற சிறுநீர் மாதிரியின் முடிவைப் பொறுத்தே தகுந்த சிகிச்சைகளை வழங்க முடியும்.
குழந்தைகளுக்கு சிறுநீர்த் தொகுதி தொற்று ஏற்பட்டால் என்ன வகையான சிகிச்சை வழங்கப்படும்?
பிள்ளைகளுக்குத் தகுந்த சிகிச்சையை உடனடியாக வழங்கவேண்டும். ஏனேனில் வளர்ந்து வரும் சிறுநீரகங்களைக் கிருமிகள் தாக்கினால் பிற்காலத்தில் சிறுநீரகத் தொழிற்பாடு பாதிக்கப்பட உயர் குருதி அமுக்கம் போன்ற விளைவுகள் ஏற்படலாம். எனவே சலத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது எனச்சந்தேகித்தால். தொப்புளைச் சுற்றி எண்ணை தடவுதல் போன்ற கை வைத்தியங்களைச் செய்யாது தகுந்த சிகிச்சைகளைப் பெறவேண்டும். பொதுவாக சிறுநீர்த் தொகுதி தொற்று ஏற்பட்டால்குழந்தைகளின் வயதுக்கேற்பவும் கிருமித் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்தும், என்ன கிருமி தொற்றியது என்பதையும் பொறுத்து தகுந்த அன்ரிபயோறிக் மருந்துகளின் பின்னர் மேலதிக பரிசோதனைகளான ஸ்கான் ( US Scan) சோதனை, சில சமயங்களில் சலவாசலினூடாக மருந்தேற்றி X கதிர் பரிசோதனை மற்றும் கதிரியக்க மருந்தேற்றிச் செய்யும் ஸ்கான் பரிசோதனை என்பன குறிப்பிட்ட காலங்களில் செய்யப்படலாம்.
அதைவிட ஒரு குழந்தைக்கு, சிறுநீர்த் தொகுதி கிருமித் தொற்று மீண்டும் ஏற்படாமல் இருக்க சில சந்தர்ப்பங்களில், அன்ரிபயோற்றிக் மருந்தைக் குறிப்பிட்ட சில காலத்துக்கு ஒவ்வொரு இரவும் குழந்தைக்கு கொடுக்கவேண்டி வரலாம்.
சிறுநீர்த் தொகுதி சிருமித் தொற்று ஏற்படாமல் எவ்வாறு தவிர்க்கலாம்?
முன்னர் கூறிய சிறுநீர்த் தொகுதி கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகளைத் தவிர்ப்பதன் மூலமும் சிறுநீர்த் தொகுதியிலுள்ள குறைபாடுகளுக்குத் தகுந்த சிகிச்சைகளை வழங்குவதன் மூலமும் சில சமயங்களில் மீண்டும் சிறுநீர்த் தொகுதி கிருமித் தொற்று வராமலிருக்கு ஒவ்வொரு இரவும் அன்ரிபயோற்றிக் மருந்தை குழந்தைக்கு வழங்குவதன் மூலமும் இவ்வகையான தொற்றுக்களைத் தவிர்க்கலாம்.
எனவே மேலே குறிப்பிட்ட விடயங்களிலிருந்து குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடிய சிறுநீர்த் தொகுதி கிருமித் தொற்று எவ்வளவு முக்கியமான பிரச்சினை என அறிவதுடன், அதற்கான தகுந்த சிகிச்சையைக் குறித்த காலத்தில் வழங்க வேண்டிய தன் அவசியத்தையும் நாம் உணரலாம்.
மருத்துவர் ந.ஸ்ரீசரபவணபவானந்தன்
குழந்தை நல வைத்திய நிபுணர்.
யாழ்.போதனா வைத்தியசாலை.