சலரோகம் என்பது என்ன?
ஒருவர் சுகதேகியாக இருப்பதற்கு உடலிலுள்ள பல தொழிற்பாடுகள் உதவுகின்றன. அவற்றில் ஒன்று உடலிலுள்ள வெல்லத்தின் (குளுக்கோசு) அளவை ஒரு சமநிலையில் வைத்திருப்பதாகும்.
எங்கள் உடலில் சதையி எனும் சுரப்பி வயிற்றுப் பகுதியில் உள்ளது. இது இன்சுலின் எனப்படும் பதார்த்தத்தைச் ( ஹோர்மோன்) சுரக்கிறது. இன்சுலின் குருதியிலுள்ள வெல்லத்தின் அளவைக் குறிப்பிட்ட வரையறையுள் பேண உதவுகின்றது. நாம் உணவுண்ணும் போது இரத்தத்தில் வெல்ல மட்டம் கூடுகின்றது. இதன்போது சதையி இன்சுலினைச் சுரந்து வெல்லமட்டத்தை இரத்தத்தில் குறைக்கின்றது. உடலில் வெல்லமட்டத்தை கூட்டுவதற்குப் பல வகையான சுரப்புகள் (ஹேர்மோன்கள்) உதவுகின்றன . ஆனால் இன்சுலின் மட்டுமே குறைப்பதற்கு உதவுகின்றது. ஆகவே இச் சுரப்புகளுக்கிடையான சமநிலை ஒருவரைச் சுகதேகியாக வைத்திருப்பதற்கு அவசியமானது.
இரத்ததிலுள்ள வெல்லமட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதிகரிக்கும் நிலைமையே சலரோகமாகும். வகை 1 இற்குரிய சலரோகம் (T1DM) என்பது இன்சுலின் போதுமற்ற அல்லது முற்றாக இல்லாத நிலைமையாகும். இந்நிலைமையே சிறுவர்களில் அதிகமாகக் காணப்படும் சலரோக வகையாகும்.
02. உங்கள் பிள்ளை இந்நோயைப் பெற்றது எப்படி?
சில சிறுவர்களின் உடலில் இன்சுலினைச் சுரக்கும் சதையக் கலங்களை அழிவடையச் செய்யும் பிறபொருள் எதிரிகள் காணப்படுகின்றன. பிறபொருளெதிரி என்பது ஒரு சுரப்பிலுள்ள கலங்களுக்கு எதிராக உற்பத்தி செய்யப்பட்டு அச்சுரப்பியைக் காலப்போக்கில் அழிக்கின்ற இரசாயனப் பதார்த்தமாகும்.
தற்போது இவ் அழிவுச்செயன்முறையைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து வகைகளோ செயன்முறைகளோ அறியப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.
03. உங்கள் பிள்ளையைக் குணப்படுத்த முடியுமா?
பிறபொருளெதிரிகள் ஒரு முறை சுரக்கப்பட்டால் அவை தொடர்ச்சியாக இன்சுலின் சுரக்கும் கலங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் படிப்படியாக இன்சுலின் அளவு குறைந்து இறுதியில் முற்றிலும் இல்லாது போகிறது ஆகவே சலரோகம் குணப்படுத்தப்பட முடியாத போதிலும் இன்சுலினைக் கொடுப்பதால் கட்டுப்படுத்தப்படக் கூடியது.
தொடரும்.