இரத்த தானம் தெரியும் அதென்ன குருதிச் சிறு தட்டு பரித்தியாகம்?
இதுவும் இரத்த தானம் போன்றதே ஆனால் அதினிலும் விசேடமானது. இதைப்பற்றி நாம் இப்போது அறிந்து கொள்வோம்.
முதலில் “குருதிச் சிறு தட்டு” என்றால் என்னவென்று அறிவோம் குருதிச் சிறு தட்டு என்பது இரத்தத்தில் உள்ள ஒரு பகுதி அல்லது கூறு எனலாம். இரத்த பெருக்கு ஏற்படாமல் இருக்க உதவிபுரிகின்றது. அதாவது ஒரு காயம் ஏற்பட்டால் அதனை இந்த குருதிச் சிறு தட்டுகளின் உதவியுடன் எமது ஒடல் இரத்த பெருக்கு ஏற்படாத வண்ணம் கையாளும். ஆகவே இதன் முக்கியம் இப்போது நன்கு விளங்கும்.
இரத்த தானம் செய்வது போன்றே இந்த குருதிச் சிறு தட்டுகளையும் தனியாக தாகம் செய்யலாம். இவ்வாறு குருதிச் சிறு தட்டுகளை தனியாக பிரித்து எடுக்கும் பொறிமுறை தான் குருதிச் சிறு தட்டு தானம் ( பரித்தியாகம்) Platelet Apheresis எனப்படும்.
பல்வேறு நோய் நிலைமைகளில் எமக்கு இந்த குருதிச் சிறு தட்டு குறைவடைகின்றது. முக்கியமாக டெங்கு மற்றும் செப்றிசீமியா, புற்றுநோய் போன்ற நோய்களை குறிப்பிடலாம். இவ்வாறு இருதிச் சிறு தட்டுக்கு தனியாக தேவைகள் அதிகரித்தால் மருத்துவர்கள் இரத்த தனம் செய்வோரிடமிருந்து மேற்படி குருதிச் சிறு தட்டு தானத்தினை (பரித்தியாகம்) நிகழ்த்துகிறார்கள்.
இவ்வகையான விசேட செயல்முறைகள் இலங்கையின் அனைத்து பிராந்திய இரத்த வங்கிகளிலும் நடைபெறுகிறது.
இவ்வாறு இரத்தத்தின் கூறு ஒன்றை தனியாக பிரித்து எடுக்கும் பரித்தியாகம் (Apheresis) வேலையை செய்ய விசேடமான மருத்துவ இயந்திரம் மற்றும் இணைப்புகள் (Kits) உள்ளன. இதற்கான இணைப்புகள் அதன் இயந்திரத்துடன் பொருத்தப்படுகிறது. அவ்விணைப்பினை மறு முனையிலுள்ள ஊசியானது குருதி வழங்குனரின் நாளங்களில் செலுத்தப்பட்டு இணைக்கப்படுகிறது. செயற்பாடு ஆரம்பிக்கப்படும் போது குருதி வழங்குனரிடம் இருந்து முதலில் இணைப்பத் தொகுதியில் உள்ள மையநீக்கி (Centrifuge) எனப்படும் பாகத்தினுள் குருதி சேர்க்கப்பட்டு அதிலிருந்து குருதிச்சிறு தட்டு தனியாக அதற்கென உள்ள பையினுள் சேகரிக்கப்படும். இவ்வாறு குருதிச்சிறு தட்டு பிரிந்தபின் எஞ்சியுள்ள குருதி மீண்டும் குருதி வழன்கியவருக்கே செலுத்தப்படும்.
இச்செயற்பாடானது ஒரு சுற்றுவட்டம் (Cycle) எனப்படும் இவ்வாறு பல சுற்று வட்டங்கள் நிகழ்த்தப்படலாம். எத்தனை சுற்று வட்டங்கள் என்பது எமக்கு தேவைப்படும் குருதிச்சிறு தட்டு அலகு எண்ணிக்கையான (Platelets Units) பொறுத்து வைத்தியர்களால் தீர்மானிக்கப்படும். இந்தக் கருவியுள் இணைந்துள்ள ஒரு கணினிப்பகுதி வைத்தியர்களுக்கு கணிப்புகளை செய்து தெரிவுகளை காண்பிக்கும்.
குருதிச்சிறு தட்டு சேகரிப்பு நிறைவடைந்ததும் இணைப்பு தொகுதி ஆனது கழற்றப்படும். குருதிச்சிறு தட்டு சேகரிக்கப்பட்ட பை தனியாக பிரிக்கப்படும். ஏன் இவ்வாறு இயந்திரத்தின் மூலம் குருதிச்சிறு தட்டுகள் தனியாக பரிக்கப்படவேண்டும் இதன் தேவை என்ன? என்று நீங்கள் வியக்கலாம்.
சில குறிப்பிட்ட நோய் நிலைமைகளில் இந்த குருதிச்சிறு தட்டுகளின் தேவை தனித்துவமானதாகவும் முக்கியமானதாகவுமுள்ளது. நல்ல உதாரணமாக நீங்கள் அனைவரும் அறிந்த டெங்கு காய்ச்சல் எடுத்துக்கொள்வோம். குருதிச்சிறு தட்டுக்கள் குறைவடைவதே இந்நோயின் ஆபத்தான நிலைக்கு காரணம். இதற்காக டெங்கு நோயாளருக்கு அதிகளவு குருதிச்சிறு தட்டுகள் ஏற்ற வேண்டும். சாதாரண இரத்த தானத்தின் போது பெறப்படும் குருதிச்சிறு தட்டுகள் அளவு ஒரு அலகு (one unit) வரை வழங்க முடியும். இதுவே இந்த குருதிச்சிறு தட்டு தானம் அல்லது பரித்தியாகம் ( platelet apheresis) செய்வதன் நன்மையான விடயம். எனினும் எத்தனை அலகுகள் எடுக்கலாம் என்பது குருதிச்சிறுதட்டு தானம் செய்ய வருபவரிடமுள்ள குருதிச்சிறு தட்டுகள் அளவை பொறுத்து தீர்மானிக்கப்படும்.
குருதிச்சிறு தட்டு வழங்க முன்னர் குருதிச்சிறு தட்டு தானம் செய்பவரின் இரத்த மாதிரி (blood sample) எடுக்கப்பட்டு குருதிக் கூறுகள் பரிசோதிக்கப்படும் அவரின் நிறை 50Kg இற்கு மேற்பட்டதாகவும், இரு தடவையாவது இரத்த தானம் செய்தவராகவும் இருக்க வேண்டும் 18 தொடக்கம் 60 வயது வரையானவர்கள் இதற்கு பொருத்தமானவர்கள்.
சாதாரண இரத்த தானம் செய்தபின் நான்கு மாதங்களின் பின்னர் தான் மீண்டும் இரத்த தானம் அல்லது குருதிச்சிறு தட்டு தானம் ( Platelet Apheresis) செய்யலாம். ஆனால் ஒருவர் குருதிச்சிறு தட்டு தானம் செய்து 2 வாரங்களின் பின் மீண்டும் சாதாரண இரத்த தானமோ அல்லது குருதிச்சிறு தட்டு தானமோ செய்யலாம்.
குருதிச்சிறு தட்டு தானம் அல்லது பரித்தியாகம் (Platelet apheresis) செய்தபின் எந்தவித விசேட கவனிப்புகளும் செய்ய வேண்டியதில்லை. சாதாரண இரத்த தானம் போன்ற நடந்து கொள்ளலாம்.
சாதாரண இரத்த தானம் செய்வதை விட குருதிச்சிறு தட்டுதானம் அல்லது பரித்தியாகம் செய்யும் போது ஒரு மணி நேரமாவது நீங்கள் அவ் இயந்திரத்துடன் இணைந்து இருக்க வேண்டும். எனவே உங்கள் நேரத்தையும் சற்று தியாகம் செய்ய வேண்டும்.
இதைப்பற்றிய மேலதிக தகவல்களையும் உங்கள் சந்தேகங்களையும் இலங்கையிலுள்ள எந்தவொரு இரத்த வங்கியிலும் அறிந்துகொள்ளலாம்
வடமாகாணத்தை பொறுத்தவரை யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் குருதிச் சிறுதட்டுதானம் செய்வதற்குரிய வசதி உள்ளது. யாழ் இரத்த வங்கியிலிருந்தே பருத்தித்துறை, தெல்லிப்பளை , கிளிநோச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற ஏனைய இடங்களிலுள்ள இரத்த வங்கிகளிற்கு தேவையான குரதிச் சிறுதட்டுகள் வழங்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் வவுனியாவிற்குரிய தேவை கூட யாழ் இரத்தவங்கியினால்தான் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.
இந்த வகையில் தெல்லிப்பளையில் 2014ம் ஆண்டு தை மாதம் புதிதாக புற்றுநோய் வைத்தியசாலை ஒன்று திறக்கப்பட்டு இயங்கி வருவது யாரும் அறிந்ததே. டெங்கு நோய்க்கு அடுத்தபடியாக அதிகம் குருதிச்சிறுதட்டு தேவைப்படுவோர் புற்றுநோயாளார்களாகும். அவர்களுக்கும் பொதுவாக ஒரு தடவையிலேயே நான்கு அல்லது ஆறு அலகுகள் குருதிச் சிறுதட்டுகள் ஏற்ற வேண்டியிருக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் குருதிச் சிறுதட்டு பரித்தியாகம் மூலம் ஒரே தடவையில் கூடுதலான அலகுகளை பெறுவதன் மூலம்தான் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யலாம். எனினும் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் இது பற்றிய விழிப்புணர்வு தற்போதுதான் மெல்ல மெல்ல பரவி வருவதால், எம்மால் தேவையானளவு குருதிச் சிறுதட்டுக்களை நோயாளர்களிற்கு வழங்குவதில் சிரமத்தினை எதிர்நோக்குகின்றோம்.
புள்ளி விபரம்
2014 | தேவைப்பட்ட குருதிச் சிறுதட்டுகளின் எண்ணிக்கை |
வழங்கப்பட்ட குருதிச்சிறுதட்டுகளின் எண்ணிக்கை |
தை | – | – |
மாசி | – | – |
பங்குனி | 32 | 25 |
சித்திரை | 25 | 18 |
வைகாசி | 58 | 53 |
ஆனி | 40 | 39 |
ஆடி | 35 | 30 |
ஆவணி | 85 | 77 |
புரட்டாதி | 82 | 69 |
ஐப்பசி | 64 | 56 |
கார்த்திகை | 52 | 41 |
மார்கழி | 82 | 75 |
எனவே இரத்த தானத்தினை போன்று குருதிச் சிறுதட்டு தானம் செய்வதற்கும் தன்னார்வக் குருதிக் கொடையாளர்கள் முன்வர வேண்டும். யாழ் இரத்த வங்கியில் குருதிச் சிறுதட்டு தானம் செய்ய விரும்புபவர்கள் பெயர் விபரத்தினை பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது அந்தந்த குருதி வகையுடையோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பதற்கு இது மிகவும் உதவியாக அமையும்.
இரத்த தானம் இலகுவானது, உன்னதமானது.
திருமதி. ஆர். சாந்தலோஜினி
தாதிய உத்தியோகத்தர்
இரத்த வங்கி
யாழ் போதனா வைத்தியசாலை.