அதிகளவு கட்டுப்பாடற்ற விவசாய இரசாயன பாவனையில் இலங்கைக்கு முதலிடம் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
சிறுநீரக நோய்
இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிக்க காரணமாகியுள்ள விவசாய இரசாயன உரவகைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் பாவனையை மாற்றியமைக்க வேண்டும்.
நாட்டின் கடந்த 20 ஆண்டுகளாக சில பிரதேசங்களில் மர்மமாக இருந்து வரும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மண்ணில் கலக்கும் விவசாய இரசாயனப் பொருட்களே காரணம் என்று தமது ஆய்வுகள் உறுதிசெய்வதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படும் சிறுநீரக நோய்களிலும் வித்தியாசமான காரணங்களால் சிறுநீரக நோய்க்கு உள்ளானமுதலாவது நோயாளி அனுராதபுரம் மாவட்டத்தில் 1993ம் ஆண்டில்தான் கண்டறியப்பட்டுள்ளார். அதன்பின்னர் அடுத்த 10 ஆண்டுகளில் அந்தப் பகுதியின் சனத்தொகையில் 2.3 வீதமானோர் சிறு நீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 15.5 வீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கம் கூறுகின்றது.
இந்த நோயாளிகளின் அதிகரிப்புக்கு குடிநீர், உணவு, விவசாய இரசாயனம், மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் என்று பல்வேறு விடயங்கள் காரணங்களாக அமைந்திருக்குமா என்று மருத்துவர் சங்கம் ஆராய்ந்து பார்த்துள்ளது.
“விவசாய இரசாயன பாவகையில் இலங்கை முதலிடம்”
இப்படி ஆராய்ந்து பார்த்த போது தான் ஓர் உண்மை புலப்பட்டது. அதாவது உலகில் இலங்கையில் தான் விவசாய இரசாயனம் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. மற்ற நாடுகள் 10 -12 என்ற அலகுகளில் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்தும் போது இலங்கையில் 284 அலகுகள் என்ற அளவில் இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாவது இடத்தில் உள்ள பங்களாதேஷ் 164 அலகுகள் என்ற அளவில் உள்ளது. அந்நாட்டை விட இலங்கையின் பாவனை இரண்டு மடங்காக உள்ளது.
1960 – 1970 களிலேயே இலங்கையில் விவசாய இரசாயனப் பாவனை தொடங்கியதாகவும், அதன் பின்னரே இலங்கையில் சிறுநீரக நோயாளர்களும் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளார்கள்.
கடந்த காலங்களில் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் விவசாய இரசாயன பொருட்கள் கொண்டு செல்வதில் இருந்த தடை காரணமாக அப்பகுதிகளில் குறைவாக இருந்த சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அங்கம் அதிகரித்து வருவதாக அதிகாரபூர்வமற்ற புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
ராஜரட்ட பகுதியில் முதலில் கண்டறியப்பட்டமையால் ராஜரட்ட சிறுநீரக நோய் என்றும் இதற்கு பெயர் உண்டு. இன்று இந்நோய் அந்தப்பகுதியையும் தாண்டி பொலனறுவை மற்றும் அம்பாந்தோட்டை போன்ற மற்ற தென்னிலங்கை பகுதிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றது. இப்போது இந்த நோய் மெதுவாக வடக்கு நோக்கியும் நகர்ந்து வருகின்றது.
சிறுநீரக நோய் அதிகளவில் காணப்படும் பிரதேசங்களில் பெருமளவிலான பிள்ளைகள் இந்நோயினால் பெற்றோரை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.