இதய நோயுடன் தொடர்புடைய நெஞ்சு வலியானது உடனடியாக சிகிச்சையளிக் கப்பட வேண்டிய ஒன்றாகும். முடியுரு நாடிகளில் ஏற்படும் தடைகளால் இதயத்தசைக்குக் குருதிவழங்குதல் குறை வடைந்து, இதயத் தசைக்கான ஒட்சிசன் விநியோகம் குறைவடைவதால் மாரடைப்புக்கான நெஞ்சுவலி (Angine) ஏற்படுகின்றது.
நைத்திரேற்றுக்கள், மாரடைப்பு நெஞ்சுவலியின் நிவாரணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. GTN எனப்படும் Glyceryl Tri Nitrate மாத்திரைகள் திடீ ரென ஏற்படும் நெஞ்சுவலியின்போதும், நெஞ்சுவலி வருமென ஊகிக்கும் சந்தர்ப்பங்களிலும் பாவிக்கக் கூடியனவாகும். இந்த GTN மாத்திரை மாரடைப்புக்கான நெஞ்சுவலிக்குக் குறுகிய காலத்தில் உடனடி நிவாரணத்தை வழங்கக்கூடியது.
இந்த மாத்திரைகளின் தொழிற்படும் காலஅளவு 20 தொடக்கம் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். – GTN தயாரிப்புக்களில் தற்போது நாக்கின் கீழ் வைக்கும் மாத்திரைகள் (Sublingual tablets) மட்டுமல்லாது GTN ஸ்பிறேகள், GTN ஒயின்மென்ட்ஸ் மற்றும் தோலுக்கு மேல் ஒட்டக்கூடிய தயாரிப்புக்கள் (GTN transdermal patches) என்பனவும் கடைகளில் கிடைக்கின்றன.
எனினும் GTNநாக்கின் கீழ்வைக்கும் மாத்திரைகளே அரசவைத்தியசாலைகளிலும், பொதுவாக பல நோயாளிகளினது பாவனையிலும் உள்ளன. எனவே இந்த GTN நாக்கின் கீழ் வைக்கும் மாத்திரைகளின் பாவனைமுறை, பாதுகாக்கும் முறை, பக்க விளைவுகள் பற்றிய தெளிவான அறிவு நோயாளிகளிடமும் நோயாளிகளைப் பராமரிப்பவர்களிடமும் இருக்கவேண்டியதுமிகவும். அவசியமானதொன்றாகும்.
GTN மாத்திரைகளைப் பேணும்முறை (Storage of GTN tablets)
- GTN மாத்திரைகளை கறுப்பு அல்லது கபில நிற ஒளி புகவிடாத கண்ணாடிப் போத்தல்களில் வைத்து, சூரிய ஒளி படாதவாறு பேணப்படல் அவசியமாகும்.
- GTN மாத்திரையைப் பாதுகாத்து வைக்கும் போத்தலானது, அதிக வளியை உள்ளடக்க முடியாதவாறு சிறியதாக இருப்பதுடன் கழுத்துப் பகுதி சிறியதாகவும் இருப்பது சிறந்தது.
- எனவே நோயாளிகள் GTN மாத்திரைகளை மருந்தாளரால் விநியோகிக்கப்பட்ட GTN மாத்திரைக்கே உரித்தான போத்தல்களிலேயே வைத்துப் பேணுதல் உகந்தது.
- GTN மாத்திரைகள் அடங்கியபோத்தலினுள் பஞ்சு, வேறு மருந்துகள், துணி போன்ற பிறபொருள்கள் எதனையும் வைப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
- மருந்தை வெளியில் எடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப் பங்களிலும் முடிந்தளவு சீக்கிரமாக மருந்தை எடுப் பதுடன் உடனடியாக இறுக்கமாகப்போத்தலை மூடியும் வைத்தல் வேண்டும்.
- புதிதாகத் திறந்த போத்தலின் மருந்தை 8 கிழமை மட்டுமே பாவித்தல் வேண்டும். 8 கிழமைக்குப் பின்பும் மருந்து மீதமிருந்தால் பாவிக்காது மருந்தை கை விடுதல் வேண்டும்.
GTN மாத்திரையைப் பாவிக்கும் முறை
- நெஞ்சுவலிக்காக மருத்துவரால் GTN மாத்திரை பரிந்துரைக்கப்பட்ட ஒருவர், நெஞ்சுவலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் GTN மாத்திரையை நாக்கின் அடியில் வைக்க வேண்டும். (விழுங்கக்கூடாது)
- மாத்திரையை நாக்கின் கீழ் வைத்து 5 நிமிடங்களின் பின்னரும் நெஞ்சுவலி குறையாதுவிடில், அடுத்த மாத்திரையை நாவின் கீழ் வைத்தல் வேண்டும். அதன் பின்னரும் நெஞ்சுவலி குறையாது விடில் மூன்றாவது மாத்திரையை நாவின் கீழ் வைத்தவாறே உடனடியாக மருத்துவரை நாடவேண்டும்.
- மாத்திரையை நாவின் கீழ் வைக்கும் சந்தர்ப்பத்தில் நெஞ்சுவலி குறைந்தால் நெஞ்சுவலி நின்றதும் உடனடியாக மாத்திரையை வெளியில் துப்பிவிடவும்.
- நெஞ்சுவலி ஏற்படும் என ஊகிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதாவது உடற்பயிற்சி, அதிக நடை, வேலை போன்ற தனக்கு நெஞ்சுவலி ஏற்படும் சந்தர்ப்பங்களை அறிந்த ஒருவர் GTN மாத்திரையை முற்கூட்டியே எடுத்துக் கொள்ளமுடியும்.
- எனினும் இவ்வாறான தொடர்ந்து மருந்து எடுத்தல் மருந்துக்கு அடிமையாதலை ( Tolerance) ஏற்படுத்தக்கூடும்.
GTN மாத்திரைகளை எடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
- கர்ப்பிணித் தாய்மார்கள், தாழ் குருதி அழுத்தம் உடையவர்கள் (low pressure), குருதியில் ஒட்சிசன் அளவு குறைந்தவர்கள் (hypoxaemia), சமீபத்தில் தலைக்காயம், இருதய சத்திரசிகிச்சைக்கு உட் பட்டவர்கள் போன்றோர் GTN மாத்திரையைப் பாவிக்கும்போது தகுந்த வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கவனத்துடன் பாவித்தல் வேண்டும்.
- GTN மாத்திரையைப் பாவிக்கும்போது மதுபாவனையையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- GTN மாத்திரையைப் பாவிக்கும் நோயாளிகளுக்கு இந்த மருந்தின்பக்கவிளைவாக தலையிடி, சோம்பல், அதிக இதயப்படபடப்பு, தாழ் குருதி அழுத்தம் என்பனவும் தோன்றலாம்.
- GTN மாத்திரையைப் பாவிக்கும் நோயாளிகள் முன் – ஜாக்கிரதையாகத் தாம் செல்லும் இடமெங்கும் இந்த மாத்திரைகளைத் தம்முடன் எடுத்துச்செல்ல வேண்டியது அவசிய மாகும். அத்துடன் வீட்டில் இந்த மாத்திரையை வைத்திருக்கும் இடம், பாவிக்கும் முறை, பேணும் முறை பற்றிய தெளிவான அறிவுறுத்தல்களை வீட்டில் உள்ளவர், பராமரிப்பாளருக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.
- நோயாளிக்கு நெஞ்சுவலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் நோயாளிக்கு அருகில் இருப்பவர் அல்லது பராமரிப்பவர் நோயாளியைச் சிகிச்சையளிக்கும் முழுமையான அறிவைக் கொண் டிருத்தல் அவசியம்.
- நோயாளி தன்னை GTN மாத்திரை பாவிக்கும் நோயாளி என அறிமுகப்படுத்தக்கூடிய நோயாளர் தகவல் அட்டையைத் தன்னுடன் வைத்திருப்பது மிகவும் சிறந்ததும் உபயோகமுள்ளதும் ஆகும்.
தாமரா பரம்சோதிநாதர்
உள்ளக பயிலுநர் மருந்தாளர்,
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.