அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” இற்றைக்கு பலநூறு வருடங்களுக்கு முன்பே மூத்த தமிழ்க் கவி ஒளவையார் இவ்வாறு பாடியுள்ளமையானது மனித உயிரின் உயர்வு மற்றும் மகத்துவம் பற்றிப் பறைசாற்றுகிறது. இன்று எமது நாட்டில் “தற்கொலை” செய்து அருமருந்தன்ன வாழ்வைத் தானாக முடித்துக்கொள்ளும் தன்மை தொற்றுநோய் போன்று பரவிவருகிறது. குறிப்பாக முப்பதாண்டுகாலப் போர் காரணமாக இனத்தின் இருப்பு ஆட்டம் கண்டுள்ள எமது தமிழ்ப் பிரதேசமெங்கும் நாளாந்த நிகழ்வாகப் பரவிவரும் தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.
பொலிஸ் திணைக்கள் தகவல்களின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டுமொத்தமாக 3ஆயிரத்து 250க்கும் மேற்பட்ட தற்கொலை முயற்சிகளும், புள்ளிவிவபரத் திணைக்களத்தின் தகவலின்படி ஒரு லட்சம் மக்களுக்கு 19 வரையான தற்கொலை இறப்புகளும் இடம்பெறுகின்றன. சுகாதார அமைச்சின்தரவுகள் நாளொன்றுக்கு 8 வரையான தற்கொலைமுயற்சிகள் இடம்பெறுகின்றன என்று தெரிவிக்கின்றன. யாழ். பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தகவல்களின் படி ஆண்டொன்றுக்கு 75வரையான தற்கொலைகள் பதியப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு மாதமளவில் ஊடகங்களில் வெளிவந்த தற்கொலைகள் பற்றிய செய்திகள் இருபதைத் தாண்டுகிறது. இவ்விரண்டு தகவல்களையும்விடவும் உண்மையில் இடம்பெற்றிருக்கக்கூடிய தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்பது தான் விஞ்ஞானபூர்வமான உண்மை .உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தகவல்களின்படி தற்கொலை இறப்புகளில் இலங்கை மிக உயர்வான இடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கவலைக்குரியவியம் என்னவெனில் எதிர்காலச் சமுதாயத்தை நகர்த்திச் செல்லவேண்டிய இளம் சமுதாயத்தினர் தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் இளஞ்சந்ததியினர் ஒப்பீட்டள் வில் மிக உயர்வாகும்.
ஆரோக்கியமற்ற உளவியல் வெளிப்பாடுதான் தற்கொலை
தற்கொலை என்பது முற்றுமுழுதாய்ஒரு மனிதனுடைய ஆரோக்கியமற்ற உளவியல் தன்மையின் வெளிப்பாகவே உள்ளது. ஒரு மனிதனின் சுகநலம் என்பது தனியே உடலியல் சார்ந்த ஒரு விடயமாகப்பார்க்கப்பட்ட காலம் மலையேறி பல வருடங்களாகிவிட்டது.
ஒரு மனிதனின் சுகம் அல்லது ஆரோக்கியம் என்பது தனியே நோயற்ற உடலியல் மட்டுமல்ல மாறாக உடல்நலம்இ உளந லம்இ சமூகநலம்இ ஆன்மிகநலம் ஆகிய அனைத்துக்கூறுகளையும் கொண்டது என்ற கருத்து மக்கள் மத்தியில் விதைக் கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றும் எமது மக்கள் மத்தி யில் உள ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதன்வெளிப்பாடாவே தற்கொலைகளின் அதிகரிப்பு என்பது சுட்டிநிற்கின்றது.
தற்கொலைகள் என்பதற்கு மேலாக எமது மக்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் தேவையற்ற இறப்புக்கள்கூட இந்த வகையைச் சார்ந்தவையே. ஒவ்வொரு மனிதனும் ஆளுமை தொடர்பான ஒரு பண்பாக சுயபாதுகாப்பு என்பதைக்கருதலாம். ஆனால் இன்று எமது பிரதேசமெங்கும் அதிகரித்துச் செல்லும் அகாலச் சாவுகளுக்குக் காரணமான வீதி விபத்துக்கள், மின்சாரவிபத்துக்கள், நீரில் இறத்தல் போன்ற அனைத்துக்கும் கூட சுயபாதுகாப்பு தொடர்பான ஆளுமை விருத்திக் குறைபாடே காரணமாகிறது. ஆளுமை விருத்தி என்பது முற்றுமுழுதான உளவியல் ஆரோக்கியம் தொடர்பான ஒரு எண்ணக்கருவாகும். எமது பிரதேச இளவயதினருக்கு வாழ்க்கையின் தத்துவம் தொடர்பான விழிப்புணர்வு போதாத நிலை காணப்படுவதாகவே தோன்றுகின்றது. மனித வாழ்க்கை என்பது கிடைத்ததற்கரிய தொன்றென்பதை உணராத தன்மையால் இன்று எமது மண் தேவையற்ற சாவுகள் மலிந்த பூமியாகிவிட்டது. எப்படி இருப்பினும் தற்கொலை என்பது முற்று முழுதாய்த் தடுக்கக்கூடிய ஒரு விடயம் என்பதே உண்மை .
காரணங்கள் என்ன?
பொதுவாக தற்கொலை செய்பவர்களின் பின்னணிக்கதையை எடுத்துப்பார்ப்பின் அனேகமாக கையாள முடியாதகடன், புரிந்துணர்வு, காதல், பாதுகாப்பற்ற பாலியல், தத்துவம் அறியா வாழ்க்கை, கணவன் மனைவிச் சண்டை, கவனமற்ற பிள்ளை வளர்ப்பு என்று பட்டியல் நீண்டு செல்லும்.
தற்கொலைகளைத்தடுப்பதில் உளவள் ஆலோசனைகள் என்பவை மிகவும் முக்கியமான ஒரு சேவை என்பது மறுக்கமுடியாத உண்மை. பொதுவாக பொது வாழ்வில் பல்வேறு விடயங்கள் எமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுண்டு. இவ்வாறு மன அழுத்தம் ஏற்படுத்துகின்ற சில விடயங்கள் அதனையும்தாண்டி உளநெருக்கீடு என்ற நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இவ்வாறு உள்நெருக்கீட்டு நிலைக்கு இட்டுச் செல்லும் விடயங்களைத் தொடர்ந்து கவனமெடுக்காதுவிடில் பெரிய உளநெருக்கீட்டு நிலை ஏற்படுகிறது. பெரிய உளநெருக்கீட்டுநிலையை உள்ளவர்களின் முக்கியமானதும் ஆபத்துமான குணக்குறி. தற்கொலை எண்ணமும் தற்கொலை முயற்சியும் ஆகும். இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் உளநெருக்கீட்டு நோயாளர்கள் தம்முடன் நெருக்கமாகப் பழகும் சிலருக்கோ ஒருவருக்கோ தெளிவாகவோ மறைமுகமாகவோ நான் எனது வாழ்வை முடித்துக்கொள்ளப்போகிறேன் என்ற செய்தியைச் சொல்லி இருப்பார்கள். அது விடயமாகக் கவனமெடுக்காமல் இருந்துவிட்டுப் பின் சாவு வீட்டிலே ஒப்பாரி சொல்லி அழுபவர்களைப் பார்க்கும் போது என்ன சொல்வது? யாழ். மாவட்டத்தில் பதியப்பட்ட மனநோயாளர்களில் அதிகளவானவர்கள் உளநெருக்கீட்டு நோயாளர்களாக உள்ளனர்.
உளவளத்துணையின் அவசியம்
மனநோயாளியாக மாறும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய முதல் இரு நிலைகளான மனஅழுத்தம் மற்றும் நெருக்கீடு ஆகிய இரண்டு நிலைகளையும் சரியான தொழில் வாண்மைமிக்க உள்வள துணையாளரால் பூரணமாகக் குணப்படுத்தமுடியும். உளவளதுணை செயற்பாட்டிலே உளவளதுணையாளர் உளரீதியாகச் சிக்கல் நிலை ஒன்றில் உள்ள துணைநாடியுடன் மனந்திறந்து கதைப்பதன் மூலம் துணைநாடியைப் பிரச்சினையிலிருந்து சரியான திசையில் வெளிவர உதவுகிறார். இந்த உதவி செயற்பாட்டின்போது உளவளத்துணையானவர் துணைநாடிவந்துள்ளவரிடம் உள்ள பிரச்சினை அல்லதுசிக்கல்நிலை ஏற்பட்டமைக்கான காரணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவதுடன் இந்தப் பிரச்சினையில் இருந்து அவர் வெளியே வருவதற்கான சாத்தியப்பாடான வழிகளை அடையாளப்படுத்தி அவ்வழிகளூடாக வெளியே வருவதற்கு அவரிடமே புதைந்துள்ள திறனகளை அல்லது திறமைகளை வெளிப்படுத்திக்கொடுக்கிறார். எமது பிரதேசத்தில் இவ்வாறு திறமையுள்ள தொழில்வாண்மைமிக்க உளவளதுணையாளர்களை இனம் கண்டு அவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள பிரச்சினையில் உள்ளோர் முன்வராமைக்கு முக்கிய காரணம் என்னவெனில் ஒருவர் உளவளதுணை சேவையைப் பெற்றுக்கொண்டால் அவரை மனநோயாளியாகப் பார்க்கும் நிலை எமது மக்கள் மத்தியில் உள்ள பெரிய ஒரு குறைபாடாகும். இது ஒரு பிழையான எண்ணக்கரு. வாழ்க்கையில் எதிர்ப்படும் எல்லாப் பிரச்சினைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆளுமை எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. குறிப்பாக இன்றைய சமூகத்தில் வாழ்க்கைச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆளுமைப்பண்பு எம் இளம் சமுதாயத்திடம் மிகவும் குறைவாகவே உள்ளது. எமது சமூகத்தில் இன்று மலிந்து போயுள்ள வாள்வெட்டுக்கள், வன்முறைகள், மதுப்பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை, வீதிவிபத்துக்கள், நீதிமன்றில் காணப்படும் மணமுறிவுமற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வழக்குகள் பறைசாற்றுகின்றன. இவ்வாறான புறநிலையில் வாழும் எம்மக்களின் வாழ்க்கைச் சிக்கல் நிலைகளை ஆரம்பத்திலேயே இனம்கண்டு பொருத்தமான ஆரோக்கியமான மகிழ்ச்சியான தீர்வுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான தொழில் ரீதியான புலமைமிக்க வழிகாட்டலாகவே உளவளத்துணைசெயற்பாடு பார்க்கப்படவேண்டும்.
பு.நக்கீரன்
மனநல ஆலோசகர்
சுகாதாரக்கல்வி அதிகாரி,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை