இன்றைய கால நகர்வில் நீரிழிவானது உலகை ஆட் டிப்படைக்கும் நோயாக மாறி வருகின்றது. நீரிழிவுக்கான பன்னாட்டுக்கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வுத்தகவலின் அடிப்படையில் தற்போது உலகில் 415 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் தத்தொகை 2040ஆம் ஆண்டளவில் 640 மில்லியனாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் 78.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்றும், இந்தத் தொகை 2040 ஆம் ஆண்டளவில் 140.2 மில்லியனாக இருக்கும் என்றும் நீரிழிவுக்கான பன்னாட்டுக்கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே இந்த நோயின் தாக்கம் என்பது எவ்வளவு பாரதூ ரமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இன்று மக்களிடத்தே காணப்படுகின்ற மிகப் பெரிய கேள்வியாதெனில் எவ்வாறு நோயைக்கட்டுப்படுத்தலாம் என்பதே. உண்மையில் இது வரைகாலமும் இதுபோன்ற பல நோய்கள் தாக்கத்தை ஏற்படுத்தியபோதும், அவற்றைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளஎதுடன் அதற்காக மருத்துவத்துறை அதிகபிரயத்தனங்ளை மேற்கொண்டுள்ளது.
நோய்க் காரணிகளை கட்டுப்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள்
அந்தவகையிலேநீரிழிவைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எவ்வாறான விடயங்கள் சவாலாக அமையப் போகின்றன என்பது பற்றி இப்பகுதியில் நோக்குவோம். ஏற்கனவேகுறிப்பிட்டதுபோன்று கட்டுப்பாட்டுக்குள்கொண் டுவரப்பட்ட நோய்களான அம்மை, இளம்பிள்ளைவாதம், மலேரியா போன்றவை தொற்றுநோய்களாகக் காணப்படுகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மருந்துகள்கண்டுபிடிக்கப்பட்டன. அதை நோயாளர்களுக்கு உள்ளீடாகக் கொடுத்தன்மூலம் பெரும்பாலான நோய்த்தடுப்புச்செயன் முறைகள் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டன. ஆனால், நீரிழிவுநோயைஎடுத்து நோக்கின்,இவ்விதமான செயற்பாடுகள் ஊடாக அதைக்கட்டுப்படுத்த முடியாது. இது பல்வேறு காரணிகளால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு தொற்று அல்ல. நீரிழிவு என்பது நீண்ட காலநோயாகும். இந்த நோயானது தொற்றுநோய் போன்று உடனடியாக ஏற்படுவதில்லை. எனவே நீரிழிவைக் கட்டுப்படுத்த வாழ்நாள் முழுவதும் அதற்குரிய கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்தல் என்பது மிகவும் அவசியமாகின்றது. கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதற்கு முன்பாக, நோய்க்காரணிகள் எவ்வாறுநோயை உருவாக்குகின்றன என்பது தொடர்பில் அறிந்து கொள்ளுதல் பொருத்தமானது. ஒருவருக்கு நீரிழிவு நோயானது பல்வேறு படிமுறைகளுனூடாக ஏற்பட்டு, உடலில் பல்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இந்த நோயைத் தடுக்க வேண்டுமெனில் அதைப்பிறப்பில் இருந்து கைக்கொள்ளுதல் மிகவும் முக்கியமானது.
நோயை ஏற்படுத்தும் காரணிகள்
இனிநோயை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற காரணிகள் எவை என்பதை அறிந்துகொள்வோம். நாம் உணவை உட்கொள்வதற்குமுக்கிய காரணங்களில் ஒன்று உடல் இயங்கு நிலைக்குத் தேவையான சக்தியைப் பெறுதலாகும். இந்தச் சக்தியை உணவிலுள்ள காபோவைதரேற்றுகள் மற்றும் இலிப்பிட்டுக்கள் மூலம் நாம் பெற்றுக்கொள்கின்றோம். இந்த உணவுப்பதார்த்தங்களை உடலில் பல்வேறு உறுப்புக்களுக்கு அனுப்பிவைக் கும் பணியை உடலும், குருதிச் சுற்றோட்டத் தொகுதியும் மேற் கொள்கின்றன. உடலில் உள்ள பெரும்பாலான கலங்கள் குருதிக்கோளங்களைத் தமது சக்தித்தேவைக்குப் பயன்படுத்துகின்றன. எனவே கலங்களுக்குக் குருதிக் குளுக்கோசை ஒழுங்குமுறையாக வழங்கும் பணியை ஈராலும், குருதிச் சுற்றோட்டத் தொகுதியும் செவ்வனே மேற்கொள்கின்றன.
அகநீர்ச் சுரப்பிகளில் இருந்து சுரக்கப்படும் ஓமோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. இந்தக் கட்டுப்பாடானது இன்சுலின் சுரப்பான்அளவிலோ அல்லது அதன் செயற்படுதிறனிலோ தங்கியுள்ளது. எனவே இன்சுலின் சுரப்பில் ஏற்படும் குறைபாடோ அல்லது இன்சுலின் செயற்படும் நிலையிலுள்ள குறைபாடுகளோ ஒருவரில் நீரிழிவுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றது.
எனவே இன்சுலின் சுரப்பு மற்றும் அதன் செயற்படுநிலையைப் பேணக்கூடியவகையில் எமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதுடன், அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்தலே ஒருவர் தன்னை நீரிழிவு நோயில் இருந்து பாதுகாப்ப தற்கான வழிவகையாகும்.
இனி நீரிழிவை ஏற்படுத்தும் முதன்மைக் கார ணிகள் எவை எனப் பார்ப்போம். பின்வரும் காரணிகளை நீரிழிவுக்கான பன்னாட்டுக் கூட் டமைப்பு முதன்மைக் காரணிகளாகப் பட்டியலிட்டுள்ளது.
- அதிகூடிய உடற்பருமன்.
- ஆரோக்கியமற்ற உணவு.
- உடல் உழைப்பு இன்மை .
- குடும்ப அங்கத்தவரிடையே நீரிழிவு காணப்படுதல்.
- உயர்குருதியமுக்கம்.
- வயோதிபம்
- குளுக்கோசின் சகிப்புத்தன்மை குறைதல்.
- கர்ப்பகால நீரிழிவு நோய்
- கர்ப்பகாலத்தில் சரியாக உணவு உண்ணாது போதல்.
நோய்த் தடுப்பு முறை
எனவே நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஒருவர் வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். இதைச் சுருக்கமாகக் கூறவேண்டுமாயின், ஆரோக்கியமான உடல்நிறையைப்பேணுவதும், மிதமான உடல் உழைப்பை ஏற்படுத்தலும் நீரிழிவில் இருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளாகும்.
ஆரோக்கியமான உடல் நிறையை எவ்வாறு அடையவேண்டுமெனில், ஆரோக்கியமான உணவுகளை உடலின் சக்தித் தேவைக்கு ஏற்ப உள்ளெடுத்தல் என்பது மிகவும் அவசியமாகின்றது. ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் சக்தியானது அவர்களின் பால் நிலை, வயது மற்றும் உடல் உழைப்பு என்பவற்றில் முக்கியமாகத் தங்கியுள்ளது. எனவே ஒருவர் தனக்குச் சாதாரணமாக எவ்வளவு அளவு சக்தி தேவைப்படுகிறது என்பதை அறிந்திருத்தல் அவசிய மாகின்றது. இதன் பின்னர்தான் உள்ளெடுக்கும் உணவுப் பொருள்களைக் கருத்திற்கொண்டு அவற்றின் அமைப்பு, அளவு என்பவற்றின் மூலம் அன்றாடம் உள்ளெடுக்கும் உணவால் கிடைக்கப்பெறும் சக்தியின் அளவைக் கணிப்பிடுதல் அவசியமானது. இந்த அளவானது தேவைக்கு அதிகமாக இருப்பின் அவை கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகின்றன. உடல் அங்கங்களில் கொழுப்புப் படிவடைதலே இந்த நோயின் உருவாக்கத்துக்கான ஆரம்பக்காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. கொழுப்புப் படிவதைத் தடுப்பதனூடாகவோ அல்லது அகற்றுவதனூடாகவோ நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுப்பது மட்டுமல்லாது,நீரிழிவுநோய் ஏற்பட்டவர்களில் அந்த நோயால் ஏற்படும் தாக்கத்தை இயன்றளவு வினைத்திறனுடன் கட்டுப்படுத்த முடியும் என அண்மைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் முதன்மைப்படுத்துவோம்!
கொழுப்புப் படிதலைக் கட்டுப்படுத்த கிரமமாக உடல் இழைப்பை ஏற்படுத்தக்கூடிய உடல் உழைப்பு அல்லது கிரமமான உடற்பயிற்சி மிகவும் அவசியமாகின்றது. இதை நாம் திட்டமிட்டுச் செயற்படுத்தவேண்டும். மேலும் மதுபானப்பழக்கவழக்கம், புகைத்தல் மற்றும் வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம் போன்றவை காரணமாகவும் உடலில் கொழுப்பு படிவு ஏற்படுகின்றது. எனவே ஒருவர் மதுபானப் பழக்கத்தை அல்லது புகைத்தலைக் கைவிடுவதன் மூலமும் நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். இன்றைய அவசர உலகில் நாம் எமது தேவைகளை அதிகரிக்கச் செய்வதன் ஊடாக மன அழுத்தத்துக்கு உட்படுகின்றோம். எனவே மன அழுத்தத்தைத் தடுக்கக்கூடிய வகையில் எமது வாழ்க்கையை அமைத்தல் என்பது இன்றியமையாததாகும். நீரிழிவு நோயாளிகளுள் பலர் மன அழுத்தம் காரணமாகவும், நோயின் பக்கவிளைவு காரணமாகவும் குருதியில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப் படுத்த முடியாமல் தவிக்கின்றனர். கட்டுப்பாடற்ற நீரிழிவால் ஏற்படும் விளைவுகளை அனுபவித்துத் துன்பப்படுவதை அவதானிக்க முடிகிறது.
எனவேதான் பன்னாட்டு நீரிழிவுக்கான கூட்டமைப்பு ஒருவர் குறைந்தது ஒரு நாளைக்கு 6 தொடக்கம் 8 மணித்தியாலயங்கள் நித்திரைசெய்வது அவசியம் என அறிவுறுத்துகிறது. எனவே வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் வாழ்வதே நீரிழிவு நோயில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழிமுறையாக இருக்கமுடியும். இதை உணர்ந்து கொண்டும், சிந்தனைபூர்வமாகத் தெரிந்துகொண்டும் வாழ்வியல் முறைகளில் மாற்றங்களைக் கண்டுகொள்ள அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிப்போம். உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் முதன்மைப்படுத்துவோம்!
இ.சுரேந்திரகுமார்.
சமூக மருத்துவ நிபுணர், மூத்த விரிவுரையாளர்,
தலைவர், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.