கொலஸ்ரோல் என்பது ஒரு வேதிக்கூட்டுப் பொருள். இது இயற்கையாக எமது உடலில் உருவாக்கப்படுகிறது. எமது உடலுக்குத் தேவையான கொலஸ்ரோலில் 80 வீதமானதை எமது கல்லீரல் உற்பத்தி செய்து விடுகிறது. மீதம் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுக்கப்படுகிறது. கொலஸ்ரோல் நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது. ஆயினும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்கும் போது தீங்கை ஏற்படுத்துகின்றது.
நமது உடலில் கடத்தும் சாதனமாகத் தொழிற்படும் குருதியின் கொழுப்பானது புரதங்களுடன் இணைந்த நிலையில் பின்வருமாறு காணப்படுகிறது.
- L.D.L குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ரோல் (Low Density Lipo Proteins)
- V.L.D.L மிகக் குறை அடர்த்திக் கொழுப்புப் புரதக் கொலஸ்ரோல்(Very Low Density Lipo Proteins)
- Triglycarides (முக்கிளிசரைட்டுகள்)
- H.D.Lமிக அடர்த்திக் கொழுப்பு புரதக் கொலஸ்ரோல் (High Density Lipo Proteins)
இந்தக் கொழுப்புச் சத்துக்கள் எமது குருதியில் மிருதுவாகவும் மெழுகுத் தன்மையுடனும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. எனினும் L.D.L, V.L.D.L மற்றும் Triglycarides குருதியில் இவற்றின் செறிவு அதிகரிக்கும் போது இருதய மற்றும் குருதிக் குழாய்களில் அடைப்பு, குருதி அமுக்கம் போன்ற நோய்கள் ஏற்பட ஏதுவாகிறது.
L.D.L, V.L.D.L இரண்டினதும் அடர்த்தி குறைவடையும் போது குருதிக் குழாய்களின் சுவர்களில் ஒதுங்கி உட்புறச் சுவர்களிலே மெல்லிய பாளங்களாகப் படிகின்றன. நாளடைவில் இந்தக் குருதிக் குழாய்களில் உட்சுவர் சுருக்கம் அடைந்து குறுகலாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. அத்துடன் இரத்த ஓட்டமும் தடைப்படுகின்றது. இதனால் மாரடைப்பு உட்படப் பல இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அத்துடன் மாரடைப்பு வந்தவர்களின் குருதியைப் பரிசோதிக்கும் போது அநேகருக்கு Triglycarides (முக்கிளிசரைட்டுகள்) மட்டம் உயர்வாக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. எனினும் H.D.L ( (மிக அடர்த்திப் புரதக் கொலஸ்ரோல்) இது குருதியில் நல்ல கொலஸ்ரோல் என்று அழைக்கப்படுகிறது. இதன் செறிவு குருதியில் அதிகரிக்கும் போது இரத்தக் குழாய்களில் படிந்துள்ள தீங்கிழைக்கும் கொலஸ்ரோல் படிவுகள் அகற்றப்பட்டு இரத்தக் குழாய்களின் அடைப்பு நீங்குகின்றது. அத்துடன் இருதய நோய்கள், மாரடைப்பு வராமல் தடுக்கின்றது. H.D.L இன் அளவு குருதியில் கூடுவது மிகவும் நன்மை பயக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது. எனவே இதனை உற்பத்தி செய்யும் கல்லீரலை தூண்டக்கூடிய உணவு, மருந்து பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் குருதியில்H.D.L இன் செறிவை அதிகரிக்கலாம். இதற்கு நாம்,
- சீரான உடற்பயிற்சி செய்தல்.
- உடற்பருமனைக் குறைத்து சீரான எடையைப் பேணுவது.
- உணவில் காய்கறி, பழவகை, நார்ச்சத்து உணவுகளை அதிகளவு எடுத்தல்.
- வறுத்த, பொரித்த மாமிசப் பண்டங்களைத் தவிர்த்தல்.
- எமது கல்லீரனால் உற்பத்தி செய்து விட முடியாத கொழுப்பு வகைகளை ஒமேகா – 3 மீன் உணவுகளில் இருந்தும், ஒமேகா – 6, சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய், சோயா பீன்ஸ் மற்றும் விதைகள், பருப்புக்களில் இருந்தும் பெறலாம். இவற்றை உணவில் அளவுடன் சேர்த்தல்.
- உங்கள் உடலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்தத்தக்க மருந்துகளை வைத்திய ஆலோசனைப்படி எடுத்தல்.
- புகைப்பிடிப்பது, மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. தொடர்ச்சியாக மதுபானம் அருந்துபவராயின் முற்றாகத் தவிர்தல்.
- புரதக் கொழுப்புகளைத் தவிர்த்தல். (உதாரணமாக: விலங்கின் இறைச்சிகள், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், கேக், ஐஸ்கிறீம் போன்றன)
- மாமிச உணவு உண்பவராயின் கூடுதல் மரக்கறி வகைகளையும், கீரை போன்ற உணவு வகைகளையும் எடுத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வகைகளை கடைப்பிடிப்பதன் மூலம் குருதியில் H.D.L செறிவை அதிகரிக்க செய்யலாம். ஒருவரின் மொத்தக் கொலஸ்ரோல் (Total Cholostol) அளவிடுவதை விட அதன் பிரிவுகளை அளவிட்டுச் சிகிச்சைப் பெறுவது சாலச் சிறந்தது.
ச.சுதாகரன்,
தாதிய உத்தியோகத்தர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.