உடற்பருமன் என்பது “உடலின் உயரம் மற்றும் வயது என்பவற்றுக்கிடையேயான தொடர்பில் அதிகரித்த கொழுப்புச்சத்து அசாதாரணமாக தேங்கி நிறை அதிகரிப்பை ஏற்படுத்தல்” என பொருள்கொள்ளப்படுகிறது எமது நாளாந்த செயற்பாடுகளில் தேவையான அளவு கலோரிப்பெறுமானத்துக்கு அதிகமான உணவுப்பதார்த்தங்கள் அதாவது,காபோவைதரேற்று ஈரலிலும், தசைக்கலங்களிலும் சேகரிக்கப்படுகிறது. இதேபோல கொழுப்புதோலின் அடிப்பகுதியிலும்,உள் அவயங்களைச் சுற்றியும், குருதிக்குழாய்களிலும் படிவுறுகின்றது.
உடற்திணிவுச் சுட்டெண்
பன்னாட்டு ரீதியாக ஒருவரின் பால், வயது, உயரம் என்பவற்றின் அடிப்படையில்உடற்திணிவுச்சுட்டெண் காணப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் இதனை அறிந்து வைத்திருப்பதன் மூலம் தமது உடற்பருமன் அதிகரிப்பையும் அதனை ஆரம்பத்திலேயே தடுக்கக் கூடிய வழிவகைகளையும் மேற்கொள்ளலாம். உடற் திணிவுச்சுட்டெண் ஆனது உடல்நிறையைகிலோகிரா மில் (kg) உயரத்தின்வர்க்கத்தினால் (m2) வகுப்பதன் மூலம் பெறப்படுகிறது.
இதன் அடிப்படையில் உடற்திணிவுச் சுட்டெண் (BM) 18 இலும் குறைவாக காணப்படின் குறைந்த உடல் நிறையுடையவர்களாக கருதப்படுவர். இது மருத்துவ ரீதியாக விரும்பத்தக்கது அல்ல. இவர்கள் வைத்திய ஆலோசனை மற்றும் உணவுப் போசணை மீது ஆர்வம் செலுத்தி,உடற்பருமனை சரியாக பேணவேண்டும். இதேபோன்று உடற்திணிவுச்சுட்டெண்டு23 இலும் அதிகமாக காணப்படின் அதிகரித்த உடற்பருமனாக கருதப்படும். 27இலும் அதிகமாக உடற்திணிவுச் சுட்டெண் காணப்படுவது மருத்துவ ஆலோசனை பெறுவதற்குரிய அறிகுறியே. கண்டிப்பாக உடற்பரும னைக் குறைப்பதற்குரிய வழிவகைகளை பின்பற்ற வேண்டும்.
உடற் பருமன் அதிகரிப்பதற்கான காரணம்
போதுமான அளவு உடற்பயிற்சி இன்மை, தவறான உணவுப்பழக்க வழக்கம், மன அழுத்தம்,சில மருந்துகளின் பாவனை, பரம்பரைக் காரணங்கள் மற்றும் உடல்ரீதியான ஓமோன்செயற்பாடுகளினாலும் உடற் பருமன்அதிகரிக்கலாம். அதில் தைரொக்சின் வளர்ச்சி ஓமோன் என்பன முக்கியபங்குவகிக்கின்றன. இவ்வா றான உடற்பருமன் அதிகரிப்பானது பல்வேறுபிரச்சினைகளையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றன.
அந்த வகையிலே என்புமூட்டு நோய்கள் குறிப்பாக உடற்பருமனை தாங்குகின்ற முழங்கால், குதிக்கால் மூட்டுக்களில்தாக்கங்கள் மற்றும் வலிபோன்றன ஏற்படலாம். மூச்சு விடுதலில் சிரமம், குருதிக்கலன்களிலும் உள் அங்கங்களிலும் கொழுப்புப் படியறுவதால் குருதி அமுக்கம் அதிகரித்தல், பெண்களைப் பொறுத்தவரை மார்பகம் மற்றும் கருப்பை போன்றவற்றில் கொழுப்பு படியுறுவதால் பிள்ளைப்பேறுதொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். மேலும் நரம்புகளுக்கான குருதி விநியோகம் தடைப்படுவதால் கைகால்விறைப்பு ஏற்படலாம். இதய நோய், உயர் குருதி அமுக்கம் போன்ற நீண்டநாள் நோய் நிலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடும். பித்தப்பையில் கற்கள் உருவாகுதல், மனஉளைச்சல்,சமூக ஒதுக்கம் போன்றநிலைக்கும் இட்டுச் செல்லக்கூடும்.
உணவுக் கட்டுப்பாடு
இத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய உடற்பருமன் அதிகரிப்பினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாளாந்த செயற்பாடுகளை மாற்றியமைத்தல் மிக முக்கியமானசெயற்பாடு. அந்தவகையில் எமது உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிக அவசியமாகும். மாப்பொருள், இனிப்பு, கொழுப்பு சேர்ந்த உணவுப் பொருள்கள் உட்கொள்வதை குறைத்தல் அல்லது தவிர்த்தல் விரும்பத்தக்கது. உதாரணமாக ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி, வெண்ணெய், ஐஸ்கிறீம் கிழங்கு வகைகள், எண்ணைப்பண்டங்கள் இனிப்பு உணவுகளைத் தவிர்த்தல் நன்று.
மேலும் தினமும் 30 நிமிடத்துக்கு குறையாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பருமனானவர்கள் தினமும் 60 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்யவேண்டும். வீட்டு வேலைகளில் ஈடுபடுதல், வேகமாக கைகளை வீசிநடத்தல் போன்றனவும் இதனுள் அடங்கும். உடற்பயிற்சி மனதுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும்.
தானிய உணவு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு நேர உணவாக உட்கொள்ளலாம். மேலும் உணவில் கீரைவகைகள் இலைக்கறிவகைகள், மரக்கறிவகைகள் சேர்த்துக் கொள்வது கொழுப்புச்சத்து அதிகரிப்பை குறைக்கும். மேலும் தினமும் சீரான மலங்கழிக்கும் பழக்கத்தை கொண்டிருத்தல் நல்லது. இது உடற்பருமன் அதிகரிப்பில்தாக்கத்தை நேரடியாக செலுத்தாவிட்டாலும் உணவுக்கால்வாய்த்தொகுதியை சீராக பேணுவதன்மூலம் சமிபாட்டை அதிகரிப்பதோடு பாதிப்புக்களை தவிர்த் துக்கொள்ளலாம். தியானம், சிறந்தபொழுதுபோக்கு குடும்ப உறுப்பினர்களிடையேயான ஊடாட்டம் போன்றனவும் உடற் பருமனில் தாக்கம் செலுத்தும்.
வாழைப்பழம்,அப்பிள்,மாதுளம் பழம் என்பன உட்கொள்வதால் தேவையான போசணைப்பெறுமானம் கிடைப்பதோடு மேலதிகமான கொழுப்பு காபோவைதரேற்று என்பன கழிக்கப்படும். வெண்ணெய் அகற்றிய மோர் அருந்துவது நல்லது மேலும் உணவு உட்கொள்ளும் போது அவசரப்பட்டு உட்கொள்வது நல்லதல்ல. குறைந்தபட்சம் 15 தொடக்கம் 20 நிமிடங்கள் ஒதுக்கி ருசித்து நன்றாக மென்று சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது தொலைக்காட்சி பார்த்தபடி உணவு உட்கொள்வதால் உடற்பருமன் அதிகரிப்பதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரோக்கியமாக வாழ்வோம்
உணவு உட்கொண்டபின்நடத்தல் போன்ற சிறியளவு அப்பியாசம்செய்தல்நல்லது இரவில் அதிகளவு உணவு உட்கொள்வதை தவிர்த்தல் நல்லது இரவிலேயே கொழுப்பு உற்பத்தி அதிகமாக இடம்பெறுவது மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது. எனவே அதற்கு இடம் தராமல் எமது உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறப்புடன் வாழ்வோம். ஆரோக்கியமான வாழ்வுதனை வாழ்வோம். அதிகரித்த உடற்பருமன் உடையோர் மருத்துவ ஆலோசனைப்படி வைத்தியரின் சிபாரிசின்படி தேவையேற்படின் உடற்பருமனைக் குறைப்பதற்கு மருந்துகளையும் உள்ளெடுக்க வேண்டியிருக்கும்.
பத்மராத பத்மநிரூபன்
தாதிய உத்தியோகத்தர்,
சத்திரசிகிச்சைப்பிரிவு
யாழ் போதன வைத்தியசாலை.