முதலாவது வகை நீரிழிவு நோயை சுகப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அண்மைக்காலத்தில் உலக விஞ்ஞானிகள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள்.
உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட கலங்களை உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நிர்மூலம் செய்வதால் இந்த வகை நீரிழிவு வருகிறது.
இரண்டாவது வகை நீரிழிவு நோய் இதிலிருந்து வேறுபட்டது. அது பெரும்பாலும் சீரற்ற வாழ்க்கை முறையால் வருவதாகும்.
ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஆய்வுகூடத்தில் குருத்துக்கலங்களில் இருந்து பல மில்லியன் கணக்கான பீட்டா கலங்களை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்.
கணையத்தில் இருக்கும் பீட்டா கலங்கள் இன்சுலினை சுரக்கின்றன. அந்த இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
ஆனால், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியானது சிலருக்கு அவர்களது கணையத்தில் உள்ள பீட்டா கலங்களை அழித்துவிடுகிறது. இதனால் அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காது போய் விடுகிறது. இதனையே டைப் 2 வகை நீரிழிவு என்கிறார்கள்.
பேராசிரியர் டவுக் மெல்ட்டன் தலைமையிலான ஹவார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு 23 வருடங்களுக்கு முன்னதாக இந்த முதலாவது வகை நீரிழிவுக்கான சிகிச்சையை கண்டுபிடிக்கும் முயற்சியை ஆரம்பித்தது.
பேராசிரியர் டவுக் அவர்களின் மகனுக்கு இந்த நோய் இருந்ததை அடுத்தே அவர் இந்த ஆராய்ச்சியை ஆரம்பித்தார். பின்னர் அவரது மகளுக்கும் இந்த நோய் வந்துவிட்டது.
நோயெதிர்ப்புச் சக்தியால் அழிக்கப்பட்ட 15 கோடி பீட்டா கலங்களுக்கு மாற்றீடான கலங்களை, குருத்துக் கல தொழில்நுட்பத்தின் மூலம் அவர் தயாரித்தார்.
ஒரு வகை நுட்பமான இரசாயனங்களின் கலவை, கருக்குருத்துக்கலங்களை பீட்டாக் கலங்களாக மாற்றுகிறது என்று அவர் கண்டுபிடித்தார்.
சோதனை எலிகளில் இந்தக் கலங்களை பரிசோதித்துப் பார்த்தபோது அவை இன்சுலினை உற்பத்தி செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அது பல மாதங்களுக்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தியது.
‘’சாத்தியம் என்று நாம் எப்போதும் நினைத்தால், அதனை ஒரு நாள் சாத்தியமாக்கலாம் என்று தனது சோதனை குறித்து டாக்டர் மெல்ட்டன் கூறியுள்ளார்.
இந்த விசயத்தில் நாம் இறுதி வெற்றியைக் காண்பதற்கு மருத்துவ ரீதியாக இன்னமும் ஒரு படி முன்னேறியாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருந்தாலும், ”இந்தக் கண்டுபிடிப்பை முதலாவது வகை நீரிழிவு நோயை முற்றாக குணமாக்குவதற்கான திசையில் ஒரு படி முன்னேற்றமாக கருதலாமே, ஒழிய இதுதான் இறுதி தீர்வு என்று கருத முடியாது” என்று இந்தச் சோதனைக்கு நிதி வழங்கிய தொண்டு நிறுவனமான ஜே டி ஆர் எஃப்பின் சாரா ஜோண்சன் பிபிசியிடம் கூறியுள்ளார்.
மாற்றீடு செய்யப்படும் கலங்கள் இன்சுலினை சுரப்பதுடன், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியின் தாக்குதலை தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதுவே இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாக அமைய முடியும்.
”ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை குணமாக்கலாம், ஆனால், மருத்துவ ரீதியில் அது முழுமையான வெற்றிய பெறவேண்டுமானால், அந்த மருத்தை பெருமளவில் உற்பத்தி செய்து பல லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய நிலை வரவேண்டும்” என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் குருத்துக்கல ஆய்வு விஞ்ஞானியான பேராசிரியர் கிறிஸ் மேசன் கூறியுள்ளார்.
அடுத்த கட்டமாக இந்தக் கலங்களை உடலினுள் வைத்து பராமரித்து, அவற்றின் மூலம் இன்சுலினை சுரக்கச் செய்வதற்கான வழியையும் கண்டுபிடித்தாகவேண்டும்.