சுன்னாகத்திலே பல கிணறுகளில் எண்ணெய்ப் படவங்கள் மிதப்பது தற்பொழுது ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. நிலத்தடி நீரில் கலந்திருக்கும் இந்த எண்ணெய்ப்படிவுகளால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் தோன்றி இருக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய் எவ்வாறு கலந்தது? 1958 ஆம் ஆண்டிலிருந்தே சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் அகற்றப்படும் பொறிமுறையிலே ஏதாவது பிரச்சினைகள் இருந்தனவா? அல்லது இடைக் காலங்களிலே இந்த விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படவில்லையா? அல்லது அண்மைக்காலத்து நடவடிக்கைகளில் ஏதாவது கவனக் குறைவுகள் இருந்தனவா? என்பன பற்றி எல்லாம் விவாதித்துக் கொண்டு இருப்பதிலும் பார்க்க, இந்த நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்கு இனி என்ன செய்யலாம் என்று சிந்திப்பது பயனுடையதாக அமையும்.
இந்தப் பிரதேசங்களில் காணப்படும் சில கிணறுகளில் எண்ணெயின் செறிவு லீற்றர் ஒன்றுக்கு 30mg வரை காணப்படுகிறது. பல கிணறுகளில் இதன் செறிவு 3mg தொடக்கம் 4mg வரை வேறுபடுகிறது. இந்த எண்ணெய்ச் செறிவு உடல் நலத்துக்குப் பாதுகாப்பானது அல்ல. உலக சுகாதார நிறுவனங்கள் நீரிலே இவ்வாறான எண்ணெய்களின் செறிவு 0.2mg இற்கு மேற்படாது இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. சுன்னாகப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட எத்தனை கிலோ மீற்றர் சுற்றுவட்டாரப் பகுதி நிலத்தடி நீரிலே இந்த எண்ணெய் கலப்பு ஏற்பட்டிருக்கிறது. என்பது இன்னும் துல்லியமாக அறியப்படவில்லை.
இந்த நிலத்தடி நீருடன் கலந்துபோயிருக்கும் கழிவு எண்ணெயில் காணப்படும் மீனேல், பென்சீன் போன்ற அறேமற்றிக் ஐதரோகாபன்கள் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியன. இந்தக் கழிவு எண்ணெய்கள் தொடர்ச்சியாக உள்ளெடுக்கப்பட்டடால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்று நமபப்படுகிறது. அத்துடன் இவை சில தோல் நோய்களையும் ஏற்படுத்தவல்லவை.
இந்த எண்ணெயில் கரைந்து காணப்படும் சில உலோகங்களும் நாளடைவிலே பல சுகாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க வாய்ப்புண்டு. இந்த எண்ணெயிலே ஈயத்தின் செறிவு அதிகமாக இருந்தால் பல நரம்பு சம்பந்தமான நோய்களையும் குறோமியம் அதிகமாக இருந்தால் சிறுநீரகம் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்த முடியும். அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்களிலும் இந்த எண்ணெய் பல்வேறுபட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
எனவே இந்தப் பகுதியில் வாழும் மக்கள் கிணற்று நீரைக் குடிப்பதையும் சமையலுக்குப் பாவிப்பதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. கடலை நோக்கிய இயற்கையான நிலத்தடி நீரோட்டம் காரணமாக சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் வடக்கு நோக்கிய பகுதிகளிலே இந்த எண்ணெய் கூடுதலாகப் பரம்பலடைந்திருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் மாற்றுக் குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்ட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த முயற்சி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பகுதிகளிலே பெருமளவு விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. இந்த விவசாய விளைபொருள்களிலே இந்த எண்ணெய் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. சில சேர்வைகளும் மூலகங்களும் மண்ணிலே குறைந்த செறிவிலே காணப்பட்டாலும் அந்த மண்ணில் வளரும் தாவரங்களிலே அவற்றின் செறிவு அதிகரிப்பதற்கான ஆபத்து நிலை இருக்கிறது. இந்தத் தொடர் செறிவாக்கல் பொறிமுறை காரணமாக இந்தப் பிரதேசங்களிலிருந்து பெறப்படும் விவசாய விளைபொருள்களிலும் பழவகைகளிலும் வேண்டப்படாத ஏதாவது சேர்வைகளின் செறிவு அதிகமாகக் காணப்படுகின்றதா? என்பது சம்பந்தமாகவும் ஆராயப்பட வேண்டி இருக்கிறது.
இன்னும் வரும்…..
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.
யாழ். போதனா வைத்தியசாலை.