கால்களைக் கழுவுதல்
தினந்தோறும் பாதங்களைக் காரத்தன்மை குறைந்த சவர்க்காரத்தைப் பயன்படுத்தி நன்றாக கழுவவும். பின்னர் மென்மையான துவாயினால் துடைக்கவும். துடைக்கும் போது விசேடமாகப் பெருவிரல் பகுதி, விரல் இடைவெளிகளில் கவனம் செலுத்தவும். பாதங்களை உலர்வான நிலையில் பேணவும். ஆயினும் அதிகம் உலர்வான நிலை காணப்படுமாயின் வெடிப்புக்கள் ஏற்பட்டு பற்றீரியாக்கள் பரவலாம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதிக உலர்த்தலைத் தடுக்க Lanolin or Vaseline பாவிக்கவும். களிம்புகள் படுக்கை விரிப்பில் படுவதை தடுப்பதற்காகப் பழைய காலுறையை அணிந்து கொள்ளவும். இயல்பாகவே கால்களில் அதிக வியர்வை உள்ளவர்களின் பாதங்கள் அதிகம் ஈரிலிப்புத் தன்மை உடையவையாகக் காணப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் முகத்துக்குப் பாவிக்கும் முகப்பவுடரைப் பாவித்து பாதங்களை உலர்வாகப் பேணவும்.
மேலும் நகங்கள் வெட்டும் போது நேராக வெட்டவும். மூலைப்பகுதியில் வளைவானதாகக் காணப்பட்டால் நகங்கள் உள்நோக்கி வளரக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மூலைப் பகுதியில் சிறு பஞ்சை உயர்த்தி வைப்பதன் மூலம் நகத்தை வெளிநோக்கி வளரச் செய்யலாம்.
மிகவும் கடுமையான, உடையக்கூடிய நகங்கள் எனின் அவற்றை மென்மையாக்குவதற்குப் பஞ்சுத் துண்டுகளில் தோய்க்கப்பட்ட கனிய எண்ணெய்களை நகங்களை வெட்டுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் இடவும். இதன் பின்னர் இலகுவாக நகங்களை வெட்டலாம்.
ஒவ்வொரு நாளும் பெருவிரல் பகுதியில் சிவப்பு புள்ளிகள், புண்கள், கொப்பளங்கள், கண்டல்கள் என்பன காணப்படுகின்றனவா எனப் பரிசோதிக்கவும். மேலும் கால்களின் நிறம், வெப்பநிலை என்பவற்றையும் அவதானிக்கவும். காலின் அடிப்பகுதியை அவதானிப்பதற்கு சிறிய தளவாடியை உபயோகிக்கவும். பாதப் பகுதியில் வெடிப்புக்கள் காணப்படுமாயின் அடிக்கடி இளஞ்சூட்டு நீரினால் காரத்தன்மை குறைந்த சவர்க்காரத்தைப் பாவித்துக் கழுவவும்.
பாதணிகளைத் தெரிவு செய்யும் போது அதிகம் இறுக்கம் இல்லாமலும், அதிகம் தளர்வில்லாமலும் சரியான அளவில் தெரிவு செய்யவும். மேலும் பாதணிகளைத் தெரிவு செய்வதற்கு மாலை நேரங்களையே பயன்படுத்துவது சிறந்தது. பாதப்பகுதியில் அதிகளவு அமுக்கம் ஏற்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு அதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட சப்பாத்தை (Shoe) பாவிக்கவும்.
பாதப்பகுதியில் கண்டல்கள், ஆணிக்கூடு, நோ, வீக்கம் என்பன காணப்படின் தகுந்த வைத்திய ஆலோசனை பெறவும். புதிதாக வாங்கிய சப்பாத்தை அணியும் போது முதல்நாள் ஒரு மணித்தியாலத்துக்கும் மறுநாள் இரண்டு மணித்தியாலத்திற்கும் என படிப்படியாக அணியும் நேரத்தை அதிகரித்து செல்லவும். கூரான முனையுள்ள சப்பாத்துக்களை அணிவதைத் தவிர்க்கவும். சப்பாத்துக்களை மாற்றி மாற்றி அணிவது சிறந்தது.
முதல்நாள் பாவித்த சப்பாத்தை நன்கு உலர விட்டு மறுநாள் அணியலாம். சப்பாத்துக்களை பகல் நேரங்களில் அடிக்கடி கழற்றி மீளவும் அணிந்து கொள்ளவும். இதன் மூலம் பாதங்கள் சௌகரியமாக இருப்பதுடன் போதிய குருதி விநியோகத்தையும் பெறும்.
உட்புறம் உள்ள மென்மையான போர்வைகள் பழைய சப்பாத்துக்கள் அணிவதைத் தவிர்க்கவும். எக்காரணம் கொண்டும் சப்பாத்துக்களோ அல்லது பாதணிகள் இன்றி வெறும் காலுடனோ நடப்பதை தவிர்க்கவும்.
மேலும் சப்பாத்துக்களை அணிய முன்னர் அதன் உட்பகுதியில் முள், சிறு கற்கள் போன்றன காணப்படுகின்றனவா என்பதை பரிசீலிக்க வேண்டும். காலுறைகளைத் தெரிவு செய்யும் போது பருத்தியினால் அல்லது கம்பளித்தன்மையானதாக காணப்படின் அது விரைவாக ஈரத்தன்மையை உறிஞ்சக்கூடியதாக காணப்படும்.
ஒவ்வொரு நாட்களும் வெவ்வேறு காலுறைகளை மாற்றிமாற்றி அணிவதன் மூலம் பற்றீரியாக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
அடிக்கடி இருக்கும் நிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நீண்ட நேரம் காலின் மேல் கால் போட்டிருப்பதனால் (Cross legs) காலின் கீழ்ப்பகுதிக்கான குருதி விநியோகம் தடைப்படும். இவ்வாறான நிலையில் கீழ்ப்பகுதி விறைப்புத் தன்மையாக மாறி காயங்கள் ஏற்படுவது தெரியாமல் நிகழலாம்.
காலின் எப் பகுதியிலும் குருதி விநியோகம் குறைந்து நீலநிறமாக மாறினால் அல்லது கறுப்பு நிறமாக மாறினால், அதிகளவு குளிர்வாகக் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறவேண்டும். உங்களது பாதங்களை நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஒரு வசதி நிறைந்த நவீன (Car) காரைக் கவனிப்பதைப் போன்று கவனிக்க வேண்டும். கால்களுக்கு ஒவ்வொருநாளும் 20-30 நிமிடம் வரை அப்பியாசம் கொடுத்தல் வேண்டும்.
இதன் மூலம் குருதி விநியோகத்தை அதிகரிக்க முடியும். சரியான உணவுப் பழக்கத்தையும், நீரிழிவு நோய்க்குரிய மருந்துகள், இன்சுலின் என்பவற்றையும் ஒழுங்காக எடுப்பதன் மூலமும், சீரான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதன் மூலமும் சலரோகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். எனவே பாதங்களை சீரான முறையில் பேணி எமது ஆயட் காலத்தை அதிகரித்துக் கொள்வோமாக.
கோ.நந்தகுமார்,
விரிவுரையாளர், தாதியர் பயிற்சிக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.