வயதுடன் ஏற்படும் பார்வைக்குறைவின் பின்னாகவோ அல்லது பார்வைக்குறைபாடு உடைய விருந்தினர்ங்கள் எங்களுடைய வீடுகளுக்கு வருகை தரும் போதோ வீடுகள் அவர்களுக்கு நட்பானதாகவும், ஏற்ற விதத்திலும் பெரும்பாலும் அமைந்திருப்பதில்லை. அவ்வாறு அமையாததன் காரணமாக பல உள அசெளகரியங்களுக்கும், உடல் காயங்களுக்கும் உள்ளாக நேரிடுகின்றது. மிகுந்த விருப்போடு கட்டிய வீடு பார்வைக்குறைவின் பின்னர் வாழ்வதற்கு அசெளகரிய மானதாகத் தோன்றுவது எதனால் என்ற கேள்விகளுக்கு பதில் கண்டுகொள்வது நன்று.
அழகியலுக்கு முன்னுரிமை கொடுத்து அமைக்கப்படும் வீடுகளில் பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் வாழ்வதற்கு ஏற்றவகையில் சில அம்சங்களை இணைத்துக் கொண்டால் வேண்டத்தகாத விளைவுகளை தவிர்க்கலாம்.
புதிதாக வீடுகளை அமைக்கும் போது நாம் கவனிக்கவேண்டிய சில விடயங்கள் குறித்து நோக்குவோம்.
தரை அமைப்பு
பார்வைக் குறைபாடுடைய அங்கத்தவர் பயன்படுத்தும் பகுதி வழுக்கும் தரை அமைப்பு அற்றதாக அமைந்திருந்தால் சிறப்பு. பார்வைக்குறைபாடு உடையவர்கள் படிகளை படிகளை இலகுவில் இனங்காணத்தக்க வகையில் வர்ணத் தெரிவை மேற்கொள்ளுதல் வேண்டும். நில மாபிள் நிறத்திலிருந்து படி மாபிள் நிறத்தைக் கடும் நிறமாகவோ அன்றி வேறு நிறத்திலோ அமைதகக் கொள்ளலாம். தரைமட்டங்கள் வெவ்வேறு தளங்களில் அமையும் போது அவற்றை இலகுவில் இனங்கண்டு கொள்ளும் விதமாகவும் தம்மைநிலை நிறுத்திக் கொள்ளும் வகையிலும் நிறத் தேர்வுகளைச் செய்தல் வேண்டும். அல்லது ஒரு தளத்தின் முடிவை கடும் நிறத்தில் கோடிட்டுக் காண்பிக்க வேண்டும்.
சுவர் மற்றும் கதவுகளின் அமைப்பு
சுவர்களிலிருந்து கதவுகளை இலகுவில் இனங்காணக்கூடிய வகையில் நிறத்தெரிவுகளைச் செய்தல் வேண்டும் சில வீடுகளில் கதவுகளையும் சுவரையும் இனங்கண்டுகொள்ள முடியாது. ஒரே நிறப்பூச்சுகளை பூசியிருப்பர். உண்மையில் கதவுகளை இலகுவில் இனங்கானக்கூடிய வகையில் அமைப்பதன் மூலம் தடுக்கி விழுதல், தலையில் அடிபடுதல் போன்ற விபத்துக்களைத் தவிர்க்க முடியும் குறிப்பாக மலைசல கூடங்களில் இதுகுறித்த கரிசனை அதிக அவதானத்துடனும், கவனிப்புடனும் அமைய வேண்டும் பல வீடுகளில் கவர்நிறத்திலேயே மலசல கூடக்கதவின் நிறத்தையும் தேர்வு செய்கின்றனர். இந்தச் செயல்நிலைகள் தவிர்க்கப்படவேண்டும்.
கழிப்பறை அமைவு
மலசல கூட இருக்கையின் வர்ணமும் சுவர் மாபிள் வர்ணமும் ஒரே நிறத்தில் இருத்தல் கூடாது. கடும் மென்மை வர்னங்களில் அவற்றை அமைப்புற வடிவமைக்கும்போது ஒளி குறைந்த வேளைகளிலும் மலசலசுவடத்தை (கொமேட்) இனங்காண்பது இலகுவாக இருக்கும். இது அவர்களின் உளச் செளகரியத்தை மேம்படுத்தும். மலசல கூட இருக்கையில் அமர்வதற்கும் எழும்புவதற்கும் ஏற்றபிடிமான அமைப்புக்களை பொருத்திக் கொள்ள வேண்டும்
பொருள்களின் அமைவும் கரிசனையும்
இந்தச் செயல் மாதிரிகள் வீட்டைப் பார்வை குறைவுற்றவர்களுக்கு ஏற்ற நட்புச்சூழலாக மாற்றி அமைக்கும். அவர்களின் வாழ்க்கை செளகரியமாக அமைந்திட உதவிடும்.அத்துடன் நாளாந்தம் வீட்டைப் பயன்படுத்தும் போதும் அவர்களின் நட்புச்சூழலில் குழப்பங்களை ஏற்படுத்திவிடாது பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். அவர்களுடைய அறையில் குறைந்தளவு பொருள்களையும்,தேவைக்கு உரித்தானவற்றையும்மட்டுமே வைத்திருத்தல் வேண்டும். முடியுமானவரை அவற்றைத் தொடர்ந்தும் ஓரிடத்தில் பேணுதல் வேண்டும். அதாவது அடிக்கடி இடமாற்றம் செய்யாது இருக்க வேண்டும். மேடு பள்ளமான தரையமைப்பு, ஈரமான தரை, மங்கிய வெளிச்சம், ஒழுங்கற்று சிதறிக்கிடக்கும் பொருள்கள் போன்ற அமைவுகள் அடிக்கடி தடுமாறி விழக் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே இந்த விடயங்களில் அதிக கவனத்தைச்செலுத்தி இயலுமானவரை அதிலிருந்து விடுபட உங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
இறுக்கமற்ற நில விரிப்புக்களை அகற்றிக் கொள்ளுதல் வேண்டும். அல்லது நில விரிப்புக்களைப் போடா திருத்தல் நன்று மின்சார ஒழுக்குகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பான மின்னிணைப்புக்களைப் பொருத்திக்கொள்ளுதலும் இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அவர்களுக்கு இணக்கமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும்.
மருத்துவர். பொ.ஜெசிதரன்
சுகாதார மருத்துவ அதிகாரி
மாநகரசபை, யாழ்ப்பாணம்