எப்போதும் பாரம்பரிய பழக்கங்களுக்கும் புதிய மருத்துவ அறிவுரைகளுக்கும் இடையில் ஒரு கண்ணுக்குத்தெரியாத இழுபறி இருந்து கொண்டே இருக்கும். இது கர்ப்பிணி தாய்மாருக்கும் அவர்களின் உணவு பற்றிய பல கேள்விகளுக்கும் பொருந்தும்.
ஒரு பெண் தாயாக மாறத் தொடங்கியவுடன் பலரும் இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதே என்று அறிவுரை கூறத்தொடங்கிவிடுவர்கள். உண்மையில் அந்த புதிதாக தாயாக போகும் பெண் தான் பாவம். மேலும் கிடைக்கும் சில அறிவுரைகளையும் வாசித்து அவளும் குழம்பி விடுவாள்.
இவ்வாறன சந்தேகங்களை தீர்ப்பதற்கு சற்று முயற்சிப்போம்.
எவ்வகை உணவுகளை உண்ணலாம்?
- குறுகிய இடைவெளிகளில் சிறிய அளவில் இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
- போசாக்குள்ள உணவுகளே ஓருடல் ஈருயிர் ஆக இருக்கும் கர்ப்பிணி தாய்மார்க்கு உகந்ததாகும்.
- சம போசாக்குள்ள உணவே எப்போதும் சிறந்தது. இது கருவுற்ற காலத்துக்கும் பொருந்தும்.
- இதற்கு முன்னர் எதாவது உணவுகள், பழங்கள், விலங்கு உணவுகள் என்பன ஒத்துக்கொள்ளாமல் இருப்பின் அவற்றை கர்ப்ப காலத்தில் கட்டாயம் தவிர்க்கவும்.( உதாரணம்: கணவாய் இறால் தக்காளி)
- இதை தவிர வேறு சில உணவுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும். (உதாரணம்: விட்டமின் A நிறைந்த ஈரல்).
- அதேவேளை காய் பருவத்திலுள்ள பப்பாசி அன்னாசி போன்றவற்றை தவிர்க்கவேண்டும். நன்கு கனிந்த பப்பாசி அன்னாசி போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றால் பாதிப்பு இல்லை என விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- சிலவேளைகளில் கர்ப்பகலத்தில் ஏற்படும் நீரிழிவு இருக்குமாயின் அதற்குரிய முறையில் சாப்பிடவேண்டும்.அதி கூடிய இனிப்பு, மாச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்கவேண்டும். இல்லாவிடில் இவ்வகை உணவுகளின் விளைவாக ஏற்படும் அதிகூடிய குளுக்கோசினால் கருவிலுள்ள சிசு பாதிக்கப்படும். அளவான மாச்சத்து உள்ள உணவு களை மருத்துவ ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
- ஆரம்ப மூன்று மாதங்களும் சற்று சத்தி ,வயிற்று பிரட்டு கூடிய காலப்பகுதியாகும் . இது வழமையாக ஏற்படும் நிகழ்வு ஆகும். உரிய முறையில் மருத்துவ ஆலோசனை மற்றும் சில மருந்துகளின் மூலம் இப்பிரைச்சினையை சமாளிக்கலாம்.
- போசாக்கான உணவை உண்பதனால் சுகதேகியான அம்மாவும் பிள்ளையும் உருவாகலாம்.நாம் வழமையாக உண்ணும் உணவே சிறந்த மருந்தாகும். மேலதிகமாகக் கர்ப்ப காலத்தில் சிலவகை விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.(folic acid, calcium)
- கூடுதலாக பழங்கள் (வாழைப்பழம்),காய்கறிகள் மற்றும் கீரை வகை களை உணவில் சேர்ப்பதால் இலகுவில் செமிக்கும். மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பும் இல்லை.
- எமது பிரதேசத்தில் அதிகளவில் காணப்படும் இரத்தச்சோகை குறைபாடும் உணவில் கீரைகளை சேர்ப்பதால் குறையும்.
- முருங்கையிலை எமது பகுதியில் கிடைக்கும் மலிவான,கிருமிநாசினி தொற்று இல்லாத, இரும்பு சத்து உள்ள கீரை ஆகும். இந்த முருங்கையிலையை உணவில் சேர்ப்பதை பற்றி சுகாதார ஆராய்ச்சி நிறுவனம்[MRI-SriLanka] தற்போது ஆராய்ச்சி செய்கிறது.
- இத்துடன்,மேலதிகமாக இரும்புச்சத்து குளிசைகளை வைத்திய ஆலோசனைப்படி தவறாது எடுக்கவேண்டும்
வேறு என்ன தெரிந்திருக்க வேண்டும் ?
- கர்ப்ப காலம் உடல் நிறையை கூட்டுவதற்கான காலம் அல்ல. அதேபோல் குறைப்பதற்கான காலமும் அல்ல.உடல் நிறையை கட்டுப்படுத்துவது கர்ப்பம் தங்குவதற்கு முன்னர் மேற்கொள்ளவேண்டிய ஒரு செயலாகும்.
- அதிகளவான நீரை குடிப்பது ஆரோகியமான ஒரு பழக்கம். கர்ப்ப காலத்தில் அதிக நீரை குடிப்பதால் சிறுநீர் கிருமி தொற்று நோய்கள் வருவதை தவிர்க்கலாம். வெப்ப காலத்தில் ஏற்படும் நீர் இழப்பையும் தடுக்கலாம்.
- பச்சை காய்கறிகளை உண்ணுதல் எப்போதும் தவிர்க்கப்படவேண்டும்.உப்பு நீரில் நன்றாக கழுவி உண்ணலாம். அல்லது கரட் போன்றவற்றை நன்கு தோல் சீவி உண்ணலாம்.
- அதேவேளை சுத்தமற்ற அல்லது வீதி ஓரங்களில் விற்கப்படும் பாதுகாப்பற்ற உணவுகளை தவிர்க்கவேண்டும். அதேமாதிரி கடலுணவுகளை நன்றாக சமைத்து உண்ண வேண்டும்.
- மாச்சத்து நிரம்பிய உணவுகளை அதிகளவில் எடுக்கவேண்டாம்.
- நிறையுணவாக அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவே எப்போதும் சிறந்தது.
இதுவே தாய்க்கும் சேய்க்கும் சிறந்தது.
Dr. கந்தையா குருபரன்
பெண் நோயியல் மகப்பேற்றியல் நிபுணர்/சிரேஷ்ட
விரிவுரையாளர், யாழ் மருத்துவ பீடம்/ யாழ் போதனா வைத்தியசாலை