“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கருத்தில் எவருக்கும் இருவேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்க முடியாது. நோய் அல்லது பிணியானது வாழ்க்கையில் உண்டுபண்ணும் தாக்கம் மிகப் பெரியது. உடல் உபாதை, மன உளைச்சல் வீண் பண விரயம், உயிரிழப்பு என இத்தாக்கங்களை எண்ணிக்கொண்டே போகலாம். ஒரு நோயாளியினால் குடும்பத்தில் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அந்நோயாளியைப் பராமரிப்பவருக்கும் ஏற்படும் சிரமங்கள் சொல்லிலடங்காதவை.
நோயின் பரிமாணம் காலத்துக்கு காலம் மாறுபடுகின்றது. பண்டைய காலத்தில் தொற்றுநோய்களும், சிசு மரணங்களும், மகப்பேற்று கால உயிரிழப்புக்களும் மனித சமுதாயத்தை உலுக்கிய பேரவலங்கள் ஆகும். மருத்துவம் பெருவளர்ச்சி கண்ட பின் 21ம் நூற்றாண்டில் தொற்று நோய்களற்ற பல நோய்களும், புற்றுநோயும், விபத்துக்களும் மனித இனத்துக்கும் பெரும் சவாலாக விளங்குகின்றன.
வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களே இப் புதிய சவாலுக்கு காரணமாக அமைகின்றது. நீரிழிவு, உயர்குருதியமுக்கம், சிறுநீரக செயலிழப்பு போன்ற முக்கிய நோய்கள் மிக அண்மைக் காலத்தில் அதிகளவு பாதிப்பை எம் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது. இதய நோய், சுவாச நோய்களின் தாக்கங்களும் மிக அதிகரித்தே செல்கின்றது.
ஒரு சாரார் பரம்பரை மீது இதற்கு பழியைப் போடலாம். கால் நூற்றாண்டுக்குள் ஏற்பட்ட இந்த நோய்களின் அதிகரிப்புக்கு பரம்பரை மீது பழியைப் போடுவதை வீண் பழியென்றே கொள்ளலாம்!
வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் என்று குறிப்பிடும் போது குறிப்பாக நாம் உண்ணுகின்ற உணவுவகைகளில் ஏற்பட்ட மாற்றமும் உடற்பயிற்சிகள் அற்ற வாழ்க்கை முறையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக ஒரு திருமண வைபவத்தில் சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பரிமாறப்பட்ட வடை, முறுக்கு, சீனி அரியதரம், பால்ரொட்டி, சிப்பி பலகாரம் போன்றவற்றை இன்று காண்பது அரிது. மாறாக பற்றிஸ், கேக், ரோல்ஸ், பேஸ்ரி என சுத்தமான கோதுமை மா தயாரிப்புகளே பரிமாறப்படுகின்றன. அதே போல் கால்நூற்றாண்டுக்கு முன் குடாநாட்டில் இருந்து துவச்சக்கரவண்டிகள் இன்று கணிசமாக குறைந்து விட்டன.
திருவள்ளுவர் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணவுதான் நோய்க்கு முக்கிய காரணி என்ற கருத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மருந்து எனும் 95வது அதிகாரத்தில் வள்ளுவர் முத்தான 7 குறள்களின் மூலம் உணவு எவ்வாறு நோயில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட கருத்துக்களை அதே ஒழுங்கில் நோக்குவோம்.
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”
இந்த முதலாவது குறள் உணர்த்துவது என்னவெனில் உணவும், செயலும் மிகுந்தாலும் குறைந்தாலும் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்று நோய்களும் உடலுக்குத் துன்பம் செய்யும் என்பதாகும்.
இதன் மூலம் வள்ளுவர் மூன்று முக்கிய நோய்களை கண்டறிந்துள்ளது. எனும் கருத்தும் உணவு மிகுதியும் குறைவும் நோயை ஏற்படுத்தும் என்பதும் புலப்படுகின்றது.
“மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றி உணின்” என்பது வள்ளுவரின் இரண்டாவது குறள்
எவனொருவன் முன் உண்ட உணவு செரிந்த பின் அல்லது சமித்த பின் மீண்டும் உணவு உண்ணுகின்றானோ அவனுடைய உடம்பிற்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படுவதில்லை என்பது இதன் பொருள். எமது பண்டைய மக்கள் இரண்டு அல்லது மூன்று வேளைகளில் மாத்திரமே உணவை உட்கொண்டு வந்திருந்தனர். ஆனால் இன்றைய இளைய சமுதாயம் சற்றே இதிலிருந்து விலகி காணுகின்ற போதெல்லாம் உண்ணுகின்ற ஒரு வழக்கத்தை கைக்கொள்கின்றது என்பது புலப்படுகின்றது.
இந்தக் கருத்தையே மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்த முனைகிறார் பொய்யா மொழியார்.
“அற்றால் அளவு அறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு” எனும் குறள் மூலம் முன் உண்ட உணவு செரித்த பின் வேண்டிய அளவு உண்பவன் பெற்ற உடம்பை நெடுங்காலம் பேணிப் பாதுகாப்பான் எனக் குறிப்படுகின்றார். அதாவது பசித்து உண்ணும் போதும் அளவு அறிந்து உண்க என்பது இதன் கருப்பொருள்.
பசித்த பின்பு தான் உணவை உண்ண வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய தெய்வப் புலவர் மீண்டும் ஒரு முறை
“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு
அல்ல துய்க்க துவரப்பசித்து” என்ற குறள் மூலம் முன்கண்ட உணவு செரித்த பின் மாறுபாடில்லா உணவைக் கண்டறிந்து நன்றாக பசித்த பின்பு உண்ணவேண்டும் என்ற கருத்தையும் சொல்கின்றார்.
பொய்யாமொழிப் புலவர் தனது நான்காவது குறளாக மருந்து எனும் அதிகாரத்தில் பின்வரும் கருத்தைக் குறப்பிடுகின்றார்.
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
அதாவது மாறுபடும் இல்லாத உணவை அளவோடு உண்டால் உயிர் உடம்பில் உறைவதற்கு ஊறு உண்டாகாது என்பதாகும்.
மாறுபாடு இல்லாத உணவு என்று வள்ளுவர் குறிப்பிடுவது வயதிற்கு ஏற்ற உணவாகவும், ஒருவருக்கு ஒத்துப்போகக் கூடிய அழற்சியையோ அல்லது ஒவ்வாமையோ உண்டு பண்ணாத உணவாக இருக்கலாம். இப்படியான உணவைத் தேர்ந்து எடுத்து உண்டால் உயிர் உடம்பில் நெடுநாள் தங்கும். இதனால் தான் மேலும் முனிவர்களும், ரிஷிகளும் நூற்றாண்டுகள் வாழ்ந்ததாக வரலாற்று குறிப்புக்கள் பறைசாற்றுகின்றன.
உணவின் அளவை மீண்டும் ஒருமுறை இடித்துரைக்க வந்த வள்ளுவர் இவ்வாறு தனது 5வது குறளைப் படைத்தார்.
“இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்
கழிபேரிரையான்கண் நோய்”
குறைந்த அளவு உணவு உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்பது போன்று நிறைந்த அளவு உண்பவனிடம் நோய் நிலைத்து நிற்குமாம்.
“போதும் என்ற மனமே பொன் செய்யும மருந்து” எனும் மூத்தோர் வாக்கு உணவுப் பழக்கத்திற்குச் சாலவே பொருத்தமானது.
நோய் ஏற்பட்ட பின் சுவையான, இனிமையான உணவுகளை விட்டு ஒதுக்குவதிலும் பார்க்க நோய் வருமுன்னே அவற்றை அளவோடு சுவைப்பதும் அனுபவிப்பதும் புத்திசாலித்தனமாகும்.
இறுதியாக ஒருவனுடைய பசிதான் உணவையும் அதன் அளவையும் தீர்மானிக்க வேண்டும் என்று வள்ளுவர் இயம்புகின்றார்.
“தீயளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
நோயளவு இன்றிப் படும்”
அதாவது பசியின் அளவை அறிந்து உண்ணாமல், சுவை மிகுதியால் அதிகளவு உண்பவனுக்கு அளவில்லாத நோய்கள் உண்டாகும் என்பதாகும்.
ஒரு தோட்டத்தொழிலாளி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த பின் உண்ணுகின்ற சோற்றின் அளவும் ஒரு வங்கி உத்தியோகத்தர் ஒரு கதிரையில் உட்கார்ந்து வேலை செய்த பின் உண்ணும் சோற்றின் அளவும் ஒன்றாக இருக்க முடியுமா? சுவை என்ற ஒரு புலன் பசியென்ற ஓர் உணர்வை விட மேலோங்குவதனால் ஒருவர் தன்னை மறந்து அளவுக்கு அதிகமான உணவை உள்ளெடுக்க நேரிடுகின்றது. எனவே தான் பசிக்க உண்ண வேண்டும்! பசிக்கு உண்ண வேண்டும்! என்ற கருத்தை தனது 7வது குறளில் முன்மொழிகின்றார் வள்ளுவப் பெருந்தகை.
இந்த முத்தான ஏழு குறள்களும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் எமக்கு மிக பொருத்தமானவையாகவே இருக்கின்றன.
வள்ளுவத்தின் வழி நின்று வாழ்வை வளப்படுத்த நாம் பகுத்துண்ண வேண்டும்! பசித்துண்ண வேண்டும்!
திருநாவுக்கரசு குமணன்
பொது வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை