பாரிசவாதம் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாக கருதப்படுவது ஏன்?
பாரிசவாதம் என்பது ஒரு அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாகும். உங்களிற்கு அல்லது உங்களிற்கு தெரிந்தவர்களுக்கு பாரிசவாதத்திற்கான குணங்குறிகள் ஏற்படின் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரவும். உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரவும். மூளைக்கான குருதியை விநியோகிக்கின்ற இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் அதனால் பாரிசவாதத்திற்கு ஆளாகியிருந்தால் இரத்தக்கட்டியை உடனடியாக கரைப்பதற்கு விசேட மருந்து தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் கிடைக்கப்பெறுகின்றது. இந்த மருந்தானது பாரிசவாதத்திற்கான குணங்குறிகள் ஏற்ப்பட்டு நாலரை மணித்தியாலத்திற்குள் வழங்கப்படல் வேண்டும். இம்மருந்தினை வழங்குவதற்குதற்கு முன்னர் மூளையானது ஸ்கான் (CT Scan) செய்யப்படல் வேண்டும். எனவே இம்மருந்தானது CT ஸ்கான் வசதியுள்ள யாழ் போதனா வைத்தியசாலையில் வழங்கப்படுகின்றது.
எனவே ஒருவருக்கு பாரிசவாத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தாமதமின்றி யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்லவும் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்லவும்.
பாரிசவாத நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு முதல் 3 மணித்தியாலங்களிற்குள் யாழ் போதனா வைத்தியசாலையை வந்தடைந்தால் மாத்திரமே இவ்விசேட மருந்தினை ஏனைய தேவையான சோதனைகள் மேற்கொண்ட பின்னர் நான்கரைமணித்தியாலத்திற்குள் வழங்கப்படக் கூடியதாக இருக்கும்.
பாரிசவாத்தின் அறிகுறிகள், உண்டாவதற்கான காரணிகள் மற்றும் சிகிச்சை முறைகள்
பாரிசவாம் என்பது என்ன? (Stroke)
மூளைக்கான இரத்தத்தையும் ஒட்சிசனையும் வழங்குகின்ற இரத்தக்குழாயில் அடைப்பு அல்லது வெடிப்பு ஏற்படுவதனால் பாரிசவாதம் ஏற்படுகின்றது. மூளைக்கலங்களிற்கான ஒட்சிசன் விநியோகம் இரத்த ஒட்டம் தடைப்படுகின்றது. இதனால் கலங்களிற்கு தேவையான ஒட்சிசன் குறைவடைந்து மூளைக்கலங்கள் தொழிற்பாட்டை இழந்து சில நிமிடங்களில் இறந்து விடுகின்றன. இதன் விளைவால் அந்தப் பகுதி மூளைக்கலங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற உடலின் பகுதி செயற்பாட்டை இழக்கின்றது.
பாரிசவாதம் ஏற்படின் என்ன செய்யலாம்?
பாரிசவாதம் என்பது பெரிதும் தடுக்கப்படக்கூடிய நோயாகும். இது ஏற்படுவதை பின்வரும் முறைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் குறைக்கலாம்.
1. உயர் குருதி அமுக்கத்தை கட்டுப்படுத்தல்
2. புகைப்பிடித்தலை நிறுத்துதல்
3. குறைந்த கொழுப்பு உணவை உண்ணுதல்
4. சலரோகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
5. மதுபானம் அருந்துவதை குறைத்தல் அல்லது நிறுத்துதல்
பாரிசவாதத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்கு, மருத்துவத்தில் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுள் மிகச்சிறந்த முறையாக இரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து (Clot dissolving tissue plasminogen activator) கருதப்படுகின்றன. இம் மருந்தானது பாரிசவாதம் விரிவடைவதை தடுப்பதுடன் அதனால் ஏற்படும் உடல் செயலிழப்பையும் குறைக்கின்றது. இம் மருந்து பாரிசவாத்திற்கான அறிகுறிகள் ஏற்பட்டு நான்கரை மணித்தியாலத்தினுள் கொடுக்கப்படுகின்றது. இது இரத்தக்குழாய் அடைப்பினால் ஏற்படும் பாரிசவாதத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.
பாரிசவாதம் ஏற்படுவதற்கு முன்னர் தோன்றும் அறிகுறிகள்
சில சமயங்களில் பாரிசவாதத்தின் குணங்குறிகள் ஏற்பட்ட உடன் மறையலாம் அல்லது குறையலாம் இவ்வாறு ஏற்படின் அதனை உதாசீனப்படுத்தாது உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.
பாரிசவாதத்தின் அறிகுறிகள்
- உடம்பின் ஒரு பகுதியில் திடீரென ஏற்படுகின்ற விறைப்பு அல்லது பலவீனம் – ( குறிப்பாக உடலில் ஒருபக்க முகம், கை, கால்)
- திடீரென கதைக்க இயலாமை அல்லது பிறர் கதைப்பதை விளங்குவதில் சிரமம் அல்லது மாறாட்டம்.
- திடீரென ஏற்படும் பார்வைக் குறைவு ( ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண்ணிலும்)
- திடீரென உண்டாகின்ற தலைச்சுற்று, நடப்பதில் சிரமம், தடுமாற்றம்
- திடீரென ஏற்படுகின்ற தலைவலி
மேற்குறிப்பிட்டவற்றுள் ஏதாவது அறிகுறிகள் தென்படின் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லவும் அல்லது அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வெளிறோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதை தவிர்த்து நேரடியாக அம்புலன்ஸ் மூலம் யாழ் போதனா வைத்தியசாலையை சென்றடையும்
இரத்தக்குழாய் வெடிப்பினால் ஏற்படுகின்ற பாரிசவாதம்
15 வீதமான பாரிசவாதமானது இரத்தக்குழாய் வெடிப்பினால் ஏற்படுகின்றது. இரத்தக்குழாய் வெடிப்பினால், இரத்தம் குருதிக் கலன்களில் இருந்து வெளியேறி மூளைக் கலங்களிற்கிடையில் சேர்கின்றது. இது மூளைக்கு நச்சுப் பொருளாக அமைவதால் அப்பகுதியில் உள்ள மூளைக்கலங்கள் இறக்கின்றன.
இரத்தப் பெருக்கினால் ஏற்படும் பாரிசவாதத்தை இரண்டு வகைப்படுத்தலாம்.
1. மூளையினுள் ஏற்படும் இரத்தக்கசிவு
2. மூளையை சுற்றியுள்ள மென்சவ்வுகளிற்கிடையில் ஏற்படும் இரத்தக்கசிவு
மூளையினுள் குருதிக்கசிவு ஏற்படுவதால் ஏற்படுகின்ற பாரிசவாம்
இதுவே பொதுவாக உண்டாகின்ற இரத்தக்கசிவினால் ஏற்படும் பாரிசவாதமாகும்.
இது மூளைக்கலங்களிற்கிடையில் குருதிக்கசிவு ஏற்படுவதால் / இரத்தக்குழாய் வெடிப்பதால் ஏற்படுகின்றது. சில வேளைகளில் இவை இரத்தக்குழாய்களின் உருவமைப்பிலோ / ஆக்கத்திலோ ஏற்படுகின்ற மாற்றத்தினால் ஏற்படலாம்.
மூளையை சுற்றியுள்ள மென்சவ்வுகளிற்கிடையில் ஏற்படும் இரத்தக் கசிவு
இது மூளையின் மேற்பரப்பில் உள்ள இரத்தக்குழாயயில் ஏற்படும் வீக்கம் உடைந்து ஏற்படும் இரத்தக்கசிவினால் ஏற்படுகின்றது. இது பெரும் பாலும் உயர்குருதி அமுக்கத்தினால் ஏற்படுகின்றது.
ஏனைய காரணங்கள்.
- சிகரட் புகைத்தல்
- கருத்தடை மாத்திரை ( ஈஸ்ரோஜன் ஓமோனை கூடுதலாக கொண்டுள்ளவை) பாவனை
- அதிகமான மதுபாவனை
- சட்டவிரோதமான மருந்துகளின் பயன்பாடு
இரத்தக்கசிவினால் ஏற்படும் பாரிசவாத்தை கண்டறிவது எப்படி?
ஒருவருக்கு பாரிசவாதத்தின் குணங்குறிகள் காணப்படின் வைத்தியர் பின்வருவனவற்றை கவனமாக மேற்கொள்ளுவதன் மூலம் கண்டறியலாம்.
- நோய் பற்றிய சரியான விடயம்
- தேவையான உடல், நரம்பு சம்பந்தமான பரிசோதனைகள்
- இரத்தச் சோதனைகள்
- CT ஸ்கான்
இரத்தகக்கசிவினால் ஏற்படும் பாரிசவாதத்திற்கான சிகிச்சை முறைகள்
இதற்கான சிகிச்சை முறையானது உடனடியாக வழங்கப்படல் வேண்டும். உயர் குருதி அமுக்கம் காணப்படின் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரல் வேண்டும். இரத்தக்கசிவினால் மூளை வீக்கமடைந்திருப்பின், அதனை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை வழங்கப்படல் வேண்டும். சில சமயங்களில், மூளையில் சத்திரசிகிச்சையும் செய்ய வேண்டி ஏற்படலாம்.
இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பினால் உண்டாகின்ற பாரிசவாதம்
85வீதமான பாரிசவாதமானது இவ்வாறான முறையில் ஏற்படுகின்றது. மூளைக்கு குருதி விநியோகிக்கின்ற இரத்தக்குழாய் சுருங்குவதால் / இரத்தக்குழாய்களில் ஏற்படுகின்ற கொழுப்பு படிவினால் மூளைக்கான குருதி அமுக்கம் இதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.
இரத்தக்குழாய் அடைப்பினால் ஏற்படுகின்ற பாரிசவாத்தின் வகை
- மூளைக்கு குருதியை விநியோகிக்கின்ற இரத்தக் குழாய்களில் ஏற்படுகின்ற குருதிக் கட்டிகளினால் ஏற்படுகின்ற பாரிசவாதம் ( Thrombotic Stroke )
- இரத்தக்கட்டிகள் உடலின் வெவ்வேறு பகுதிகளில் உருவாகி இரத்தோட்டத்துடன் மூளையை அடைந்து, மூளைக்கான குருதி விநியோகத்தை தடைசெய்வதனால் ஏற்படுகின்ற பாரிசவாதம். (Embolic stroke)
- இதயத்தின் குருதியை உடற் பகுதிகளிற்கு விநியோகிக்கின்ற தொழிற்பாடு குறைவதால், மூளைக்கான குருதி விநியோகம் குறைவடைந்து ஏற்படுகின்ற பாரிசவாதம் ( Systemic hypoperfusion). இது பெரும்பாலும் மாரடைப்பின் ( Heart attack) பின்னர் உண்டாகின்றது.
இரத்தக்குழாய் அடைப்பினால் ஏற்படுகின்ற பாரிச வாதத்தினை கண்டறிதல் எப்படி?
பாரிசவாதத்திற்கான அறிகுறிகள் காணப்படின், வைத்தியர் பின்வருவனவற்றை கவனமாக மேற்கொள்வதன் மூலம் கண்டறியலாம்.
- நோய்பற்றிய சுய விபரம்.
- தேவையான உடல், நரம்பு சம்பந்தமான பரிசோதனைகள்
- இரத்த சோதனை
- CT ஸ்கான்
இரத்தக்குழாய் அடைப்பினால் ஏற்படுகின்ற பாரிச வாதத்திற்கான சிகிச்சை முறை
இவ்வகையான பாரிசவாதத்திற்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்படல் வேண்டும். இதன் மூலம் மூளையில் பாதிக்கப்படுகின்ற பகுதியின் அளவினை குறைக்கலாம். உலகலாவிய ரீதியில் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட மருந்தானது (TPA) இரத்தக்கட்டியை கரைப்பதற்கு உதவுகின்றது. இம் மருந்தானது பாரிசவாதத்திற்கான குணங்குறிகள் ஏற்பட்டு நான்கரை மணித்தியாலங்களிற்குள் ஊசிமூலம் வழங்கப்படல் வேண்டும். மேலும் பாரிசவாதத்தினால் மூளையின் பகுதி வீக்கமடைந்திருப்பின் அதற்கான சிகிச்சையும் வழங்கப்படல் வேண்டும்.
இரத்தக்குழாய் அடைப்பினால் ஏற்படும் பாரிசவாதத்தினை தடுப்பதற்கான வழிமுறைகள்
ஒருவருக்கு ஒருமுறை பாரிசவாதத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பத்தில் மீண்டும் பாரிசவாதத்தினால் பாதிக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் உண்டு. இதனால் பாரிசவதத்திற்கான அபாயகாரணியை கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகள் வழங்கப்படல் வேண்டும்.
உதாரணமாக.
- குருதி கட்டிபடுவதனை குறைத்தல். இதற்கு Asprin ( அஸ்பிரின்) Clopidogrel போன்ற மருந்துகள் பயன்படுகின்றது.
- உயர் குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை பயன்படுத்தல்.
- குருதியில் உள்ள கொலஸ்ரோலின் அளவை குறைப்பதற்கான மருந்துகளை பயன்படுத்தல், இவை குருதிக் குழாய்களில் ஏற்படுகின்ற பாதிப்பினையும் குறைக்கின்றது.
- இதயத்துடிப்பு ஒழுங்கற்றதாக காணப்படின் அதனை சீர் செய்வதற்கான மருந்துகளை பயன்படுத்தல்.
பாரிசவாதம் ஏற்படுவதற்கான அபாயகாரணிகள்.
சில அபாயகாரணிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் / அவற்றை மாற்றி அமைக்கலாம்.
உதாரணமாக
- உயர் குருதி அமுக்கம் ( High blood pressure)
இது முக்கிய அபாயகாரணியாகும். குருதி அமுக்கமானது வருத்தில் குறைந்தது இரண்டு தடவையாவது அளக்கப்படல் வேண்டும். குருதி அமுக்கமானது 140/90 mm Hg அதற்கு மேலதிகமாக காணப்படின் அதனைக் குறைப்பதற்கான சிகிச்சை முறையினை பயன்படுத்த வேண்டும். - புகைப்பிடித்தல்
புகையிலையில் உள்ள பதார்த்தங்கள், குருதிக்குழாய்களை சேதமாக்கின்றன. எனவே புகைப்பிடித்தலை நிறுத்துதல் வேண்டும். - சலரோகம்
சலரோகமானது மூளைக்கான குருதியை வழங்குகிற குருதிக்கலன்களில் பாதிப்பை ஏற்படுத்தி, பாரிசவாதத்திற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றது. எனவே குருதிக்குளுக்கோசின் அளவை குறைப்பதற்கான மருந்துகளை ஒழுங்காக பயன்படுத்தி, குளுக்கோசின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் வேண்டும். - குருதி கொலஸ்ரோலின் அளவு
இதன் அளவு அதிகமாக குருதியில் காணப்படின், குருதிக்கலன்களில் அடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது. - Carotid ( கழுத்தில் உள்ள குருதிக்குழாய்) மற்றும் ஏனைய குருதிக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பு.
- உடற்பயிற்சி இன்மையும் / அதிக உடற்பருமனும் இது இருதய நோய்க்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது.
- Transient ischemic attack ( குறுகிய நேரத்திற்கு காணப்படும் பாரிசவாதத்திற்கான அறிகுறிகள்)
இது பாரிசவாதம் ஏற்படுவதற்கான அபாய அறிகுறியாகும், இவ்வாறான அறிகுறி காணப்படும் 24 – 48 மணித்தியாலத்துக்குள் பாரிசவாதம் ஏற்படுவதற்கான சந்தற்பம் உண்டு. எனவே உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.
- ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வீதம் மற்றும் ஏனைய இருதய நோய்கள்
- மிதமிஞ்சிய மதுபான பாவனை
- சட்டவிரோதமான மருந்துகளின் பாவனை
மாற்றி அமைக்கமுடியாத ( Non modifiable factor) அபாய காரணிகள்
- வயதாதல்
- ஆண்களிற்கு பாரிசவாதம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் பெண்களை விட அதிகம்
- நெருங்கிய உறவினர்கள் ஏற்கனவே பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டிருத்தல்
பாரிசவாதம் ஏற்படுவதை குறைப்பதற்கு வாழ்கைமுறையில் கடைப்பிடிக்க வேண்டியவை.
- புகைப்பிடித்தலை நிறுத்துதல்
- உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றுதல் கொழுப்பு, மற்றும் சீனியின் அளவினை குறைத்தல்.
- கொழுப்பு நிறைந்த மாமிசம், பட்டர், போன்றவற்றை தவிர்த்தல்
- உணவுப் பொருட்களை பொரிப்பதற்கு பதிலாக அவற்றினை முடிந்தளவு அவித்து உட்கொள்ளல்
- பழங்கள், மரக்கறிகள் என்பவற்றை உட்கொள்ளல் உடற்பயிற்சியில் ஈடுபடல்
- குறைந்தது 30 நிமிடத்திற்கு கிழமையில் 5 தடவைகள் ஈடுபடுதல்
- வைத்தியரினால் வழங்கப்படுகின்ற மருந்துகளை ஒழுங்கான முறையில் பயன்படுத்துதல்
- குருதி அமுக்கத்தின் அளவை கிரமமாக பரிசோதித்தல்
- உடல் நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
- கிரமமாக வைத்திய சோதனைகளை மேற்கொள்ளல்
நரம்பியல் பரிவு – B
யாழ் போதனா வைத்திய சாலை
தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்
021 222 2302
021 222 2303
e-mail :- unitb.neurojaffna@gmail.com