நீரிழிவு நோயாளிகள் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம். அக்கட்டுப்பாடு இழக்கப்படுமிடத்து பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.
1. குருதிக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள்
ஒரு வாகனம் சரியாக இயங்குவதற்கு அதற்குரிய எரிபொருள் விநியோகம் சரியான முறையில் இருக்க வேண்டும். அதேபோன்று எமது கால்களும் சரியாக இயங்க அதற்குரிய குருதி விநியோகம் சிறப்பாக அமைதல் வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளின் நாள்பட்ட நிலைமையில் அவர்களது நாடிகளில் கொழுப்பு படிவங்கள் ஏற்படும். அந்த நாட்களில் உட்பகுதி தடிப்படைந்து குருதி விநியோகிக்கும் அளவு குறைவடைகின்றது. குருதி விநியோகம் குறைவடையும் போது காலில் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராகப் போராடும் வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் காலைச் சென்றடையும் அளவு குறைவடைகின்றது. இதனால் தொற்று ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது. மேலும், காலில் நகத்துக்கும் தோலுக்கும் போதிய குருதி விநியோகம் கிடைக்காமலும் போகிறது.
இதனால் நகங்கள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன் இலகுவில் உடைந்தும் விடுகின்றன. இவ்வாறான நகங்கள் வெட்டுவதற்கும் கடினமானவையாகின்றன. கால்பாகத்தில் உள்ள தோற்பகுதி பளபளப்பானதாக மாற்றமடையும் கால்பகுதியில் காணப்படும் சிறிய குருதிக் கலனிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இக்குருதிக் கலனின் சுவர்ப் பகுதி பலவீனமடைவதுடன் சில சமயங்களில் உடைந்தும் விடுகின்றது. இத்தகைய சிறிய குருதிக் கலன்களும் காலின் பகுதிக்கு வேண்டிய போசனைப் பதார்த்தங்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தொற்றுக்கள் ஏற்படின் அவை இலகுவில் குணமடையாது.
2. நரம்புத் தொகுதியில் ஏற்படும் பாதிப்புக்கள்
கால் பகுதிக்கான நரம்பு விநியோகத்திலும் சில பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. சிறிய குருதிக் கலனில் ஏற்படும் பாதிப்பால் நரம்புகளுக்கான குருதி விநியோகம் குறைவடையும். இதனால் நரம்புகளுக்கு வேண்டிய போசணையும் குறைவடையும். இதனால் கலன்களில் உணர்ச்சிக் குறைவு ஏற்பட்டுக் காயங்கள் இலகுவில் ஏற்படலாம். எனவே இதில் ஏற்படும் சிறிய புண்கள் பெரிதாகப் பெரிதாக கால் விரல்களை அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படலாம்.
எனவே இவ்வாறான நோயாளிகள் தங்கள் பாதங்களை அடிக்கடி ஒழுங்காக அவதானித்து சரியான பராமரிப்பை வழங்குவதன் மூலமும் நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமும் காலில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம்.
கோ.நந்தகுமார்,
விரிவுரையாளர்,
தாதியர் பயிற்சிக் கல்லூரி,
யாழபபாணம்.