ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளைச் சிறந்த பிள்ளைகளாகவே வளர்க்க விரும்புகின்றார்கள். இதற்
காகவே அல்லும் பகலும் கஷ்டப்படுகின்றார்கள் இருந்தபோதிலும் சில பிள்ளைகள் வழிதவறிப் போவதும் சில பிள்ளைகளின் கல்வி மட்டம்தாழ்ந்து போவதும்நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்கான காரணங்கள்தான் என்ன? இவர்களின் வளர்ப்பு முறை சரியானது தானா? எனும் கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.
இன்றைய பொற்றோர் தம் பிள்ளைகள் பன்னாட்டுப்பாடசாலைகளில் படிக்கவேண்டும்.நல்ல பதவிநிலை அடையவேண்டும், கைநிறையச்சம்பாதிக்கவேண்டும்,சொத்துசுகத்தோடுவாழவேண்டும் என்றே சிந்திக்கின்றார்கள். அதுதான் வாழ்வின் நோக்கம் என்பது அவர்களின் எண்ணமாயுள்ளது. பலகலைகளும் தெரிந்திருத்தல் – ரெனிஸ், சதுரங்கம் விளையாடும் திறமை பெற்றிருத்தல், கணினி அறிவு ஆரம்ப வயதிலேயே பெற்றிருத்தல், பல்வகை பாசைகளும் புரிந்து கொள்ளும் திறன் வளர்த்தல் என்று பலவாறு எண்ணும்பெற்றோர்கள் பலமுயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆரம்பக்கல்வியை ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டும் என்றும் பேரவாக்கொள்கின்றனர். இவற்றைநிறைவு செய்திட பெரும் பணம் தேவைப்படுகின்றது. இதற்காக தம்மை வருத்திக் கூடுதலாக உழைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது.
பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக சம்பாதித்து சொத்து சுகத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக தம்மை அறியாமலேயே பணம் சேர்க்கும் இயந்திரமாகத் தம்மை ஆக்கிக் கொண்டு நிம்மதியிழந்து பதற்றத்துடன் ஒய்வில்லாது வாழ்கின்றார்கள். பிள்ளைகளுடன் சந்தோசமாக கழிப்பதற்கு நேரமில்லாது திண்டாடுகின்றார்கள் பிள்ளைகளை அன்புடனும் பாசத்துடனும் வழிப்படுத்தி நெறிப்படுத்த நேரமில்லாக அல்லாடுகின்றார்கள். ஆனால் பிள்ளைகளை மாலை நேர மேலதிக வகுப்புக்களில் சேர்த்துவிட்டு தெருவில் அவர்களுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றார்கள்.
ஆரம்பக்கல்வி தாய் மொழி மூலமே கொடுக்கப்படல் வேண்டும். இதைப் புரிந்துகொள்ளாது செயற்படுவதனால் எமது பிள்ளைகள் எங்களைவிட்டுவிலகிப்போகின்றார்கள். எமது பண்பாட்டு விழுமியங்களை அறிந்து நடைமுறைப் படுத்தும் வாய்புக்கள் அவர்களுக்கு அருகிப்போகின்றன. வேறோர் கலாசாரத்தைப் பின்பற்றும் சூழல் அவர்களிடம் திணிக்கப்படுகின்றது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி அதிகரித்துச் செல்கிறது. தாம் விரும்பியபடிநடத்தல், பொறுப்பற்றபோக்கு பெற்றோரின் விருப்பத்துக்கு மதிப்பளியாமை, புரிந்துணர்வு இன்மை, இறுதியில் பெற்றோர் ஆரம்பம் முதல்பட்ட கஷ்டங்களுக்குத்தீர்வு கிடைக்காது அவை கவலைகளாகவே அவர்கள் மனத்தில் பாரமாக இறங்குகின்றன. பெற்றோர்கள் கஷ்ட்ப்பட்டு தம் பிள்ளைகளை வளர்க்க முற்பட்டும் இவ்வாறுவிரும்பத்தகாத விளைவுகள் வருவது எங்ங்ணம்?
சிறுவர்களின் குண இயல்புகள்பெற்றோரின்பங்களிப்பிலும் பிள்ளைகளுடன் அவர்கள் செலவழிக்கும் நேரத்திலும் தங்கியுள்ளது என்பதற்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. அத்துடன் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் ஊக்கமும் வீட்டுச் சூழலும் மிகவும் முக்கியமானவை. வீட்டுச் சூழல் சுதந்திர உணர்வையும் சந்தோசத்தையும் வழங்குதல் வேண்டும். பிள்ளைகளுக்கு முக்கியமாகக் கொடுக்கவேண்டியது மன அமைதியும் சந்தோசமும் ஆகும். நாம் இவற்றைபிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு நாம் அவர்களுடன் நேரத்தைச் செலவிடத்தயாராக இருத்தல் வேண்டும். இன்றைய நிலையில் எம் இளம் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் செலவிடும் நேரத்தை விட அவர்களை மாலை நேர மேலதிக வகுப்பில் சேர்த்துவிட்டு, வெறுமனே தெருவில் காத்திருக்கும் நேரமே அதிகமாகும்.
பிள்ளைகளுடன் தம் நேரத்தை பெற்றோர் செலவழித்தல் எனும்போது எவ்வாறு இதனை ஆக்கபூர்வமாகச் செலவழிக்கலாம் எனப் பார்ப்போம். பெற்றோர்கள் வேலைத்தளத்திலிருந்து வீச்டுக்கு வரும்போது மனதை மென்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன் தம் நேரத்தை தொலைக் காட்சியுடனோ கணினியுடனோ கழிக்காது பிள்ளைகளுடன் அன்பாக உறவாடுவதில் சந்தோசத்துடன் கழித்தல் வேண்டும். வந்தவுடனேயே படியுங்கள் படியுங்கள் என்று அவர்களை நச்சரிக்காது அவர்கள் மனம் திறந்து பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். அவர்கள் சந்தோசமாக அன்றைய நிகழ்வுகனை விவரித்த பின்பு மகிழ்வுடன் அவர்களைப் படிக்க அழைத்துச் செல்லலாம்.
பிள்ளைகள் விடும் தவறுகளை பதற்றப்படாமல் பக்குவமாக சுட்டிக்காட்டுதல் வேண்டும். பிள்ளைகளின் மனதை வென்றபின்புதான் சுட்டிக்காட்டுதல் சிறப்பாகும். அதற்காக நாம் அவர்களுடன்நிச்சயமாக எம் நேரத்தை செலவழித்தல் வேண்டும். மகிழ்வான இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை மகிழ்வூட்டி சிரிக்கச் செய்து அவர்களுடன் பொறுமையாக உரையாடுதல் வேண்டும். அது அவர்களுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். இதுவேசிறந்த முறை அம்மா ஏசியதால் பிள்ளைக்கு கோபம் வந்ததா? அம்மா உங்களை கண்டிப்பது அன்பால்தானே. நீங்கள் இனிமேல் அப்படிச் செய்யக்கூடாது. அது நல்ல பிள்ளைக்கு எங்கட கெட்டிக்காரப் பிள்ளைக்கு அழகல்ல என்ற வாறாக பூமனத்துக்குள் எழுந்த பூகம்பங்களை வருடி ஆற்றுப்படுத்துவதே சிறப்பு புத்திமதி சொல்லும்போது தனிப்பட்ட முறையில் உரிய சந்தர்ப்பத்தில் அவர்கள் உள்ளத்தைத் தொடும்படி பாசத்துடன் கூறுதல் வேண்டும். சிறுவர்களுடன்தம் நேரத்தைக் கழிப்பது பெற்றோருக்கும் சந்தோசமே. அத்துடன் பிள்ளைகளின் நுணுக்கமான வளர்ச்சியையும் திறமைகளையும் அவதானித்துக் கொள்ளவும் உதவுகின்றது. இது அவர்கள் மீது மேலும் பாசம் கொள்ளத்தூண்டுகின்றது. பிள்ளைகளுக்குப்பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்போது நல்லமுறையில்தாம் வளர்வதை அவர்கள் உணர்கின்றார்கள். அது உடலாலும் சரி உள்ளத்தாலும் சரி இது அவர்களின் மகிழ்ச்சியையும் சக்தியையும் அதிகரிக்கும். மாறாக பெற்றோர் பிள்ளைகளுக்குத்தனியாக நேரத்தை ஒதுக்கவில்லை. அவர்களிட மிருந்து அன்பு பாசம் கிடைக்கவில்லை. எனில் குழந்தைகளின் உளவளர்ச்சி பாதிப்புறுகிறது. பெற்றோர் மீது மதிப்பு இல்லாது போகிறது. அதன் காரணமாக கீழ்ப்படிய மறுக்கிறார்கள் பெற்றோருக்குக்கட்டுப்பட மறுக்கிறார்கள். அடம் பிடிப்பார்கள் பெற்றோரை விட்டு விலகிச் செல்வார்கள். அவர்களும் பெற்றோரிடம் அன்பு காட்டமாட்டார்கள். சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும் மரியாதை கொடுக்காதவர்களாகவும் மாறுகின்றார்கள் பெற்றோர் மீதான வெறுப்பை தம் அழகிய முகத்தை விகாரமாக்கி முறைத்தும் காண்பிப்பார்கள்.
பிள்ளைகள் உடலால் மட்டுமன்றி மனதாலும் வளர்க்கின்றனர் எனும் உண்மையை நாம் உணர்தல் வேண்டும். பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்கள் காலத்துக்குக் காலம் மாறுபடும். சில சமயம் பெற்றோருக்கு விருப்பமில்லா செயல்களை பிள்ளைகள் செய்திருந்தால், பெற்றோர் அது விடயமாக கலவரமடையாது அவர்களுடன் அதுபற்றி கதைத்து அவர்களுக்கு தெளிவுபடுத்துதல் வேண்டும் கூடாத செயல்களாக இருப்பின் அவை ஏன் கூடாதவை என்பதை அவர்கள் புரியும் வண்ணம் பாசத்துடன் எடுத்துக் கூறுதல் வேண்டும். எடுத்த எடுப்பிலேயே தண்டிக்கக் கூடாது தண்டிப்பதற்கு முன்பாக பாசத்துடன் கண்டியுங்கள். பிள்ளைகளிடம் குற்றம் கண்டுபிடித்து குற்றம் சொல்வதற்கு பதிலாக அவர்களிடமுள்ள நல்ல இயல்புகளைக் குறிப்பிட்டு அந்த இயல்புகளில் உங்களுக்கு விருப்பமில்லை என்பதை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அந்த இயல்புகள் திருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு அன்புடன் கூறுதல் வேண்டும். இது அவர்களின் பிடிவாதக் குணங்களை இல்லாதுபோக்கும். சிறுவர்களுக்கிடையிலான நட்பை அவர்களின் வயதில் வைத்தே பார்த்தல் வேண்டும். பெற்றோர்களின் வயதுக்கேற்ப வைத்துப் பார்ப்பதையோ, கதைப்பதையோ தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
பிள்ளைகள் மீது அக்கறையாக இருப்பது என்பது அவர்களைக் கட்டுப்படுத்துவதோ அல்லது அவர்களின் செயற்பாட்டை இரகசியமாக மறைந்திருந்து கண்காணிப்பதல்ல. அவர்களுடன்சேர்ந்து அவர்களைப்புரிந்துகொள்வதற்காக செலவழிக்கும் நேரமே பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரமாகும். அவர்களின் விருப்பு வெறுப்புணர்ந்து அவர்களின் சந்தோசமே எம் சந்தோசம் என நினைத்தல் வேண்டும்.
எப்போதும் பெற்றோரின் உதவியும் பாதுகாப்பும் தமக்குண்டு என அவர்கள் உணரத்தக்க முறையில் எம் செயற்பாடுகள் அர்ப்பணிப்புடன் அமைதல் வேண்டும். இது அவர்களின் உடல் உள ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது. பிள்ளைகளுடன் பிள்ளைகளுக்காக நேரத்தைச் செல வழிப்பது என்பது நாங்கள் அவர்களுக்கு செய்யும் ஒருமறை முகமான முதலீடாகும்.
சிறுவர்களின் மழலைப் பேச்சுக்களை அக்கறையுடன் கேட்டல்,முறுவலித்துசிரித்தல், அவர்களின்கேள்விகளுக்கு சலிக்காது பதிலளித்தல், அவர்கள் செய்யும் சின்னச்சின்ன செயல்களைப் பாராட்டி சந்தோசப்படல், நித்திரைக்குச் செல்லமுன் கதைகள் கூறி அந்தக்கதைகள் சொல்லும் ஒழுக்கநெறிமுறைகளைமனத்தில் பதியுமாறுசொல்லுதல், பிள்ளைகளின் கற்பனைத்திறனை ஊக்குவித்தல், அரவணைப்புடன் கூடிய அன்பு செலுத்துதல், அவர்கள் தனித்திருப்பதைத் தவிர்த்தல், நல்ல சிந்தனைகளை உருவாக்குதல் அவர்களின் தேவை உணர்ந்து நடத்தல் போன்றவை சிறுவர்கள் வளர்ந்த பின்பும் அவர்களின் மனத்தில் சித்திரமாகப் பதிந்திருக்கும். அவற்றை நினைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு இனிமை தரும் வளர்ந்த பின்பு அவர்கள் தடம் மாறிச் செல்வதைத் தடுக்கும் கண் ணுக்குத் தெரியாத அன்புப் பூட்டுக்க்ளே அவையாகும்.
நாங்கள் சிறுவயதில் காய்ச்சலில் அவஸ்தைப்பட்டபோது, தாயார் எம்முடன் உடனிருந்து கவனித்தலும் மருந்து தந்து வலிநீக்கி உள்ளத்தை இதமாக்கி சம்பாசித்தலும் இன்றும் மனதினடியில் பக்குவமாய் இருக்கிற தல்லவா? அன்று தொண்டையினுள் கசந்த கசாயத்தை இன்று நினைக்கையில் நினைவுகள் இனிக்கிறது அல்லவா? இந்த இனிமை எங்கள் சந்ததிக்கு கடத்தப்பட வேண்டாமா?
மருத்துவர் பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்தியஅதிகாரி,
மாநகர சபை,
யாழ்ப்பாணம்.