யாழ். போதனா வைத்தியசாலையின் பார்வையாளர் நேரம்.
புயல்போலப் பார்வையாளர்கள் புகுந்துவிடுகிறார்கள்.
பொத்தி வைத்திருக்கின்ற அவர்களின் பொறுமையெல்லாம் வைத்தியசாலை வளைவுகளில் ஏனோ பீறிட்டுப் பாய்கின்றது. எதைப் பற்றிக் கூறுகிறோம் என்பது இன்னும் தெளிவாகவில்லையா? ஆம் நமது மக்கள் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் வாசிப்பதுடன் விட்டு விடுகிறார்கள். பலர் வாசிக்காமலேயே போய்விடுகிறார்கள்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் பாதையெங்கும் வலது பக்கமாகப் போகவும் எனத் தெளிவாக எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இருந்தும் மக்கள் தேர்த்திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்பவர்கள்போல முண்டியடித்து முன்னேறுகிறார்கள். சிலர் பல நாள் சந்திக்காத தம் உறவினரை நட்டநடு வழியில் குசலம் விசாரிக்கிறார்கள். யாரும் எதையும் தெரிந்து கொண்டே பிழையாகச் செய்வதில்லை. எனவே, எமது மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது யாதெனில்:
- திருத்தவேலை காரணமாக வைத்தியசாலையின் விடுதிகளுக்குச் செல்வதற்கு ஒரேஒரு பாதை அதுவும் பல இடங்களில் ஒடுக்கமாக உள்ளது.
- அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்தும், சத்திர சிகிச்சைக் கூடத்திலி ருந்தும் நோயாளிகளை விடுதிக்கு மாற்றும்பொழுது இந்தப் பாதையால் பல இடையூறுகள், தாமதங்கள் ஏற்படுகின்றன.
சிற்றுழியர்கள் வேகமாகச் செயற்படமுடியாது மக்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுகிறார்கள். வயதானவர்கள் நீண்டபாதை யில் சீராக நடக்க முடியாது தளர்ச்சியடைகிறார்கள். நாம் சில கேள்விகளை எம்மையே.கேட்டுக்கொள்வோம்.
- ஏன் நம்மால் ஒரு சிறிய ஒரு கட்டளையையோ வேண்டு கோளையோ கடைப்பிடிக்க முடியாமலிருக்கிறது?
- நடக்கும்பொழுது ஏன் வேகமாக நடக்க முடியாதுள்ளது? (நோயாளிகளையும் வயதானவர்களையும் தவிர்த்து)
- நடக்கும்பொழுது இரு தனி நபர்களிற்கு இடையில் மிகவும் சிறிய இடைவெளியாவது இருக்குமாறு பார்த்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறதா?
- ஏன் வேறொருவர் மீது முட்டாமலோ, தள்ளாமலோ நடக்க முடியாதுள்ளது? கர்ப்பிணிப் பெண்களுக்கும், வயதானர்களுக்கும் வழிவிட்டு நடப்பதிற் சிரமம் ஏற்படுகிறதா?
- சிறு பிள்ளைகளைப் பார்வையாளர்களாகக் கூட்டி வருவதைத் தவிர்க்க முடியாதா?
இது வைத்தியசாலை வளாகத்தில் மட்டுமல்ல, வீதிகளிலும், கடைகளிலும், வேறு ஸ்தாபனங்களிலும் எமது மக்கள் கவனத்திற்கொள்ள வேண்டியதாகும்.
டாக்டர். பானு தில்லையம்பலம்
மருத்துவப் பதிவாளர்
யாழ். போதனா வைத்தியசாலை