உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 15 மில்லியன் கணக்கிலானா குறைமாதப்பிள்ளைகள் வருடந்தோறும் பிறக்கின்றவேளை, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தம் ஒரு வயது பூர்த்தியாக முன்னரே இறந்துவிடுகின்றனர். “குறைமாத பிரசவம்” பற்றிய விழிப்புணர்வு உண்டாக்குவதே இவ்வாறான சிசுக்களின் இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவத்துறையினர் மேற்கொள்ளவேண்டிய முதலாவது குறைமாதப் பிரசவம் பற்றிய வழிப்புணர்வு மாதமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் நவம்பர் 17ம் திகதி இதற்குரிய விழிப்புணர்வு தினமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. முதலாவது விழிப்புணர்வு தினமானது “Europe Parent Organizations” இனால் 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
பொதுவான கர்ப்பகாலம் 40 கிழமைகள் எனக் கொள்ளப்படுகிறது. ஒரு தாயின் கர்ப்பத்தில் 37 கிழமைக்கு முன்னதாக பிரசவம் நிகழ்ந்து பிறக்கும் குழந்தை குறைமாத பிள்ளை எனக் கொள்ளப்படுகிறது. இவ்வகையான பிரசவமானது மேலும் வகைப்படுத்தப்படுகிறது. இவ்வகையான பிரசவமானது மேலும் வகைப்படுத்தப்படுகிறது. அதாவது 22 – 27 கிழமையிலான பிரசவமானது மிகவும் அதிதீவிரமாகவும் 28 – 32 கிழமையிலான பிரசவமானது அதிதீவிரமாகவும் 33 – 36 கிழமையிலான பிரசவமானது தீவிரமாகவும் கணக்கெடுக்கப்படுகின்றது.
குறைமாதப் பிரசவமானது பல்வேறுபட்ட காரணிகளால் நிகழ்கிறது. பெரும்பாலான பிரசவங்கள் (45%- 50%) காரணமல்லாததாகவும், 30% ஆன பிரசவங்கள் முதிர்ச்சியடைய முன் சிசுவைச் சூழவுள்ள மென்சவ்வு வெடிப்பதாலும் (பன்னீர்க் குடம் உடைதல் என பேச்சு வழக்கிலுண்டு) மீதி 15% – 20% ஆன பிரசவம் மருத்துவரீதியான நிபந்தனையைப் பூர்த்தி செய்வதற்காகவோ (சிசுவிற்கு அல்லது தாயிற்கு உயிராபத்து நிகழப்போகும் பட்சத்தில்) நிகழ்கிறது அல்லது நிகழ்த்தா்படுகிறது. மேலும் தாயின் வயது (18 இலும் குறைவு மற்றும் 35 இலும் அதிகம்) தாயின் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், முன்னைய குறைப்பிரசவ நிகழ்வு, தாய் கர்ப்பவிதியாய் இருக்கும் போது காணப்பட்ட அசாதாரண நிலைகள் (இனப்பெருக்கத் தொகுதி கட்டமைப்பு பிறழ்வுகள், சலரோகம், உயர் குருதியமுக்கம், பல்பெருக்க கர்ப்பங்கள், மன உளைச்சல், அதிகூடிய உடல் உழைப்பு, புகைப்பிடித்தல் அல்லது மதுவருந்தும் பழக்கம்) மற்றும் பரம்பரை போன்ற காரணிகளும் இக்குறைப்பிரசவத்திற்கு காரணமாகிறது. மேற்கூறிய ஒவ்வொரு காரணமும் ஏதோவோரு குறிப்பிட்ட சதவீதத்தால் இவ்வகைப் பிரசவம் சம்பவிப்பதில் செல்வாக்கு செலுத்துகிறது. உதாரணமாக வெளிநாடொன்றில் செய்யப்பட்ட ஆய்வொன்றில் பதின்ம வயதினர் கர்ப்பவதிகளில் 43% ஆனவர்கள் குறைமாத பிரசவ நிலையை எதிர்கொள்கின்றனர்.
இவ்வகைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் சீரற்ற உடல் வெப்பநிலை, சுவாசம் சார் குறைபாடுகள், மஞ்சட்காமாலை, பால்குடிக்க இயலாமை, வலிப்பு, தொற்றுநோய்கள், அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல் போன்ற பல்வேறுபட்ட சிக்கல்கள் உடையவராயிருப்பர், இச் சிக்கல்கள் யாவும் சிசுவின் உடல் அங்கங்களின் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் முதிர்ச்சியடையாத் தன்மையாலேயே நிகழ்கிறது.
விசேட குழந்தை நல பராமரிப்பு அலகில் இவ்வகையான சிசுக்கள் அனுமதிக்கப்பட்டு குழந்தை நல வைத்தியரால் உரிய மருத்துவமும் அச்சிசுவின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆலோசனைகள் வழங்கப்படுவதை பொதுவாக வைத்தியசாலைகளில் காணக் கூடியதாயுள்ளது. அதற்கும் மேலாக வீடுகள் மற்றும் சமுதாய மட்டத்திலும் இச் சிசுக்களின் சுகாதார விதிப்படிமுறைகளின் உரிய மருத்துவ தேவைகளை விஸ்தரிப்பதற்கு வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் முன்னிற்கின்றனர்.
இவ்வருடத்திற்கான விழிப்புணர்வு தினத்தின் போது உலக சுகாதார ஸ்தாபனமானது தாய் மற்றும் சிசுவிற்குரிய தேவைகளாக பின்வருவனவற்றை விளக்குகிறது.
- குறைமாதப்பிள்ளையின் நுரையீரல் தொழிற்பாட்டை முதிர்ச்சியடையச் செய்ய steroid injection கர்ப்பகாலத்தின் போது வழங்குதல்.
- சிசுவை தாயின் உடம்போடு அரவணைத்தபடியே இருத்தல்மூலம் குழந்தையின் உடல் வெப்பநிலையை சீராகப் பேணல் ( கங்காரு தன் குட்டியை தன் உடம்பிலே காவிச்செல்வது போல்)
- அடிக்கடி தாய்ப்பாலூட்டல் ( பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை விட சிறந்த ஆகாரம் எதுவுமில்லை)
- தொற்று நோய்களுக்கெதிராக எதிர்ப்பு மருந்துகள் அளித்தல்
ஆகவே தமக்கு குறைமாதப் பிரசவம் சம்பவிக்கப்போகிறது அல்லது குறைமாதப்பிள்ளை பிறந்துவிட்டாலோ அதற்குரிய மருத்துவ தேவைகளையோ, ஆலோசனைகளையோ பெறுவது எல்லா பெற்றோருக்கும் மற்றும் அக்குழந்தையின் பாதுகாவலருக்கும் உரிய மறுக்கப்படாத உரிமையாகும்.
சி.சஸ்ரூபி
BSc. Nursing