தைரொயிட் பிரச்சினையுள்ள நோயாளருக்குக் குறிப்பாக கர்ப்பவதிகள் தெரிந்திருக்கவேண்டிய நடை முறைகள் முதன்மையாக நோக்கப்பட வேண்டியவை. தைரொயிட் நோயின் தன்மை, அதற்கான குளிசை மருந்துகளின் அளவு மற்றும் குருதிப் பரிசோதனை (தைரொயிட் ஓமோன்) செய்யும் கால இடைவெளி போன்றன கர்ப்பக்காலத்தில் சாதாரண நோயாளரைப் போன்றல்லாது வேறுபடுகின்றன. மருத்துவர் பரிந்துரை செய்து வழங்குகின்ற மருந்தைச் சரியான முறையில் கிராமமாக உள்ளெடுத்தல் வேண்டும் கர்ப்பகாலத்தில் முதல் 12 வாரங்கள் மிக முக்கிமானகால கட்டம் இந்தக் காலப்பகுதியின் போதே பிறக்கபோகும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளின் வளர்சி என்பன அதிகம் ஏற்படுகின்றன.
எனவே கர்ப்பகாலம் முழுமையும் குறிப்பாக முதல் 12 வாரங்களும் தேவையான அளவு மருந்தை வைத்திய ஆலோசனைப்படி உள்ளெடுக்கவேண்டும். இதன் மூலம் ஏற்படும் இச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும். சில சில நோயாளர்களுக்கு கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி (Goitre Nodule) இருந்தால் கர்ப்பம் தரிக்க முன்னரோ அல்லது பின்னரோ வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம். குறிப்பாக ஸ்கான் பரிசோ தனை, இழையப் பரிசோதனை (FNAK) போன்றவற்றைக் குறிப்பிடலாம். தைரொயிட் சுரப்பியில் அரிதாகப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.
கர்ப்பிணியொருவர் கர்ப்ப காலத்தின் போது மிகவும் சிரத்தையுடன் தனது தைரொயிட் பிரச்சினையைக் கவனித்துக்கொள்ளுதல் அவசியம். இதனால் கர்ப்பிணிக்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும். வடமாகாணத்திற்குரிய ஒரேயொரு அகஞ்சுரக்கும் தொகுதி (ஓமோன்) சிகிச்சை நிலையம் யாழ். போதனா மருத்துவமனையில் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. எனவே தேவையேற்படுகின்ற கர்ப்பவதிகள் நிபுணத்துவமான சிறப்பான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம். இதுவே நோயாளர்களுக்கு இன்றியமையாத தேவைப்பாடு.
தைரொயிட் சுரப்பு அதிகமாகவுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்தால்
தைரொய்டசுரப்பு அதிகமுள்ள நோயாளருக்குப் பொதுவாக “Carbimazole” என்ற மருந்தே வழங்கப்படுகிறது. இந்த மருந்தைக் கர்ப்பம் தரித்து முதல் 12 வாரங்களுக்கு உள்ளெடுத்தல் கூடாது. இதற்குப் பதிலாக ” Propylthiocarcil” என்ற மருந்தை உள்ளெடுத்தல் வேண்டும். கர்ப்ப காலத்தின் 12 வாரங்கள் கழிந்தபின்னர் மேற்படி “Carbimazole” மருந்தை உள்ளெடுக்க முடியும். கர்ப்ப காலத்தில் உள்ளேடுக்க வேண்டிய மருந்தின் அளவானது மாறுபட நேரிடுகின்றது. எனவே குறித்த காலத்துக்கொருமுறை குருதிப் பரிசோதனையை மேற்கொண்டு வைத்திய ஆலோசனைப்படி மருந்தின் அளவைத் தேவையேற்படின் மாற்றி உள்ளெடுத்தல் அவசியம்.
தைரொயிட் சுரப்பு அதிகமாக உள்ளோருக்கான மருத்துவ சிகிச்சையை நோக்கின் பொதுவாக 18 தொடக்கம் 24 மாதங்களுக்கே குளிசை வழங்கப்படுகிறது. குணமடையாதவர்களுக்கு மேலதிக சிகிச்சை வழிமுறைகள் கிடைக்கப்பெறுகின்றன.
தைரொயிட் சுரப்பு குறைவாகவுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்தால்
தைரொயிட் சுரப்பு குறைவாகவுள்ள பெண்ணொருவர் தான் கர்ப்பமாகவுள்ளேன் என உறுதி செய்தவுடனேயே (சிறுநீரில் HCG பரிசோதனை மூலம்) வைத்திய ஆலோசனையைப் பெற்று தைரொக்சின் மருந்தின் அளவை 25 – கே.ஜி (KG) இனால் அதிகரித்து உள்ளெடுத்தல் அவசியம். கர்ப்ப காலத்தின் முதல் 12 வாரங்களும் சிசுவின் வளர்ச்சியில் முதன்மையான பங்கை வகிக்கின்றன. இந்தக் காலத்திலேயே குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புக்களின் வளர்ச்சியானது முதன்மை பெற்றிருக்கும். எனவே இக்காலகட்டத்தில் தேவையான அளவு தைரொக்சின் குளிசையை வைத்திய ஆலோசனைப்படி உள்ளெடுத்தல் அவசியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் தைரொயிட் ஓமோனின் அளவுகளில் பல விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. குருதியிலுள்ள தைரொயிட் ஒமோனின் அளவை குறித்த காலத்துக்கொருமுறை பரிசோதித்துக்குளிசையின் அளவைத்தேவையேற்படின் மாற்றி உள்ளெடுத்தல் வேண்டும். தைரொயிட் மருந்தை சரியான அளவில் உள்ளெடுக்காதவிடத்து பிறக்கப்போகும் குழந்தைக்கும் தாய்க்கும் பலவகையான பிரச்சினைகள் ஏற்படலாம்.
தைரொயிட் பிரச்சினையுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரிக்க விரும்பினால் செய்யவேண்டியது
பெண்ணொருவருக்குள்ளதைரொயிட்ட பிரச்சினை என்பது தைரொயிட் சுரப்புக் குறைவாக இருக்கும் நிலையாகவோ அல்லது தைரொயிட் சுரப்பு அதிகளவில் சுரப்பதால் ஏற்படும் பிரச்சினையாகவோ இருக்கலாம். தைரொயிட் சுரப்புக் குறைவாகவுள்ளோர் சோம்பல், அதிக நித்திரை, உடற்பருமன் அதிகரித்தல், மலச்சிக்கல், மாதவிடாயின் போது அதிகளவு குருதி வெளியேறுதல் மற்றும் குளிர்தாங்க முடியாதிருத்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பர். இவர்களுக்கு கழுத்துப் பகுதியில் கழலையோ, வீக்கமோ இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். இவ்வாறான அறிகுறிகளைக் கொண்டிருப்போர் தங்களது குருதியில் உள்ள தைரொக்ஸின் ஓமோனின் அளவைப் பரிசோதித்து பார்ப்பது மிகவும் அவசியமாகும். தைரொயிட் ஓமோனின் அளவு குறைவாக இருக்கும் போது தைரொக்ஸின் மருந்தை உள்ளெடுத்தல் மிக அவசியம். மருத்துவர் ஆலோசனைப் படி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம். தைரொயிட் சுரப்புக் குறைவான நோயுள்ள (Hypothyroidism)பெண்கள் கர்ப்பம் தரிக்க முன்னரே தங்களது நோயைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருத்தல் மிக அவசியம். இவ்வாறு இல்லாமல் கர்ப்பம் தரிக்கும் போது பலவகையான பிரச்சினைகள் ஏற்படலாம். இதே போல தைரொயிட் சுரப்பு அதிகமாகச் சுரக்கும் போது படப் டப்பு, அதிகளவு வியர்த்தல், உடற்பருமன் குறைதல், அடிக்கடி மலம் கழித்தல் (வயிற்றோட்டம் போல). மாதவிடாயின் போது குருதி வெளியேற்றம் குறைவடைதல் அல்லது மாதவிடாய் தாமதமாதல் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமை போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவ்வாறான குணங்குறிகள் இருக்கும் போது தமது குருதியில் உள்ள தைரொயிட் ஓமோனின் அளவை வைத்திய ஆலோசனைப்படி பரிசோதித்துச் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறான பிரச்சினையுடையோர் கழுத்தில் வீக்கத்துடனோ அல்லது கண்கள் வெளித்தள்ளி பல வகையான கண் தொடர்பான பிரச்சினைகளுடனோ இருக்கலாம். தைரொயிட் சுரப்பு அதிகமாகச் சுரப்பதைக் கட்டுப் படுத்துவதற்கும் சிறப்பான மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. இவ்வாறான நோயாளர்களும் கர்ப்பம் தரிக்கும் முன்னர் தமது நோயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல் வேண்டும்.
M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு மருத்துவ நிபுணர்,
யாழ். போதனா வைத்தியசாலை.