உடலால் பருத்து அதனால் உண்மையில் பலவீனப்பட்டு பல அன்னிய உணவுகளிற்கெல்லாம் அடிமைப்பட்டு எமது சுதேச ஆரோக்கிய உணவுகளிலிருந்து அன்னியப்பட்டு அடுக்கடுக்காய் பல நோய்களிற்கு ஆட்பட்டு நாம் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதன் காரணம் என்ன?
விளை நிலங்கள் எல்லாம் தரவையாய் கிடக்க எமது உடம்பு மட்டும் விளைந்து போய் வீட்டிலும் தோட்டத்திலும் உளைக்க மறந்து இயந்திரங்களில் ஏறி உழக்குவதற்காய் வாங்கிய உடற்பயிற்சி மிசின்கள் கூட சும்மா கிடக்க சோம்பேறி அடிமைகளாய் நாம் சும்மா இருப்பதே சுகம் என்று நினைக்கத் துவங்கியதன் காரணம் என்ன?
நல்ல உடற்பயிற்சிகளாக அமையும் நடனம், நாட்டுக்கூத்து, மாவிடிப்பு, அம்மி அரைப்பு, சயிக்கிள் சவாரி, உதைபந்து, கிட்டி, பொடிநடை, காவடி என எமது கலாச்சார மரபுகள் அருகிப்போய் எதற்கெல்லாமோ அடிமையாகிப்போய் எம்மை எதிர்நோக்கி நிற்கும் அபாயங்களை எல்லாம் மறந்து மகிழ்ந்திருக்கும் மனநிலை எப்படி வந்தது?
TV நாடகம் படம் பார்க்க, பேப்பர் படிக்க, வெட்டிப் பேச்சுக்கள் பேச, சும்மா இருக்க, தூங்க, சாப்பிட, கொம்பியுட்டர் பார்க்க, கைத்தெலைபேசி பேச என எல்லாவற்றிற்கும் நேரமிருக்கும் எமக்கு உடற்பயிற்சி செய்யமட்டும் நேரமில்லாமல் போனது ஏன்? கொஞ்சம் சாப்பிட்டாலும் நிறை தானாகக் கூடுகிறது என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு சத்து மா பேணிகளில்தான் சத்து என்று சத்தியமும் செய்துகொண்டு நம் ஊர்க்கோழி முட்டைகளையும், உடன் பாலையும் ஆபத்தான உணவுகள் என அறிவித்துவிட்டு ஊதிப்போன உடம்பை குனிந்து பார்க்கவோ நிறுத்துப் பார்க்கவோ நேரமில்லாமல் அலைந்து திரியும் எம்மை தடுத்தாட்கொள்ளப்போவது யார்?
முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் பெயர்போனவர்கள் தியாகத்திற்கு சிகரம் வைத்தவர்கள் சேமிப்பிற்கும் கொடைக்கும் இலக்கணம் வகுத்தவர்கள், கல்வியில் கரைகண்டவர்கள், நினைத்த இலக்கை அடையும் வரை உழைக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் உடல் பருத்து உயிர்விடுவதா?
நிறையைக் குறைப்போம் என்று உறுதி எடுப்போம். அதற்கான ஆர்வத்தை விதைத்து வளர்ப்போம். உடற்பரிமாணங்களைப் பேணும் கலையை கற்றுத் தெளிவோம். இதை நடைமுறைப்படுத்த திடசங்கற்பம் எடுப்போம். இலகுவான வழிமுறை மூலம் ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் இந்த இலக்கை நோக்கி முன்னேறுவோம். மற்றவர்களையும் இந்த வழியில் செல்ல ஊக்குவிப்போம்.உடற்பரிமாணங்களைப் பேணிவருபவர்களை பாராட்டி அவர்களின் வழிமுறைகளை நாமும் கற்றுக்கொள்வோம். வளர்ந்து வரும் சிறார்களின் மனதிலும் உடல்நிறை பராமரிப்பு சம்பந்தமான ஆர்வத்தைப் பதிக்க முயலுவோம். நிறைகூடிய எமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆலோசனை வழங்கி அவர்களையும் ஆரோக்கிய வாழ்விற்கு மீட்டெடுப்போம்.
தற்பொழுது எம்மை ஆட்டிப்படைத்து வரும் தொற்று நோய்களான உயர்குருதி அமுக்கும், நீரிழிவு, கொலஸ்ரோல், புற்றுநோய், மாரடைப்பு, பாரிசவாதம், மூட்டு நோய்கள், போன்றவற்றிற்கெல்லாம் அடிப்படைக்காரணமாக இருக்கும் உடல்நிறை அதிகரிப்பு என்ற மாபெரும் விருட்சத்தின் வேரறுக்க நாம் அனைவரும் கைகோர்ப்போம்.
சி.சிவன்சுதன்
மருத்துவ நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை