ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் அவரையும், உங்களையும் பாம்புக்கடியலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
கடித்த பாம்பினை நன்கு அடையாளம் காணமுயலுங்கள். இதனால் எவ்வகையான பாம்பு என அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வைத்தியருக்கு உதவியாக இருக்கும். பாம்பை இனங்காணுவதில் அதிக நேரத்தை செலவழிப்பதையோ அல்லது அம் முயற்சியில் மீண்டும் கடிவாங்குவதையோ தவிர்க்கவும்.
பாம்பினால் தீண்டப்பட்டவரை குறைந்த அசைவுடன் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும். அத்துடன் கடிக்கு இலக்கானவரை அமைதியாக வைத்திருக்கவும். (அதிக அளவு அசைவும் மன உளைச்சல், அதிர்ச்சி என்பன இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இது பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவுவதற்கு ஏதுவாகிவிடும்)
- தீண்டப்பட்ட அவயம் இதய மட்டத்திற்கு கீழே வைத்திருக்கக்கூடியவாறு பார்த்துக்கொள்ளவும். இது விஷம் பரவுதலைத் தடுக்கவும்.
- தீண்டப்பட்ட அவயவத்திலிருக்கும் நகைகளையும் (உதாரணம்: காப்பு, மோதிரம்) மிக இறுக்கமான ஆடைகளையும் அகற்றவும்.
- தீண்டப்பட்ட பகுதி சவர்க்கார நீரினால் மெதுவாக கழுவப்பட வேண்டும். (தோல் மேற்பரப்பிலிருக்கும் விஷத்தை நீக்குவதற்காக)
- தீண்டப்பட்ட இடத்திற்கு இரண்டு அங்குலம் மேலே துணியால் அல்லது பட்டியால் இறுகக் கட்டவும். வீங்கியிருந்தால் வீக்கத்திற்கு இரண்டு அங்குலம் மேலே கட்டவும்.
- கட்டப்படும் பட்டி குறைந்தது ஒரு அங்குலம் தடிப்பதாகவும், கட்டு இறுக்கமானதாகவும் இரத்த ஓட்டத்தை தடுப்பதாகவும் இருக்க வேண்டும். கட்டப்பட்ட பட்டியை வீக்கத்திற்கு ஏற்பத் தளர்த்தி விடவும்.
- தீண்டிய பாம்பு நன்கு விஷம் நிறைந்த பாம்பாயின் தீண்டப்பட்ட அவயத்தை கட்டுத்துணியால் நன்கு சுற்றிக்கட்டவும். இதன் போது இதயத்திற்கு மிக அண்மையான இடத்தில் (Proximal) ஆரம்பித்து விரல்களை நோக்கிச் சுற்றவும்.
- நோயாளிக்கு உண்பதற்கோ அல்லது குடிப்பதற்கோ எதனையும் வழங்கக்கூடாது. இருப்பினும் சில கொடிய விஷம் நிறைந்த பாம்புக்கடியால் கடுமையாக வலி ஏற்படும் போது வலி நிவாரணியாக இரண்டு பரசிற்டமோல்களை மிகக் குறைந்தளவு நீருடன் கொடுக்கலாம்.
- வேறு யாரையாவது உதவிக்கு அழைக்கக் கூடியதாக இருப்பின் அவரது உதவியைக் கண்டிப்பாக பெற்றுக்கொள்ளவும்.
- முடிந்தளவில் மிக விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும்.
- வழங்கப்பட்ட முதலுதவியை வைத்தியரிடம் சொல்லவும். மற்றும் பாம்பு தீண்டியபோது நடந்தவற்றைத் தெளிவாக விவரிக்கவும்.
தவிர்க்கப்பட வேண்டியவை
- காயம்பட்ட இடத்தை வெட்டுதலோ, உறுஞ்சுதலோ தவிர்க்கப்படவேண்டும்.
- கடித்த இடத்தை பனிக்கட்டியால் தடவுதல் தவிர்க்கப்படவேண்டும்.
- இராசயனப் பொருட்களைக் காயத்தில் தடவுதல் தவிர்க்கப்படல் வேண்டும். கொண்டிஸ் போன்றவை இழையத்தில் சேதத்தை ஏற்படுத்தும்.
- ஆடைகளை அகற்றுதல் தவிர்கப்பட வேண்டும். (மிக இறுக்கமானவற்றைத் தவிர)
- மதுபானம் வழங்க வேண்டாம். இது விஷம் அகத்துறிஞ்சலை அதிகரிக்கும்.
- பெரும்பான்மையான பாம்புகள் விஷம் அற்றவை அல்லது விஷத்தை உட்செலுத்தமாட்டாதவை. எனவே, நோயாளிக்குப் பயம் ஏற்படுவதைத் தடுக்கவும்.
- பாம்பினது பல்லின் அடையாளம் விஷம் உள்ளே சென்றதற்கான ஆதாரம் அல்ல.
- பாம்பு இறந்திருந்தால் அதனை வைத்தியசாரலக்கு எடுத்துச் செல்லவும். இறந்த பாம்பு ஒரு மணிநேரம் வரை தெறிவில் செயற்பட்டால் தீண்ட முடியும் என்பதால் மிகக் கவனமாக இருக்கவும்.
க.நிஷா.
மருத்துவபீட மாணவி