இலங்கையில் வாய்ப்புற்று நோயானது ஆண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தையும் (30%) பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் மூன்றாம் இடைத்தையும் (10%) பெற்றுக்கொள்கின்றது. இலங்கையில் வாய்ப்புற்று நோய்க்கு பிரதான காரணிகளாக பாக்கு மற்றும் புகையிலை பாவனையைக் குறிப்பிடலாம்.
வாய்ப்புற்றுநோயானது வாயின் எந்தப்பாகத்திலும் ஏற்படலாம். உதாரணமாக நாக்கு, நாக்கிற்கு கீழான பகுதி, உமிழ்நீர்ச் சுரப்பி, கன்னத்தின் உட்புறம், உதடு, முரசு, பற்களைச் சுற்றியுள்ள பகுதி, மெல்லண்ணம்,வல்லண்ணம் உள்நாக்கு, வாய்த்தொடை போன்ற பகுதிகளைக் குறிப்பிடலாம்.
வாய்ப்புற்று நோயின் அறிகுறிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
- வெள்ளை அல்லது சிவப்பு நிறத் திட்டுக்கள்.
- இரண்டு வாரங்களிற்கு மேல் மாறாத புண்கள்
- பல்பிடுங்கிய இடத்தில் தொடர்ச்சியான இரத்தக் கசிவு ஏற்படல்
- பற்கள் தானாக விழுதல்
- உணவு விழுங்குவதில் கஷ்டம்
- தாடையின் வெளிப்புறத்தில் ஏற்படும் கட்டிகள்
- உதட்டில் ஏற்படும் விறைப்புத்தன்மை
வாய்ப்புற்றுநோய்க்கான காரணிகளாக பாக்கு, புகையிலை, மதுபாவனை, மற்றும் சூரிய ஒளி, HPV தொற்று (Human Papilloma virus) என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் எமது நாட்டில் குறிப்பாக ஆண்களில் பாக்கு, புகையிலை பாவனை பிரதான காரணிகளாகக் காணப்படுகின்றது.
பாக்கு, புகையிலை அடிக்கடி பாவித்தல், அதிகநேரம் வாய்க்குழியினுள் வைத்திருத்தல் என்பன வாய்ப்புற்று நோய்க்கான சாத்தியக்கூறினை மேலும் அதிகரிக்கின்றது. புகையிலை பாவனையினுள் புகைப்பிடித்தல், புகையிலை மெல்லுதல், மூக்குப்பொடி பாவித்தல் என்பனவும் அடங்கும். ஒரு நாளைக்கு பிடிக்கும் சிகரெட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது. வாய்ப்புற்று நோய்க்கான சந்தர்ப்பமும் அதிகரிக்கின்றது. இதே போன்றே மதுபாவனையும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
சூரிய ஒளியானது உதடுகளில் ஏற்படும் புற்றுநோய்க்குக் காரணமாகின்றது. HPV எனப்படும் வாய் வழி உடலுறவின் மூலம் தொற்றலடைகின்ற ஒரு வகை வைரசும் வாய்ப்புற்று நோயினை ஏற்படுத்துகின்றது.
வாய்ப்புற்று நோயானது இழையமாதிரி பரிசோதனை (biopsy) மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. இதன் சிகிச்சை முறையில் சத்திரசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, Chemotherpy என்பன உள்ளடங்குகின்றது.
வாய்ப்புற்று நோயினை தடுக்கும் முறைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
- பாக்கு புகையிலை பாவனையை முற்றாக தவிர்த்தல்.
- மது பாவனையைத் தவிர்த்தல்
- பழங்கள், மரக்கறி வகைகளை அதிகளவில் உட்கொள்ளுதல்
- சிறந்த வாய்ச்சுகாதாரத்தினைப் பேணுதல்.
வாய்ப்புற்று நோயின் அறிகுறிகள் பல்வகைப்பட்டனவாக இருப்பதாலும் வாய்ப்புற்றுநோயானது வாயின் எப்பாகத்திலும் ஏற்படக் கூடியதாக இருப்பதாலும் இதனை ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினமானது. எனினும் மேலே கூறப்பட்ட அறிகுறிகள் ஏற்படின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதன் மூலம் உடலின் ஏனைய பாகங்களிற்கும் பரவும் தன்மையைத் தடுக்க முடியும்.
வாய்ப்புற்று நோய் வந்த பின் சிகிச்சை பெறுவதனை விட வருவதனை தவிர்ப்பதே சாலச்சிறந்தது. எனவே இதனை ஏற்படுத்தும் பிரதான காரணிகளான பாக்கு, புகையிலை பாவனையை முற்றாகத் தவிர்ப்போம்.
Dr.ஷம்பிகா இராஜரட்ணம்
நீரிழிவு சிகிச்சைப் பிரிவு
யாழ் போதனா வைத்திய சாலை