யாழ். போதனா வைத்தியசாலையை நாடும் நோயாளர் பொதுமக்களின் நலன்கருதி அவர்களின் தேவைகளை உரிய முறையிலும் உடனடியாகவும் தாமதமின்றிப் பெற்றுக்கொண்டு, எதுவித விரயமுமின்றி வினைத்திறனுடன் செயற்பட்டுச் செல்லப் பின்வரும் பிரிவுகளில் எவ்விதம் செயற்பட வேண்டும் எனும் வழிமுறைகளை வரிசைப்படுத்துகின்றேன். இந்த வழிகளைப் பின்பற்றிப் பதிவுகளையும் பத்திரங்களையும், மேலும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
பிறப்பு- இறப்புப் பதிவுகள்
ஒரு மனிதனின் பிறப்புக்கும் வாழ்வுக்கும் அவனின் மரணத்துக்கும் இந்தப் பத்திரங்கள் மிகமிக முக்கியமானவை, இன்றியமையாதவை. அவனின் (வாழ்வுக்கும்) வாழ்க்கைத் தேவைகளுக்கும் மரணத்தின்பின் அவனின் உறவுகளின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் பிறப்பு – இறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் மிகவும் அவசியமானவை.
இவற்றில் பதியப்படும் பதிவுகளில் ஏதாவதொரு தவறு நிகழும்போது அது அவனின், அவளின் அன்றாட அனைத்துத் தேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதாவது படிப்பு, பதவி உதவி, மருத்துவம், குடும்ப விவரம், அரச உதவிகள், ஊக்குவிப்புக்கள் இப்படி இன்னோரன்ன செயற்பாடுகளில் தடங்கல்கள், தாமதங்கள் வீண் விரயங்கள் மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்ளும் சத்தியக் கூற்றுக்கள், இவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆள் தேடல்கள், அலைக்கழிவுகள், இழுபறிகள், வாய்ப்புக்கள் கை நழுவுதல், மனச்சுமைகள் இதனால் உடல் – உள்ப் பாதிப்புக்கள் என்று தொடர் தொந்தரவுக்கே இடம் தேடிக்கொள்ளும். எனவே, இவைகளைக் கருத்திற்கொண்டு உண்மைகளைக் கூறி உரிய முறையில் பதிவுகளை மேற்கொள்ளும்போது மேற்கூறிய அனைத்துச் சிக்கல்களிலும் இருந்து விடுபட்டுக்கொள்ளலாம்.
- பெயர்களைக் கூறிப் பதிவுகளை மேற்கொள்ளும்போது பிறப்புஇறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் உள்ளபடி எழுத்துப் பிழைகள் இன்றிப்பதிந்து கொள்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- ஆண்டு, மாதம் திகதிகள் சரியான முறையில் வடிவான முறையான எழுத்துக்களில் எழுதிக்கொள்ளவேண்டும்.
- புதிய பெயர்களைச் சூட்டும்போது பெயர்கள் உரிய முறையிலும், உச்சரிக்கக்கூடிய வகையிலும் தனித்தனியான எழுத்துக்களிலும், மற்றவர்களால் மாற்றி வாசித்துத் தவறாகப் புரிந்துகொள்ளமுடியாத வகையிலும் எழுதிக்கொள்ளவேண்டும்.
- தாய், தந்தை விபரங்களும் இவ்வாறே அவர்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் உள்ளபடி எழுத்துப் பிழைகள் அற்றதாக எழுதிக்கொள்ள வேண்டும். (திருமண அத்தாட்சிப் பத்திரத்தையும் கவனத்திற் கொள்ளவேண்டும்).
- முகவரியும் முக்கியமானதொன்றாகையால் இதில் பிரிவுகள் உரிய முறையில் பதிந்துகொள்ளவேண்டும். பிரதேச செயலரின் பிரிவு, பதிவு சரியான ஒழுங்கில் இருக்கும்போது பிறப்பு, இறப்பு பிரதிகள் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படாது.
எனவே, இவைகளைக் கருத்திற்கொண்டு உரிய முறையிற் பதிவுகளை மேற்கொண்டு பிறப்பு – இறப்புப் பத்திரங்களை வழுக்கலற்றதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
விடுதியில் அனுமதிபெறல்
நோய் நிமித்தமோ, மகப்பேற்றின் நிமித்தமோ விடுதியில் அனுமதி பெறும்போது வைத்தியர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கும், பதிவுகளை மேற்கொள்வோரால் கோரப்படும் கேள்விகளுக்கும் உரிய முறையில் மிகவும் சரியான தரவுகளை வழங்கிப் பதிவுகள் செய்துகொள்ளவேண்டும்.
- பெயர் வயது முகவரி முழுவதும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் – உள்ளபடியும் அல்லது திருமணப் பதிவுப் பத்திரத்தில் உள்ளபடியும் பதிந்துகொள்ளவேண்டும். இதைவிடுத்து வீட்டுப் பெயர் செல்லப் பெயர், பட்டப் பெயர் எனக் கவலையினமாகப் பதியும்போது அத்தாட்சிப் பத்திரத்தில் அவைகளே வந்துசேரும். இதனால் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும்.
- ஒருவர் முன்பு விடுதியில் அனுமதி பெற்றிருந்தால் அதற்கு வழங்கிய நோய் நிர்ணய அட்டையைத் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒவ்வாமை ஏதாவது இருப்பின் அதை வைத்தியரிடம் சொல்ல மறக்கக்கூடாது.
- அனுமதிக்குமுன் எடுத்த சிகிச்சைகள் உட்கொண்ட மருந்துகள் பற்றிய விபரங்களையும் வழங்கவேண்டும். மற்றும் வைத்திய சாலையில் போடப்பட்டிருக்கும் வழிகாட்டும் தரவுகளை வாசித்து அறிந்து நேர தாமதத்தையும் விடுதியுடனான சுய பாதுகாப்பையும் மேற்கொள்ளப்புரிந்து நடந்து கொள்ளவேண்டும்.
எனவே, மேற்கூறிய (சொன்ன) விடயங்களைக் கருத்திற்கொண்டு உரிய முறையில் தெளிவுபடப் பதிவுகளை மேற்கொண்டு வழிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகும்போது நீங்கள் நன்மை அடைவதோடு, சமூகத்துக்கும் உதவ முடியும் என்பதே கண்கூடு.
ஜெ. ஜெயந்தன்
பொதுசன தொடர்பு உத்தியோகத்தர்
யாழ். போதனா வைத்தியசாலை.