Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



தைரோயிட் ஹோர்மோன் : பிரச்சினைகள் தொடர்பான சந்தேகங்களும் தீர்வுகளும்.

கேள்வி : எனது வயது20 ஆகும் எனக்கு சில மாதங்களாக தூக்கம்.சோம்பல் என்பவை இருப்பதோடு உடல் நிறையும் அதிகரித்து வருகின்றது. எனக்கு மாதவிடாயின் போதான குருதிப்போக்கும் அதிகமாக உள்ளது. எனது நண்பியொருவர் இது தைரொயிட சுரப்பிக் குறைபாட்டால் ஏற்படுவதாகக் கூறியிருந்தார். இது பற்றி ஆலோசனை வழங்கவும்?

பதில் : நீங்கள் குறிப்பிடும் நோய் அறி குறிகளைப் பார்க்கும்போது உங்களுக்கு தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரக்கும் நிலை (Hypothy roidism) இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமாக இருக்கின்றது. தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரக்கும்போது சோம்பல், தூக்கம் உடற்பருமன் அதிகரித்தல், தலை முடி உதிர்தல், பெண்களில் அதி களவு மாதவிடாய் வெளியேறுதல் மற்றும் குளிர்தாங்க முடியாமை போன்ற குணங்குறிகள் ஏற்படும். தைரொயிட் சுரப்பு குறைவாக இருக்கும் நோய் உள்ளவர்களுக்கு அதனை உறுதிப்படுத்த தைரொயிட் ஹோர்மோனின் அளவை குருதியில் பரிசோதிப்பது அவசியமாகும். தைரொயிட் ஹோர்மோனின் சுரப்பானது. குறைவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு கழுத்துப்பகுதியில் வீக்கம் அல்லது கழலையும் காணப்படலாம். இவர்களுக்குத் தேவை யேற்படின் ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியேற்படுவதோடு FNAC எனப்படுகின்ற இழையப் பரிசோதனையும் செய்யவேண்டி நேரிடலாம். தைரொயிட் ஹோர்மோன் குறைவாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தைரொக்ஸின் குளிசையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் நோயாளியொருவரது வயது உடல் நிறை பிற நோய்கள் ( குறிப்பாக இதய நோய்கள்) என்பவற்றைக் கருத்திற் கொண்டு வைத்தியரானவர் தைரொக்ஸின் ஹோர்மோனின் அளவைப் பரிசோதித்துத் தேவைக்கேற்ப குளிசையின் அளவைக் கூட்டிக்குறைக்க வேண்டியிருக்கும். சில நோயாளிக்கு மேலதிகமான பரிசோதனைகளும் ( உதாரணம் Antibody tests) மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவே நீங்கள் காலம் தாழ்த்தாது வைத்திய ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.

கேள்வி: எனது வயது 35 ஆகும். எனக்கு இரண்டு மாதங்களாக உயர்குருதி அமுக்கம் (பிறசர்) இருப்ப தாகக் குடும்ப வைத்தியர் கண்டறிந்து சிகிச்சை வழங்கி வருகின்றார். இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்

பதில்: உடல்நிறை அதிகரித்துச் செல்லும்போது உயர் குருதிஅமுக்கம்,நீரிழிவு கொலஸ்திரோல் அதிகரித் தல் போன்றவை ஏற்படலாம். இது Metabolic Syndrome என்று கூறப்படுகின்றது. இவ்வாறு உடல்நிறை அதிகரிக்காமலும் சிலருக்கு உயர்குருதி அமுக்கம் ஏற்படலாம்.(Hight blood pressure) இவ்வாறு இளம்வயதில் பிறசர் ஏற்படுகின்ற நோயாளருக்கு அதற்கான காரணத்தைக் கண்டறிவது மிகவும் அவசியமானதாகும். சில ஹோர்மோன் பிரச் சினைகளாலும் சிறுநீரக நாடிகளில் ஏற்படுகின்ற சுருக்கத்தினாலும் (Renal artery Stenosis) இவ்வாறு உயர்குருதி அமுக்கம் ஏற்படலாம். எனவே, உங்களைப்போன்ற இளம் வயதில் உயர் குருதி அமுக்கம் கண்டறியப்பட்டவர்களுக்கு (Young hypertension) பூரணமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். இந்தப் பிரச்சினைகள் மூலம் ஏதாவது காரணமொன்று கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சையை வழங்குவதன் மூலம் உயர்குருதி அமுக்கத்துக்குத்தீர்வைக் கண்டுகொள்ள முடியும். உணவுக்கட்டுப்பாடுகள் (கொழுப்புணவு உப்பு அதிகமான உணவைக்குறைத்தல்) மற்றும் உடற்பயிற்சி என்பவை குருதியமுக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். அத்துடன் வைத்தியர் பரிந்துரை செய்தமருந்துகளைக்கிரமமாக உள்ளெடுப்பதும் அவசியமாகும். குருதியமுக்கமானது கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் போது பல வகையான பிரச்சினைகள் ஏற்பட நேரி டும். (உ-ம் பக்கவாதம், பாரிசவாதம், Stroke) எனவே, நீங்கள் மேலே குறிப்பிட்டதைப் போன்ற முழுமையான பரிசோதனைகளுக்கு உட்பட்டு வைத்திய ஆலோசனையின்படி சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

கேள்வி எனது வயது 29 ஆகும். எனக்கு தைரொயிட குறைபாடு கடந்த 2 வருடங்களாக இருக்கின்றது. நான் தைரொக்ஸின் 75mg குளிசையை ஒவ் வொருநாளும் காலை நேரத்தில் உள்ளெடுத்து வருகின்றேன். அண்மையில் திருமணம் முடித்த நாள் கர்ப்பம் தரிப்பதற்கு விருப்பமாக உள்ளேன். இது சம்பந்தமாக ஆலோசனை வழங்கவும்?

பதில்: கர்ப்பம்தரிக்க விரும்புகின்ற தைரொயிட் குறை பாடுடைய பெண்ணொருவரின் தைரொயிட் ஹோர்மோன் அளவானது கட்டுப்பாட்டினுள் இருப்பது மிகவும் இன்றியமையாததாகும். எனவே, நீங்கள் தைரொக்ஸின் குளிசையைக் கிரமமாக உள் ளெடுத்தல் அவசியமாகும். இதனைக் காலை வேளையில் வெறும் வயிற்றில் உள்ளெடுத்தல் வேண்டும். இதன்பின்னர் 30-40 நிமிடங்களுக்குப் பின்னரேதேநீர்.உணவுபோன்றவற்றைஉள்ளெடுத் தல் வேண்டும். அப்படியில்லாதவிடத்து தைரொக்ஸினின் அகத்துறிஞ்சல் குறைவடைய நேரிடுகிறது. அதேபோலவேறு குளிசை மருந்துகளை (குறிப்பாக இரும்புச்சத்துக்குளிசைகள், கல்சியம் குளிசைகள்) தைரொக்ஸின் எடுக்கும் நேரத்தில் உள்ளெடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அந்தக் குளிசைகளை காலை உணவை உள்ளெடுத்தபின்னரோ அல்லது இரவு வேளையிலோ உள்ளெடுக்க முடியும். கர்ப்பம் தரிக்க விரும்புகின்ற பெண்ணொருவரின் TSH எனப்படுகின்றதைரொயிட் ஹோர்மோனின் அளவானது 2.5mu/l அளவிலும் குறைவாகப் பேணப்படுவது அவசியமாகும். பெண்ணொருவர் கர்ப்பம் தரித்ததை உறுதிப்படுத்திய உடனேயே (சிறுநீர் HCG பரிசோதனை தைரொக்ஸின் குளிசையின் அளவை 25mg இனால் அதிகரித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக 75 mg உள் ளெடுக்கும் நீங்கள் கர்ப்பமானால், அதனை உறுதி செய்த பின்னர் 100m அளவு தைரொக்ஸினை உள்ளெடுக்கவேண்டியிருக்கும். இதன்பின்னர் உட னடியாக வைத்தியரைச்சந்தித்து ஆலோசனையைப் பெறவேண்டும்.

கர்ப்பகாலத்தில் குறிப்பாக முதல் மூன்று மாதப் பகுதி (First trimeste) கருவிலுள்ள சிசுவின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியின் பிரதானமான காலப்பகுதியாகும். எனவே, இந்தக் காலப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணானவர் குறிப்பிட்ட சரியான அளவுதைரொக்ஸின் குளிசையை உள்ளெடுப்பது மிகவும் அவசியமாகும். மேலும் கர்ப்ப காலத்தில், குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை தைரொக்ஸின் ஹோர்மோனின் அளவு பரீட்சிக்கப்ட்டு தைரொக்ஸின் குளிசையின் அளவு ( dose) சரிசெய்யப்படவேண்டும்.

கேள்வி: எனது வயது 30 ஆகும். சில மாதங்களாக எனக்குப்படபடப்பு அதிகளவு வியர்த்தல் என்பவை இருப்பதோடு உடல் நிறையும் குறைவடைந்து செல்கின்றது. எனது கழுத்துப்பகுதியும் வீக்கமாக இருக்கின்றது. இது பற்றிய ஆலோசனை வழங்கவும்?

பதில் : உங்களுக்கு இருக்கின்ற குணங்குறிகளைப்பார்க்கும்போது உங்களுக்குத் தைரொயிட் ஹோர் மோன் அதிகமாகச் சுரக்கும் நிலை (Hyperthy roidism) இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக அதிகமாகும். தைரொயிட் ஹோர்மோன் அதிகமாகச் சுரப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இவ்வாறாக தைரொயிட் சுரப்பி அதிகமாகச் சுரக்கும்போது உங்களுக்கு ஏற்படுவதைப்போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட நேரிடும். இதைவிடப் பெண்களுக்கும் மாத விடாயின் அளவு குறைவடைந்து செல்லுதல், அதிக வெப்பத்தைத் தாங்கமுடியாத நிலை மற்றும் அடிக் கடிவயிற்றோட்டம் போன்று மலம் கழித்தல் போன்ற வையும் ஏற்படலாம். சிலருக்கு கண்கள் வெளித் தள்ளிப் பலவிதமான பார்வைப் பிரச்சினைகளும் ஏற்படலாம். தைரொக்ஸின்ஹோர்மோனின் அளவைகுருதியில் பரிசோதிப்பதன் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் அதன் பின்னர் தேவையேற்படின் தைரொயிட் ஸ்கான் மற்றும்பலவிசேடபரிசோதனைகளும் மேற் கொள்ளப்படவேண்டியிருக்கும் தைரோயிட்ஹோர் மோன் பரிசோதனைப் பெறுபேற்றிற் கேற்பவும் நோயாளி ஒருவரின் குணம் குறிகளுக்கு ஏற்பவும் வைத்தியரானவர் குளிசை மருந்தொன்றை ஆரம் பிப்பார். Carbinazole என்ற குளிசையே இந்த நோய்க்காகப் பொதுவாகப் பயன்படுத்தப் படுகின்றது. பொதுவாக இந்த மருந்தானது 18-24 மாதங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது. சில நோயாளரில் இந்தக் காலப்பகுதியின் பின்னரும் நோயைக் கட்டுபடுத்த முடியாமல் போக நேரிடலாம். இவ்வாறான வர்களுக்கு சத்திரசிகிச்சை மூலம் தைரொயிட்சுரப்பியை அகற்றவோ கதிர் வீச்சுத் திரவத்தை (அயடீன்) உள்ளெடுத்து தைரொயிட் சுரப்பியைக் கரைக்கவோ வேண்டி யேற்படலாம்.எனவே, நீங்கள் காலம்தாழ்த்தாது வைத்திய ஆலோசனையைப் பெற்று சிகிச்சையை ஆரம்பிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

கேள்வி: எனது வயது 18 ஆகும். நான் வெளிநாட்டுப் பல்கலைக் கழக அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு இன்னமும் முகத்தில் தாடி, மீசை வளராமல் இருக்கின்றது. அத்துடன் எனது விதைகளின் அளவும் சிறிதாக இருக்கின்றது. இது பற்றி ஆலோசனை வழங்கவும்

பதில் : உங்களுக்கு இருக்கின்ற பிரச்சினையை நோக்கும்போது உங்களுக்கு ஆண் ஹோர்மோன் குறைபாட்டுத் தன்மை இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக அதிகமாகும். இவ்வாறு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பல வகையால் உடல் நோய்கள் மற்றும் ஹோர் மோன் குறைபாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். சில வேளைகளில் உங்கள் குடும்ப உறுப்பினர்களில் குறிப்பாக உங்கள்தந்தையாரில் இவ்வாறான காலம்தாழ்த்திப் பூப்படையும்தன்மை (Delayed Puberty) இருந்தாலும் உங்களுக்கும் காலம் தாழ்த்தியே ஏற்படலாம்(Constitutional Delay) எனினும் உங்களுக்கு ஹோர்மோன்களின் அளவு உட்பட பலவிதமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்பெறுபேறுகளுக்கு அமைவாக தேவையான சிகிச்சை வழிமுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனைப் பூப்படைதலைத் தூண்டுதல் ( Induction of Puberty) என அழைப்பார்கள். இது தொடர்பான மேலதிக விளக்கங்களை யாழ். போதனா வைத்தியசாலை அகஞ்சுரக்கும் தொகுதி சிகிச்சை நிலையத்திலிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

மருத்துவர் M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி (ஹோர்மோன்) சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ் போதனா வைத்தியசாலை.

Posted in கட்டுரைகள்
« நலம் தரும் அன்னாசி!
பழங்களின் அடிப்படை போசனைகள் , கனியுப்புக்கள் மற்றும் விற்றமின்கள் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com