சலரோகம் (Diabetes mellitus) இன்று எமது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வளர்ந்தவர்களில் 10 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் இந்நோயினால் பாதிக்கப்படுள்ளார்கள். வருங்காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம்.
சலரோகமானது முறையாகச்சிகிச்சை பெறப்படாது விட்டால் உடலிலுள்ள எல்லா உறுப்புக்களையும் பாதிக்கக்கூடியது. கண்கள், மூளை, இருதயம், ஈரல், சிறுநீரகங்கள், பாதங்கள் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது.
சலரோகத்தினால் பாதங்களில் ஏற்படுமு் பாதிப்புக்களானவை பாரதூரமானவை. இதனால் சத்திரசிகிச்சை மூலம் கால்களை அகற்றவேண்டி ஏற்படலாம் (Amputatron) விபத்துக்களால் அல்லாத Amputatron இதற்கான பிரதான காரணம் சலரோகம் ஆகும்.
சலரோகமானது எவ்வாறு பாதங்களைப் பாதிக்கின்றது?
இது மூன்று வகையான தாக்கங்களினால் ஏற்படுகின்றது.
1. காலிலுள்ள நரம்புகள் பாதிப்படைவதால் காலில் உணர்ச்சி குறைவாக இருக்கம். இதனால் சிறுகாயங்கள் ஏற்பட்டால் நோயாளிக்குத் தெரியாது. அது மட்டுமல்லாது நரம்புத் தாக்கத்தினால் காலிலுள்ள தசைகள் பலவீனமடைவதால் காலின் வடிவமைப்பு மாறுபடுகின்றது. இதனால் காலின் குதி, பெருவிரலின் அடிப்பகுதி, போன்ற இடங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு புண்கள் ஏற்படுகின்றன. இதைவிட காலிலுள்ள ஈரலிப்பு மற்றும் எண்ணைத்தன்மை குறைவடைவதால் தோல் வரண்டு வெடிப்புக்கள் ஏற்பட்டு கிருமித்தொற்று ஏற்படுகின்றது.
2. சலரோக நோயாளிகளின் கால்களிலுள்ள இரத்தக்குழாய்களில் கொலஸ்ரோல் அடைப்பு ஏற்படுகின்றது. இதனால் காலிற்குச் செல்லும் இரத்ததோட்டம் குறைவடைவதால் இலகுவில் புண்கள் ஏற்படுகின்றன. அத்துடன் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை.
3.சலரோக நோயாளிக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகிறது அத்துடன் அதிக குளுக்கோஸ் நோய்கிருமிகள் பெறுக ஏதுவாகிறது. இதனால் காலில் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
சலரோக நோயாளியின் காலில் உள்ள பாதிப்புக்களை இனம் காண்பது எவ்வாறு?
சலரோக நோயாளிகள் குறிப்பாக காலில் நரம்புத்தாக்கம் உள்ளவர்கள் தினமும் தமது கால்களை காயங்கள், ஆணிக்கூர் என்பன உள்ளதா எனப்பரிசோதிக்க வேண்டும். கண்பார்வைக்குறைபாடுடையவர்கள் வீட்டிலுள்ள உறவினர்களைக் கொண்டு தமது கால்களைப் பரிசோதிக்க வேண்டும்.
காலில் எரிச்சல், விறைப்புத்தன்மை, கரண்ட அடிப்பது போன்ற நோ, என்பவை இருந்தால் அது கால்களில் சலரோகத்தினால் ஏற்படும் நரம்புத்தாக்கமாக இருக்கலாம் இது பற்றி உடினடியாக வைத்தியரிடம் கலந்தாலோசிக்கவும்.
கால்களில் ஆணிக்கூர் (calosity) காயங்கள், புண்கள், வெடிப்புக்கள், பூஞ்சணம் (Fungus) போன்றன பாதிப்புக்கள் தோன்றினால் காலந்தாழ்த்தாது வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்வது சிறந்தது. வருடத்திற்கு ஒரு முறையாவது வைத்தியரைக்கொண்டு கால்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
சலரோக நோயாளிகள் கால்களைப்பராமரிப்பது எவ்வாறு?
முக்குறிப்பிட்டதுபோல் தினமும் இரவில் படுக்கும்முன் பாதங்களை பரிசோதியுங்கள் அடிப்பாதங்களை கண்ணாடியின் உதவியுடன் பார்க்கலாம்.
கால்களில் ஏற்படும் வறட்சித்தன்மை வெடிப்புக்கள் ஏற்பட்டு கிருமித்தொற்று ஏற்பட ஏதுவாகின்றது.
இதனைத்தடுப்பதற்கு கால்களின் மேற்புறத்தில் நல்லெண்ணெய் போன்ற எண்ணெய் ஈரலிப்பைத் தரும் Aquoas cream, emoderm என்பவற்றைத் தடவாலாம். ஆனால் எண்ணெயையோ , கிறீமையோ கால்விரல்களுக்கிடையில் தடவக்கூடாது. இதனால் Fungus தாக்கம் ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் கால்களை தினமும் இளஞ்சூட்டுநீரில் அல்லது சாதாரண நீரில் நன்றாக கழுவிய பின் ஒத்தித்துடைக்க வேண்டும். விசேடமாகக் கால் விரல்களுக்கிடையில் ஈரளிப்பு இருந்தால் பங்கஸ் வளர ஏதுவாகும் கால்களை அதிக நேரம் நீரில் ஊறவிடாதிர்கள். கால்விரல்களுக்கிடையே Talcom powder ஐ போடலாம்.
கால்களில் இரத்தோட்டத்தைச் சீராக்குவதற்கு இருக்கும் போது கால்களை stool ஒன்றில் உயர்த்தி வையுங்கள் விரல்களையும் பாதங்களையும் மேலும் கீழுமாகக 5 நிமிடங்களுக்கு அசையுங்கள். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 – 3 தரம் செய்யுங்கள். கால்களை ஒன்றுக்கு மேல் ஒன்றைப் போட்டு உட்காராதீர்கள்.
நகங்களைப் பராமரிப்பது எவ்வாறு?
நகங்களை காலத்திற்குகாலம் வெட்டிச்சுத்தம் செய்ய வேண்டும். நகங்களை வெட்டும் போது குறுக்காக நேராக வெட்டவும். மூலைகளில் அதிகமாக வெட்டக்கூடாது. மூலைகளில் அதிகம் வெட்டினால் நகம் தோலிற்குக்கீழ் வளர்ந்து நோவை ஏற்படுத்தும் . குளித்த பின் நகங்கள் மென்மையாக உள்ளபோது நகம் வெட்டுவது இலகுவாகும்.
ஆணிக்கூர் (Callosity and carns) களை என்ன செய்வது?
சலரோக நோயாளிகளுக்கு ஆணிக்கூர் ஏற்படுவது மற்றவர்களை விட அதிகமாகும். இதனால் மாறாதபுண் ஏற்படலாம். ஆணிக்கூர் ஏற்பட்டால் வைத்தியரின் உதவியுடன் அகற்றலாம். கடையில் விற்கும் கிறிம்களையோ, Corn Plaster களையோ பயன்படுத்த வேண்டாம். அவை தோலில் புண்ணை ஏற்படுத்தலாம். ஆணிக்கூர் ஏற்படுவதைத் தடுக்க விஷேட பாதணிகளும் பாதணிகளில் காலிற்குக் கீழ் வைக்கக்கூடிய தட்டுக்களையோ பயன்படுத்தலாம். இவற்றை யாழ்ப்பாணத்தில் Jaipur Rehabilitatraon Centre , Chundukuli இல் பெற்றுக்கொல்லளாம்.
பாதணிகளைத் தேந்தெடுப்பது எவ்வாறு?
சலரோக நோயாளிகள் பாதங்களில் உணர்ச்சிகுறைவாக இருப்பதால் பாதணிகளை உபயோகிப்பது அவசியம். விட்டிற்கு வெளியே என்றால் அத்தியாவாசியமாகவும் உள்ளே என்றால் கூடுமானவரைக்கும் பாதணிகளை அணியுங்கள். பாதணிகளை வாங்கும் போது முழுவதும் மூடிய, சௌகரியமான பாதணிகளை வாங்குங்கள். அதாவது sandles, silippers ஐ விட shoos (சப்பாத்துக்கள்) தான் சிறந்தவை. மேலும் நுனிஅகலமாகவும் தட்டையான பாதணிகள் கூரான, உயர்ந்த பாதணிகளை விட சிறந்தவை. leather அல்லது canvas ஆல் ஆன பாதணிகளைத் தேர்ந்தேடுங்கள். பாதணிகளை வாங்கும் போது மாலை நேரத்திலேயே வாங்கப்படவேண்டும். மாலை வேளையில் காலையை விட பாதங்கள் வீக்க மடைவதால் அந்நேரம் வாங்கும் பாதணிகளே அளவாக அமையும். மேலும் பாதணிகளை வாங்கும்போது விரல் நுனியைவிட ½ அங்குலம் முன்னால் இடைவெளி உள்ளதா எனப்பார்த்து வாங்குங்கள்.
பாதணிகளை அணியும்போது காலுறைகளையும் கட்டாயமாக அணியவேண்டும். காலுறைகளும் இறுக்கமாக இருக்கக்கூடாது. Cotton, wool போன்ற இயற்கையான இழைகளினாலானவை Nylone ஆல் ஆனவற்றை விட நல்லவை. அவற்றைத் தினமும் தோய்த்து அணியுங்கள்.
முடிவாக
சலரோக நோயாளிகள் தமது பாதங்களை முகம்போல பராமரிக்க வேண்டும். காலத்திற்குகாலம் வைத்தியரிடம் சென்று கால்களை பூரணமாக பரிசோதித்துக்கொள்வது நல்லது. புகைப்பிடித்தல் கால்களுக்கு இரத்தோட்டத்தைக் குறைப்பதால் முற்றாகத் தவிர்ப்பது நல்லது. சலரோகத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்பல முறையாகவும் ஒழுங்காகவும் வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெறுவதன் மூலமும் உணவுக்கட்டுப்பாட்டைக்கடைப்பிடிப்பதன் மூலமும் பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்
Dr.S.கேதீஸ்வரன் MBBS,MD
பொதுவைத்திய நிபுணர்
விடுதி இலக்கம் 9, 3
யாழ் போதனா வைத்தியசாலை