இன்றைய நவீன வாழ்க்கை முறையின் விளைவால் உலகை ஸ்தபிக்க வைக்கும் முக்கியமானதொரு நோயாக பாரிசவாதம் காணப்படுகின்றது. மூளைக்கான குருதிக்கலங்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவோ கசிவு காரணமாகவோ மூளையின் நரம்புக்கலங்களுக்கான குருதிச் சுற்றோட்டம் தடைப்படுவதால் ஏற்படும் பாரதூரமான விளைவாக பாரிசவாதம் காணப்படுகிக்றது. தேவையானளவு ஒட்சிசன் மற்றும் சத்துக்கள் கிடைக்காத நரம்புக்கலங்கள் நிரந்தரதொழிற்பாட்டை இழந்து இறந்துவிடுவதனால், அந்தக் கலங்களால் கட்டுப்படுத்தப்படும் தொழிற்பாடுகளும் முற்றாக செயலிழந்துவிடுவதையே பாரிசவாதம் என்கின்றோம். இதன் விளைவாக உடற்தொழிற்பாடுகளில் முக்கியமான ஐந்து குழப்பங்கள் ஏற்படுகின்றது.
1. அசைவுகளை கட்டுப்படுத்துதல்.
2. உணர்ச்சியற்ற தன்மை.
3. மொழி பாவனை மற்றும் புரிந்துகொள்ளல்.
4. ஞாபகசக்தி மற்றும் கிரகித்தல்
5. உணர்வு ரிதியான பிரச்சினைகள்.
பாரிசவாதத்தால் பாதிக்கப்படவர்களில் மிகச்சிறியளவு தொகுதியினர் 24 மணித்தியாத்திற்குள் மரணத்தை தழுவும் போதும், பெரும்பான்மையானோர் ஏதேனும் உடலியக்க குறைபாடுடன் உயிர்தப்பி நீண்டநாட்கள் வாழ்க்கையை போராட்டத்தின் மத்தியில் கழிக்க வேண்டி நேரிடுகிறது.
இந்தப் போராட் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக.
- உடலினொரு அங்கமோ பாதி உடலோ உணர்வற்றிருத்தல்
- ஒரு அங்கமோ பாதி உடலோ ஒரு உடலோ முற்றாக செயலிழந்த தன்மை.
- உணவை விழுங்க முடியாமை
- உடலை சமனிலைப்படுத்தி வைக்கமுடியாமை
- கட்டுப்பாடற்ற சலம் மற்றும் மலம் கழித்தல்.
- பாதிக்கப்பட்ட அங்கங்களில் தொடர்ச்சியான நோவு ஒன்றை உணர்தல்
- சிந்தனையை சொற்கள் மூலம் வெளிப்படுத்த முடியாமை.
- பேசும் அல்லது எழுதும் மொழியை புரிந்துகொள்ளும் திறணை இழத்தல்.
- நுண்திறன் செயற்பாடுகளை இழத்தல்
- தூண்டுதல்களுக்கான செயற்பாட்டை வெளிப்படுத்த முடியாமை.
- பார்வைகுறைபாடு
- வலிப்பு
- களைப்புத்தன்மை
- நித்திரை சம்பந்தமான குழப்பங்கள்
- இவை அனைத்தாலும் ஏற்படும் விரக்தி, வாழ்க்கை பற்றிய பயம், மனஅழுத்தம்.
இவ்வாறான பலவகையான பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீளமுடியாதெனினும், வைத்தியத் துறையின் புதியதொரு பரிணாமமான மறுவாழ்க்கான செயற்திட்டங்கள் மூலம் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களி முழுமையான இன்னொரு உதவியை தங்கியிருக்காமல், தமது அடிப்படைத் தேவைகளை தாமாகவே பூர்த்திசெய்துகொள்ளும் அளவுக்கு பயிற்சியை உருவாக்கிக்கொள்ளலாம்.
பாரிசவாதத்திற்குப் பின்னான மறுவாழ்வு சிகிச்சை
பாதிப்பு ஏற்பட்டு அவசரசிகிச்சை பூர்த்தியடைந்தவுடன் ஆரம்பிக்கப்படுகிறது இது பாதிக்கப்பட்டவரின் நிலைக்கு ஏற்ப மாறுபடினும், தற்போதுள்ள நவீன சிகிச்சை முறைகளால் பாதிப்பு ஏற்பட்டு 24 – 48 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பிக்கக்கூடியதாக உள்ளது இந்த சிகிச்சையானது வைத்தியரின் ஆலோசனைக்கு இணைவாக, பொருத்தமான வாழ்க்கை முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஒரு குழுசார் தொழிற்பாடாக கட்டியெழுப்பப்படுகிறது. இந்தத் குழுவானது
- நரம்பயல் வைத்திய நிபுணர்
- மறுவாழ்வு சிகிச்சைக்காக பயிற்றப்பட்ட தாதியர்.
- உடற்பயிற்சி நிபுணர்
- மறுவாழ்வு உத்தியோகத்தர்.
- மனநோய் வைத்திய நிபுணர்
- தொழில்சார் பயிற்சி நிபுணர்
- பேச்சு – மொழி ஆளுமை வளர்க்கும் உத்தியோகத்தர்
- வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் உத்தியோகத்தர்.
- குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டு உருவாக்கப்படுகிறது.
தனிப்பட்டவர்களின் தேவைக்கமைய இவர்களின் செயற்திட்டங்கள் வேறுபடுகின்றன எனினும் இக்குழுவினது முக்கிய குறிக்கோளாக அமைவது.
1. பாரிசவாதம் ஏற்படுத்திய பாதிப்பை எதிர்கொள்ளல்
2. இரண்டாவது தடவையாகவும் பாரிசவாதம் ஏற்படாமல் தடுத்தல்.
மறுவாழ்வு சிகிச்சையானது பாதிப்பு ஏற்பட்டு கட்டிலில் முடங்கியுள்ளவரை ஒரு முறை திருப்பிவிடுதல் மற்றும் உதவியுடன் கூடிய சிறியளவு உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தலுடன் ஆரம்பித்து வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் தனியாகவோ சிறிய உதவியுடனோ தன் வேலையை தானே செய்யக்கூடியதொரு நிலைக்கான பயிற்சிவரை தொடர்கின்றது. இவ்வாறான சிகிச்சையின் உள்ளடக்கங்களானது.
- ஏற்பட்ட பாதிப்புக்கான மருத்துவ சிகிச்சை
- மீண்டும் பாரிசவாதம் ஏற்படாமலிருக்க செய்யவேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்
- மூளையால் மறக்கப்பட்ட அடிப்படை தொழிற்பாடுகளை மீண்டும் கற்பித்தல் மூலம் நாளந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பயிற்சிகள்
- சுகாதாரமான வாழ்க்கை முறை பயிற்சிகள்
- உதவியாளர்களுக்கான அறிவுரைகளும் பயிற்சிகளும்.
- உடல் அசைவுக்கான உடற்பயிற்சிகள் மூலம் பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளின் தொழிற்பாட்டை மீளப்பெற செய்தல் மற்றும் நிரந்தர நீண்டகால பாதிப்புகளை தவிர்த்தல்.
- புதிதாக கற்பிக்கப்பட்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்வதற்கான ஊக்குவிப்பு
- மறுக்கப்பட்ட மொழியாற்றலை வேறு மாற்றுமுறைகள் மூலம் தொடர்பாடலுக்காப் பயன்படுத்துதல்.
- விழுங்குவதற்கான பயிற்சிகள்.
- எஞ்சியுள்ள பாதிக்கப்படாத திறமைகளை இனங்கண்டு அவற்றை வளர்ப்பதற்கான ஊக்குவிப்பு மற்றும் தொழில்சார் வழிகாட்டல்.
- மன அழுத்தத்திலிருந்து மீளுவதற்கான அறிவுரைகளும் வழிகாட்டலும்.
இவ்வாறான சிகிச்சை முறை வைத்தியசாலைகளில் உள்நோயாளர்கள் பிரிவுகளிலும், வெளிநோயாளர் பிரிவுகளிலும் வழங்கப்படக்கூடியவை. அரசாங்க வைத்தியசாலைகளிலோ அல்லது தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது பிரத்தியேகமாக வீடுகளில் தனிப்பட்ட ரீதியாகவோ வழங்கப்படக்கூடிய சிகிச்சையாக இது காணப்படுகிறது. ஆனால் பாரிசவாதம் தொடர்பான வழிப்புணர்வு போதியளவு அற்ற காரணத்தால் பாரிசவாதத்திற்குப் பின்னான மறுவாழ்வு மறுக்கப்பட்ட ஒரு விடயமாகவே உள்ளது இதனால் இளம் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட சமூகமே பெரிதும் பாதிக்கப்படுகின்றது என்பது நிதர்சனமான உண்மை.
எனவே பாரிசவாதம் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதை தாண்டி, அதனை போராடி வென்றெடுத்து தன்னிச்சையாக வாழமுடியும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் கட்டியெழுப்புவதற்கு பாரிசவாதத்திற்குப் பின்னான மறுவாழ்வு சிகிச்சை இன்றியமையாதது. வளர்முக நாடுகளில் இவை அடிப்படையாக வயது வித்தியாசமின்றி கிடைக்கப்பெறினும், வளர்ந்து வரும் நாடுகளில் பாரிசவாத நோயாளிகளை சூழவுள்ள பாரமுகங்களாலும், போதிய விடய அறிவு அற்ற தன்மையாலும் மறுவாழ்வு சிகிச்சை எட்டாகனி போல் தென்படுகின்றது. போதியளவு வசதிகள் காணப்படினும் அவை தொடர்பான வழிப்புணர்வற்ற தன்மையால் வளங்கள் வீணடிக்கப்படுகின்றன. ஆகையால் பாரிசவாதத்திலிருந்தும் மீண்டெழலா என்ற நம்பிக்கையை உண்டாக்கி பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வு சிகிச்சை பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பது சமூகப்பொறுப்புள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
Dr. மயூரி விஸ்வகுமார்.
வைத்திய அதிகாரி
நரம்பியல் பிரிவு – B
யாழ் போதனா வைத்தியசாலை