நீரிழிவுள்ள தாய்மார்களுக்கு சில தகவல்கள்
- வகை I, II நீரிழிவு, நீரிழிவுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்க விருப்பம் இருப்பின், ஆரோக்கியமான குழந்தை பெறுவது உங்கள் இலட்சியமாக இருக்கவேண்டும். எனவே கர்ப்பம்தரிக்க முன்பு தாய்மார்கள், உயர் இரத்த அழுத்தம், இருதயநோய், சிறுநீரக கோளாறு நரம்புக் கோளாறு மற்றும் கண்களில் ஏதாவது பிரச்சினை இருப்பின் அவற்றுக்குரிய சிகிச்சைகளை கர்ப்பம் தரிக்க முன்பே எடுத்தல் நல்லது.
- நல்ல பழக்கங்கள், ஆரோக்கிய உணவுகள், கருத்தரிக்கும் முன்பும், பின்பும், பின்பும் தாயின் குருதியில் வெல்ல மட்டத்தை கட்டுப்பாடான ஆரோக்கிய நிலையில் வைத்திருப்பது மிக அவசியமானது. இது கருத்தரிக்கும் கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல ஆரம்பத்தைக் கொடுக்கிறது.
- பிரசவத்தின் பின் இந்த நீரிழிவுநோய் பலருக்கு காணமற்போய் விடுவதுண்டு. சிலருக்கு தொடரும் வாய்ப்புண்டு. பிரசவத்தின் பின் நடத்திய குருதிப் பரிசோதனை முடிவுகள் சாதாரண நிலையில் இருந்து சற்று அதிகரித்துக் காணப்படினும் தற்போது உங்களுக்கு நீரிழிவு இல்லாது இருப்பினும் அடுத்த சில வருடங்களில் நீங்கள் நிரந்தரமான நீரிழிவு நோயாளியாக மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது. எனவே பிரசவ காலத்தில் நீரிழிவு நோய் கண்ட பெண்கள் தொடர்ந்தும் உடயற்பயிற்சி, அளவோடு உடல் எடையை பேணல், உணவுக்கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவுகளை எடுத்தல் சிறப்பானது. இடையிடையே ( 3 – 6) மாதங்களுக்கு ஒரு தடவை குருதிப் பரிசோதனை செய்து உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்தல் வேண்டும்.
- நீரிழிவுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் நீரிழிவைக் கட்டுப் படுத்தாவிட்டால், தாயின் குருதியில் உள்ள மேலதிகமான உபரிகுளுக்கோஸ் கருவில் உள்ள குழந்தையை வந்து அடைகின்றது. இதனால் குழந்தை பெரிதாகி பிரசவத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. அத்துடன் கட்டுப்பாடில்லாத நீரிழிவால் தாய்க்கு உயர் குருதி அமுக்கம், சிறுநீர் வழித் தொற்று போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுத்துகிறது.
- வெறும் வயிற்றோடு நீரிழிவுள்ள கர்ப்பிணிப் பெண்கள் தூங்க வேண்டாம். உணவு வேளைகளில் கட்டாயம் தவறாது சாப்பிட வேண்டும். இன்சுலின் போடும் திட்டத்தை வைத்தியர் பரிந்துரை செய்வாராக இருந்தால் அத்திட்டத்துக்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். குருதியில் வெல்ல மட்டம் குறையும்போது அல்லது கூடும்போது செய்ய வேண்டிய முதலுதவிகளை உங்கள் நண்பர்கள், உறவுகள், கணவன், ஏனைய பிள்ளைகள் போன்றோருக்கு அறிவுறுத்தி வைத்திருத்தல் வேண்டும். கொஞ்ச தின்பண்டங்கள் உங்கள் கைவசம் எப்போதும் இருத்தல் வேண்டும்.
எஸ்.சுதாகரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
Posted in சிந்தனைக்கு