வயது மூப்படையும் போது சிலரில் கூனல் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இக் கூனல் ஏற்பட ஒஸ்டியோபொரசிஸ் என்னும் நோய் நிலைமையே காரணமாகும்.
ஒஸ்டியோபொரசிஸ் எனும் நோய் எலும்புகளின் அடர்த்தி குறைவதையே குறிப்பிடுகின்றது. இந்நோய் மூப்படையும் போது தானாகவே அல்லது வேறு நோய்களின் அல்லது தொடர்ச்சியான சில குறித்த மருந்துப்பாவனைகளின் விளைவாகவோ ஏற்படலாம். இந்நோய் நிலைமையால் எலும்புகள் வலுவிழந்து உடையும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் பொதுவாக முள்ளந்தண்டு எலும்புகளே உடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது.
இந்நோய் வயது முத்தவர்களிடம் குறிப்பாக மாதவிடாய் நிரந்தரமாக முடிவடைந்த பெண்களில் அதிகமாக ஏற்படுகிறது. இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கும் மேலதிக காரணிகளாக பரம்பரைக்காரணி, அதிக மதுபாவனை, மூட்டுவாதநோய், மெலிந்த உடல், நீண்டகாலம் அசையாதிருத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இந்நோய் நிலைமையானது சில ஒமோன்களின் அதிகரித்த அல்லது குறைந்த தொழிற்பாடு காரணமாகவோ அல்லது மூட்டுவாத நோய், ஸ்பீரொஸ்ட், ஹெபாரின், வலிப்பு மருந்துகள் போன்ற மருந்துகளின் நீண்டகாலப் பாவனை காரணமாகவோ இளம் வயதிலேயே ஏற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றது.
xகதிரியக்கப்படங்கள், டெக்ஸா ஸ்கான் மற்றும் குருதிப்பரிசோதனை மூலம் இந்நோயும் அதற்கான காரணிகளும் கண்டறிப்பட்டு அதற்கேற்ப மருந்து வகைகள் மூலமும் உங்கள் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமாகவும் இந்நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
அவ்வாறான சில வாழ்க்கை முறை மாற்றங்களாக பின்வருவன அமைகின்றன.
1. புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை முற்றாக நிறுத்துதல்
2. உடல் நிறையை தாங்கும் உடற்பயிற்சிகள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன.
3. கல்சியம் மற்றும் விற்றமின் டி அதிகம் அடங்கியுள்ள உணவுவகைகளை உட்கொள்ளல்
4. தவறி விழுதலை தடுக்கும் வகையில் வீட்டுச் சூழலை மாற்றியமைத்தல் ( கண்பார்வை சிகிச்சை, சூழலை ஒளியூட்டல், கைபிடித்து நடக்கக்கூடிய வகையில் வழியை அமைத்தல்- வழுக்காதவாறு பாதையை அமைத்துக்கொள்ளல்)