ஆட்டிசம் என்பது மூளையில் ஏற்படும் சில மாற்றங்களால் செயற்பாட்டுவிருத்தியில் ஏற்படும் ஒரு பின்னடைவு ஆகும். உலகளாவிய ரீதியில் இந்த நோய் நூறு பிள்ளைகளுக்கு ஒரு பிள்ளைக்கு ஏற்படுகிறது. இலங்கையிலும் இந்த நோய் அதே அளவில் காணப்படுகின்றது. பெண் பிள்ளைகளைவிட ஆண் பிள்ளைகளில் இந்த நோய் கூடுதலாக காணப்படுகின்றது. இந்த நோயின் அறிகுறிகள் குழந்தைக்கு குழந்தை வேறுபடுகின்றது. சில குழந்தைகள் சாதாரணமாக பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். அதே போல் சில பிள்ளைகளுக்கு விசேட கல்வி மற்றும் அன்றாட செயற்பாடுகளுக்கு பிறரில் தங்கியிருக்க வேண்டி இருக்கின்றது.
ஆரம்ப காலத்தில் கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த நோய் பிறப்பிலிருந்து இருப்பினும் முதல் ஆறு மாத காலத்துக்கு கண்டறிவது கடினம். 12 – 18 மாத கால அளவில் இந்த நோயின் குணங்குறிகள் வெளியே தெரிய வரலாம். சாதாரணமாக ஒரு குழந்தை இந்த வயதில் கூட்டிக்காட்டவும், பெற்றோர் சுட்டிக்காட்டும்போது அதை பார்க்கும் ஒருங்கிணைந்து செய்யும் ஆற்றலைப் பெறுகிறது. 18 மாத அளவில் இது செய்யாவிடின் ஆட்டிசம் நோய் இருக்கலாம் என்பதால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இந்தநோயின் மற்றுமொரு முக்கிய அறிகுறி பேச்சுத் திறனில் பின்னடைவு ஏற்படுதல், தானாக பேசும் ஆற்றல், முகத்தைப் பார்த்துப் பேசுதல் போன்றவற்றில் பின்னடைவு ஏற்படலாம். அனேகமான பிள்ளைகள் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே கூறுபவர்களாக இருப்பர். ஆரோக்கியமான உரையாடல் ஒன்று மேற்கொள்வது இவர்களுக்கு மிகக் கடினம்.
சிறு பிராயத்தில் விளையாட்டு என்பது ஒரு குழந்தையின் விருத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரணமான குழந்தைகள் தானாக கற்பனை செய்து விளையாடுவார்கள். ஆட்டிசம் உள்ள குழந்தைகள் விளையாட்டில் பின்னடைவு உள்ளவர்கள். இவர்கள் அதே வயதுடைய மற்றைய பிள்ளைகள் சகோதரர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள். பொருள்களை உயரத்துக்கு ஏற்றவாறு அடுக்குதல், ஒரு விளையாட்டுப் பொருளை முழுமையாக விளையாடுவதை விட அதன் ஒரு பகுதியுடன் விளையாடுதல் போன்ற அசாதாரண செய்கைகளைச் செய்வார்கள்.
பிள்ளைகள் ஒன்று கூடி வியைாடும் இடத்தில் தனிமையயை விரும்புவார்கள். சுற்றுச் சூழலை புறக்கணிப்பவர்கள் போல் காணப்படுவர். இதை மீறி இவர்களை வற்புறுத்தினால் கோபம் ஏற்பட்டு நிலத்தில் விழுந்து அழுது அடம் பிடிப்பார்கள்.
சமூக ஈடுபாட்டிலும் அதன் விருத்தியிலும் பின்னடைவுகளைக் காணலாம். பெயர் கூறும் போது அதை நிராகரித்தல் , முகம் பார்த்து சிரிப்பதில் விருப்பமின்மை என்பன சில ஆரம்ப கால அறிகுறிகள். இதை விட புதிய அனுபவங்களை விரும்பாதிருத்தல், பெற்றோரின் அரவணைப்பை நிராகரித்தல், சில வகையான ஒலியை சகிக்கமுடியாதிருத்தல், ஆபத்தை உணராதிருத்தல், உயரம் மற்றும் ஆழம் போன்றவற்றுக்கு பயமின்மை போன்றன இருப்பின் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும், உடை, உணவு, தின சரி செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படின் கோபம் ஏற்படுவதன் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தல் முக்கிய அறிகுறியாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில பிள்ளைகள் தங்களைக் கடித்தல், தலையை தரையில் அடித்தல் போன்ற தன்னைத்தானே காயப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள்.
ஆட்டிசம் உள்ள சிறுவர்களில் 10 வீதமானவர்கள் உன்னதமான செயல்கள், கண்டுபிடிப்புக்கள் செய்பவர்கள், விஞ்ஞானிகள் இசை மேதைகளாக இருக்க வாய்ப்பு உண்டு. அல்பேட் ஜன்ஸ்டைன், பில் கேட்ஸ் போன்றவர்கள் இவ்வாறான நோய் உள்ளவர்கள்.
ஆட்டிசம் உள்ள பிள்ளைகளை ஆரம்பகாலத்தில் அடையாளம் கண்டபின்னர் அதற்குரிய செய்முறை பயிற்சிகள் வழங்கப்படும். கடந்த ஒரு வருட காலமாக இவ்வாறான சிகிச்சை முறை நமது பிரதேசத்திலும் நடைபெற்று வருகின்றது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்க இந்த நோய் பற்றி ஒரு சங்கடமும் பயமும் ஏற்படுகின்றது. ஆனால் இதை கட்டுப்படுத்தி சாதாரண விருத்தியுள்ள பிள்ளையாக மாற்ற முடியும். இதற்கு உக்கிரமான செயற்பாட்டு பயிற்சிகள் ( Behaviour therapy) கொடுக்க வேண்டும்.
இவ்வாறான குழந்தைகள் தங்களுக்கென்ற உலகில் இருப்பதால் பெற்றோர்கள் அதை உணர்ந்து படிப்படியாக அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும். இதற்கு உதவி செய்ய தேர்ச்சி பெற்ற செய்முறை பயிற்சியாளர்கள் உள்ளனர். விசேட தேவை ஆசிரியர்கள் இவ்வாறான குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த உத்திகளைக் கையாளுவார்கள்.
சமூதாயத்தில் நிலவும் மூடநம்பிக்கைகள், உற்றார், உறவினர்களின் பேச்சுகள் போன்றவற்றை தவிர்த்து ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆட்டிசம் நோயை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது நமது கடமையாகும்.
டாக்கடர் திருமதி. கீதாஞ்சலி சத்தியதாஸ்
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை