நீரிழிவு ஓர் அறிமுகம்
நீரிழிவு நோயானது‚ சதையினால் சுரக்கப்படும் இன்சுலின் ஓமோன் சுரப்பு பெருமளவில் குறைவடையும் போது அல்லது அதன் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படும் போது‚ குருதியில் குளுக்கோஸ் எல்லை மீறி அதிகரிப்பதால்ஏ ற்படுகிறது. அதிகரிக்கும் குருதிக் குளுக்கோஸானது உடலின் பல அங்கங்களில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக கண்‚ நரம்புத் தொகுதி இதயம் மற்றும் சிறுநீரகத்தை இது வெகுவாக பாதிக்கின்றது.
கடந்த இரு தசாப்தங்களாக உலகளாவியரீதியில் நீரிழிவு நோயானது பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆண்‚பெண் இருபாலாரையும் நீரிழிவு சரி சமனாகவே பாதிக்கிறது. நீரிழிவு ஏற்படும் சந்தர்ப்பமானது‚ பின்வரும் காரணிகளால் அதிகமாகியுள்ளது.
- குடும்பத்தில் நீரிழிவு நோயாளர்கள் உள்ளமை.
- அதிக உடல்நிறை (உடற்திணிவுச் சுட்டி >25kg/m2)
- உடற் பயிற்சியின்மை.
- இனம்.
- ஏற்கனவே அறியப்பட்ட நீரிழிவிற்கு முன்னானநிலை.
- கர்ப்ப கால நீரிழிவு / உடல் நிறை கூடிய பிள்ளைப் பேறு >4 Kg
- உயர்குருதியமுக்கம் (140/90 MnHg )
- அதிகரித்த கொலஸ்ரோல் ((HDL < 35mg /dl , TG >250mg/dl )
- சூலக நீர்க்கட்டிகள், தோல் மடிப்புக்களில் கருமை படர்ந்த நிலை
உலக சுகாதார நிறுவனமானது நீரிழிவுநோய் நிர்ணய எல்லையை பின்வருமாறு கூறுகிறது. குணங்குறிகள் உள்ள
நோயாளரில் பின்வரும் ஓர் ஆய்வு கூட முடிவும்‚ குணங்குறிகளில்லாதவர்களிற்கு இரு வெவ்வேறு ஆய்வுகூட முடிவுகளும் தேவைப்படுகிறது.
1. 08 மணித்தியாலங்கள் உணவு எதுவும் உட்கொள்ளாமல் குருதியில் குளுக்கோஸ் அளவு >7.0 mmol/l (126mg / dl (Fasting Plasma Glucose)
2. எழுந்தமான குருதிக் குளுக்கோஸ் அளவு ,>11.1mmol /l (200 mg /dl) (Random Plasma Glucose )
3.HbA1c 6.5 நீரிழிவானது குணப்படுத்த முடியாததாயினும் கட்டுப்பாட்டில்வைத்திருக்கக்கூடியது.
நரம்புத் தொகுதி ஓர் அறிமுகம்
மனித நரம்புத் தொகுதிமுழுவதும் சிறப்புக்கலங்களான நரம்புக் கலங்களால் (Neurone) ஆனது. அது தூண்டல்களை வாங்கி நரம்புகளினூடான கணத்தாக்கங்களாக விளைவு அங்கங்களிற்கு கடத்தும் தொழிலைச் செய்கிறது. இதனால் மனித உடலானது தூண்டல்களிற்கேற்ற ஒருங்கிணைந்த துலங்கல்களை விளைவுகளாக காட்டக்கூடியதாகவுள்ளது.
மனித நரம்புத் தொகுதியானது விசேடமாக கடந்த காலங்களில் பெற்ற தரவுகளை சேமித்து ஒருங்கிணைத்து தேவையான பொழுதுகளில் வழங்கி பகுத்தறிவாகிய ஆறாம் அறிவால் உயர்ந்து விளங்குகின்றது.
நரம்புத் தொகுதியானது மைய நரம்புத்தொகுதி‚ சுற்றயல் நரம்புத் தொகுதி‚ தன்னியக்க நரம்புத் தொகுதியையும் கொண்டது.
மையநரம்புத் தொகுதியானது‚ மூளையையும் முண்னாணையும் கொண்டது. சுற்றயல் நரம்புத் தொகுதியானது‚ மண்டையோட்டு நரம்புகளையும் முன்னாண் நரம்புகளையும் கொண்டது.
தன்னியக்க நரம்புத் தொகுதியானது பரிவு‚ பராபரிவு நரம்புகளைக் கொண்டது. தன்னியக்க நரம்புகள் இதயம் சுரப்புக்கள் மற்றும் வழவழப்பான தசைகளின் தொழிற்பாட்டிற்கு உதவுகிறது. உடலில் அவசர நிலைமைகளின் போது பரிவு நரம்புகளும் சக்திசேமிப்புக்கும் புதுப்பித்தலுக்கும் பராபரிவு நரம்புகளும் தொழில் ஆற்றும்.
மூளை மற்றைய அங்கங்களைப் போலன்றி குளுக்கோஸை மாத்திரமே போசணைப்பொருளாக பயன்படுத்துகிறது. அதனால் குருதிக் குளுக்கோஸ் கூடிய நிலையிலும் குறைந்த நிலையிலும் மூளையானது பாதிப்படைகிறது.
நீரிழிவு நோயாளர்களில் ஏற்படும் நரம்புப் பாதிப்புக்கள். ((Diabetic Neuropathy)
நீரிழிவினால் ஏற்படுகின்ற உயர்மட்ட குளுக்கோஸ் ஆனது குருதிக்குழாய்களில் இரு வேறுவிதமான சிக்கல்களை உருவாக்கும்.
1. பருமனான குருதிக்குழாய்ச் சிக்கல்கள் உதாரணம் – பாரிசவாதம்
2. நுண்ணிய குருதிக்குழாய்ச் சிக்கல்கள் உதாரணம் – நீரிழிவு நரம்புப்பாதிப்பு
பாரிசவாதம்
மூளைக்கு குருதியானது இரு பெரும் நாடிகளூடாக வழங்கப்படுகிறது. அந்நாடிகளிலோ அல்லது அதன் கிளைகளிலோ ஏற்படும் கொழுப்புப் படிவுகளாலும் அவை உடையும் போது ஏற்படும் இரத்த உறைவுக்கட்டிகளாலும் உண்டாகும் அடைப்பு மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பினாலேயே பாரிசவாதம் உருவாகிறது.
திடீரென ஏற்படும் இரத்தோட்டக் குறைவினால் மூளையின் அப்பகுதி படிப்படியாக இறப்படைய நேரிடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மூளைப்பகுதியின் கட்டுப்பாட்டில்இருக்கும் உடல் பகுதி செயலிழக்கிறது.
பாரிசவாதம் வருவதற்கான சந்தர்ப்பம் சாதாரண ஒருவரிலும் பார்க்க நீரிழிவு நோயாளர்களில் இரு மடங்காகவும் துரிதமாகவும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நீரிழிவு நோயாளர்களில் பாரிசவாதம் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் காரணிகளாவன,
- குருதிக் குளுக்கோஸ் கட்டுப்பாடில்லாமல் இருத்தல்.
- அதிகரித்த உடற்பருமன் ((Metabolic Syndrome)
- அதிகரித்த குருதிக் கொலஸ்ரோலின் அளவு.
- புகைப்பிடித்தல்.
- குடும்பத்தில் பாரிசவாதம் உள்ளமை.
- அதிகரித்த வயது.
- சிறுநீரில் அல்புமின் வெளியேறல்.
நீரிழிவு நோயாளர் பாரிசவாதத்தை தடுக்க செய்ய வேண்டியவை.
- குருதியில் குளுக்கோஸின் அளவைக்கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
- உடல் பருமனை குறைத்தல்.
- இரத்தஅழுத்ததை கட்டுப்படுத்தல்:- ( 130/80 mmHg)
- இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக்குறைத்தல்.
- புகைப்பிடித்தலை தவிர்த்தல்.
- பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள். (Aspirin, Clopidogrel) போன்றவற்றை தவறாது உள்ளெடுத்தல்.
பாரிசவாதம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுமாயின் (ஒரு பக்க கையோ அல்லதுகாலோ அல்லது கையும் காலுமோ செயலிழத்தல்‚ பேச்சுத் தடை‚ நடைத்தள்ளாட்டம்‚ திடீர் கண்பார்வைக் குறைவுகள்) உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வேண்டும். ஏனெனில் குருதிக்கட்டியை கரைக்கும் மருந்து (Thrombolytictherapy) பாரிசவாத அறிகுறி ஏற்பட்டு முதல் 4 1⁄2 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்படல் வேண்டும்.
பாரிசவாதம் ஏற்பட்ட பின்னும் தவறாது மருந்துகளை உட்கொள்வதோடு உடற்பயிற்சிகள், ஆலோசனைகள் என்பவற்றை ஒழுங்காகபெற்றுக் கொண்டு மேலுமொரு தாக்கம் வராமல் பாதுகாக்க வேண்டும்.
நீரிழிவால் ஏற்படும் நரம்புநோய் (Diabetic Neuropathy)
நரம்புகளிற்கு குருதியை வழங்கும் நுண் குருதிக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் நீண்டகால உயர் குருதிக் குளுக்கோஸ் ஆகியவற்றால் அது ஏற்படுகிறது. வயதான நோயாளர்களில் இது நீரிழிவை கண்டுபிடிக்கும் போதே இனங்காணப்படலாம்.
ஆனால் இன்சுலினில் தங்கியிருக்கும் நீரிழிவை உடையவர்களில் நீரிழிவுஏற்பட்டு 10-20 வருடங்களின் பின்பே இது வெளிக்காட்டப்படுகிறது.இது பின்வருமாறு வகைப் படும்.
- சமச்சீரான உணர்ச்சி நரம்புப் பாதிப்பு
- சடுதியான நோவுடன் கூடிய நரம்புப்பாதிப்பு
- ஒற்றைநரம்புப் பாதிப்பு { பல்வேறு ஒற்றை நரம்புகள் தனித்தனியாகப் பாதிக்கப்படல்.
- சமச்சீரற்ற இயக்கநரம்புப் பாதிப்பு
- தன்னியக்க நரம்பு நோய்கள்
சமச்சீரான உணர்ச்சி நரம்புப் பாதிப்பு
இதன் ஆரம்ப அறிகுறிகளாவன நோயையோ வெப்பத்தையோ அல்லது அதிர்வுகளையோ உணர முடியாத விறைப்பு நிலையாகும். இதன் நாட்பட்ட நிலைகளில் பஞ்சின் மேல் நடப்பதுபோல் உணர்வார்கள். கால்களே கைகளைவிட அதிகம் பாதிப்படையும். உணர்ச்சிகள் குறைவுறுவதால் சிறுசிறு காயங்களும் கவனிக்கப்படாமல் கொப்புளங்களாகவோ அல்லது புண்களாகவோ காணப்படும். மூட்டுகளிற்கான நரம்புப் பாதிப்பு நரம்பிழந்த மூட்டுக்களாக உருவாகும்.
சடுதியான நோவுடன் கூடிய நரம்பு பாதிப்பு
நோயாளிகள் கால்கள் பாதங்கள் போன்ற வற்றில் எரிவுநோ போன்றவற்றைக் கொண்டிருப்பர். இரவுகளில் கூடுதலாக இருக்கும். படுக்கை விரிப்பின் அழுத்தமே தாங்க முடியாமல் அவதியுறுவர். இது நீரிழிவைக் கண்டுபிடிக்கும் போதே காணப் படலாம். அத்துடன் குருதிக் குளுக் கோஸை திடீரென கட்டுப்பாட்டில் கொண்டுவரும் போதும் இது ஏற்படுகிறது. நீரிழிவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இது தானாகவே 3-12 மாதங்களில் மாறும். இதில் ஒருவகையானது நாட்பட்ட நோவுடனான பாதிப்பு நீண்டகால நோயாளிகளிலே இது ஏற்படுகிறது. சிகிச்சை பலன்அளிப்பதும் கடினம்.
தனித்தனி நரம்புகளின் பாதிப்பு
இந்த வகையான பாதிப்பு உடலின் எந்த நரம்பையும் பாதிக்கலாம். கண் தசை நரம்புகள் கூடுதலாகப் பாதிக்கப்படும்.தானாகவே 3-6 மாதங்களில் முழுமையாககுணமடை யும்.
நீரிழிவால் ஏற்படும் தசைமெலிவு
வயதான ஆண் நீரிழிவு நோயாளர்களிலேயே இது கூடுதலாக ஏற்படும்.நோவுடன் கூடியதசை மெலிவு ஏற்படும்.தொடைகள்/ தோள்களே பாதிக்கப்படுகிறது. தொடவே முடியாதவாறு நோவாக இருக்கும். இது சரியாக குருதிக் குளுக்கோஸை கட்டுப்படுத்தாதவர்களிலேயே காணப்படுகிறது. இது குருதியில் குளுக்கோஸைக் கட்டுப்படுத்த சுகமாகிவிடும்.
தன்னியக்க நரம்புநோய்கள்
நீரழிவுநோயாளர்களில் இப்பாதிப்பு கூடுதலாக குணங்குறிகள் வெளிக்காட்டப் படாமலே இருக்கும். அரிதாகவே குணங்குறிகள் வெளிக்காட்டப்படும். படுக்கையிலிருந்து எழும்போது ஏற்படும் தலைச்சுற்று ஓய்வு நிலையிலும் அதிகரித்த இதய ஓட்டம்‚ தொடர்ச்சியான வாந்தி‚ இரவில் வயிற்றோட்டம் போன்றவை இதனால் ஏற்படுகிறது. ஆண்மைக் குறைவும் (Impotence) இதனாலேயேஏற்படுகிறது.நீரிழிவு நோயாளர்கள் நரம்புப் பாதிப்பை தவிர்க்க குளுக்கோஸை சரியான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கால்களை கிரமமாக அவதானித்து காயங்கள்‚ புண்கள் ஏற்படுவதை உடனுக்குடன் கண்டுசிகிச்சை பெறவேண்டும். நீரிழிவை வெற்றிகொண்டு பாதிப்புக்கள் ஏற்படாது வாழ்வோமாக.
வைத்திய நிபுணர் அஜந்தாகேசவராஜ் (நரம்பியல் நிபுணர்)
நரம்பியல் பிரிவு, யாழ்போதானாவைத்தியசாலை.
வைத்திய கலாநிதி சிவதி. பிரதீபன்
நரம்பியல் பிரிவு,
யாழ் போதானாவைத்தியசாலை.