இன்றைய நவீன யுகத்திலே காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுள் மருத்துவ ரீதியாகப் பெரிய பிரச்சினையாக விளங்குவது தீக்காயங்கள் எனலாம். மக்கள் தமது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. அதற்குத் தீர்வாக சிலர் தமக்குத்தாமே தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொள்வது சுலபமான வழி எனக் கருதி செயற்படுகின்றனர். இது இன்று குடாநாட்டைப் பொறுத்தவரை அதிகரித்துக் காணப்படுகிறது எனலாம். படித்தவர்கள், சிறுவர், பெண்கள், ஆண்கள் எனப் பலதரப்பட்டோரும் எடுக்கின்ற திடீர் முடீவு பெரிய பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்கிறது. நாம் சிந்திப்பது போல தமக்குத் தாமே தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதன் மூலம் அனுபவிக்க வேண்டிய தேனைகள், வலிகள், கொடுமைகள் ஏராளம்.
அதவாது தீக்காயம் என்பது, வெப்பத்தினாலோ, நீராவி போன்றவற்றினாலோ, மின்சார அதிர்ச்சியினாலோ ஏற்படுகின்ற தோலின் தொடர்ச்சித் தன்மை பாதிக்கப்படல் என வரையறுக்கப்படுகிறது. இது மேற்பரப்பான காயமாகவோ, ஆழமான காயமாகவோ ஏற்படலாம். தீக்காயத்தினால் ஏற்படுகின்ற வலி தாங்க முடியாததாகவும், அதிகமானதாகவும் காணப்படுகின்றது. ஆழமான தீக்காயம் நோ அற்றதாகவோ அல்லது குறைவானதாகவோ காணப்படும். இது ஆபத்தான நிலையாகும். தோலில் உள்ள நரம்பு முடிவிடங்கள் அழிவடைந்திருப்பதாலேயே ஆழமான தீக்காயங்கள் வலிகுறைவாக அல்லது இல்லாமற் காணப்படுகின்றது.
தீக்காயம் ஏற்படும்போது, உடலில் நிகழுகின்ற உடலியல் தொழிற்பாடு காரணமாக நீர்க்கட்டிகள் (கொப்பளங்கள்) ஏற்படல், வீக்கமடைதல், கிருமித்தொற்று போன்ற ஏற்படுகின்ற. இவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற. தீச்சுவாலை சுவாசிக்கப்படுவதால் சுவாசப் பாதையிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
தீக்காயங்கள் வெப்பத்தோடு சம்பந்தப்பட்ட சுடுநீர், நீராவி, சூடான உலோகங்கள், தீ மூட்டல் போன்றவற்றாலும் இரசாயனப் பாதிப்புக்களாலும், மின் தாக்குவதாலும், கதிர்வீச்சினாலும் ஏற்படுகின்றது. கூடுதலாக இவை வீடு மற்றும் தொழிற்சாலைகளிலேயே ஏற்படுகின்றன. அதிகபட்டமாக விபத்தாகவும் சிலவேளைகளில் தற்கொலை முயற்சியாகவோ அன்றி கொலை முயற்சியாகவோ ஏற்படுத்தப்படுகின்றது. அதிகமாக வறியவர்களே இதனால் பாதிக்கப்படுவதை தரவுகளிலிருந்து அறிய முடிகின்றது. தீக்காயங்கள் மூலம் என்பு உடைவுகள், என்பு விலகல்கள் போன்ற ஏற்படலாம். ஏனெனில் உடனடியாகச் செய்யப்படுகின்ற முதலுதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த நிலைக்கு இட்டுச்செல்லலாம்.
தீக்காயங்கள் மூலம் உடலின் பாதுகாப்புக் கவசமான தோலின் தொடர்ச்சித் தன்மை பாதிக்கப்படுவதால் கிருமிகள் சுலபமாக உடலுக்குள் செல்கின்றன. மேலும் தோலினால் செய்யப்படுகின்ற ஏனைய உடல் நீர்ச்சமநிலை போன்ற தொழிற்பாடுகளும் பாதிப்படைகின்றன. கூடியளவு திரவம் தோலினால் பாதிக்கப்பட்ட பகுதியினூடாக வெளியேறுகின்றது. இதனால் திரவ சமநிலை பாதிக்கப்பட்டு சிறுநீரக பாதிப்புக்கும் இட்டுச்செல்லலாம். தீக்காய நிலையில் அதிகளவான நீராகாரம் உள்ளெடுக்கப்படல் வேண்டும். வைத்தியசாலைகளில் நாளமூடாக அதிகளவு திரவம் வழங்கப்படும்.
இவ்வாறான பாதிப்புக்கள், விரும்பத்தகாத பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிருமித்தொற்று, சுவாசம் சம்பந்தமான மற்றும் சலவழி சம்பந்தப்பட்ட கிருமித் தொற்று என்பன ஏற்படுகின்றன. காலில் ஏற்படுகின்ற ஆழமான தீக்காயம் குருதிக் குழாய்களில் கட்டிபடும் தன்மையை ஏற்படுத்தி சுற்றயல் கலங்களுக்குரிய குருதி விநியோகத்தை, சுற்றோட்டத்தை பாதிப்படையச் செய்கின்றது. கடுமையான தீக்காய நிலைமையில் வலி காரணமாக ஆழமாக மூச்சுவிடுவதில் கஷ்டம் இருப்பதால் அதனை நோயாளர்கள் தவிர்ப்பதால் சுவாசத்தொற்று நிலைக்கு இட்டுச்செல்கிறது.
தீக்காயங்கள் குணமடைந்தாலும் பாதிக்கப்பட்ட தோலுக்கு பதிலாகப் புதிய தோல் உருவாக்கம் உடம்பெறாது, மாறாக தழும்புகள் ஏற்படுகின்றன. இது மூட்டுக்களின் அசைவுகளை மட்டுப்படுத்துகின்றன கழுத்து கமக்கட்டு, முழங்கை, விரல்கள், என்பவற்றின் அசைவுகள் மட்டுப்படுத்தப்படுவதால் அவற்றினால் உரிய தொழிற்பாடுகளை ஆற்ற முடியாமல் போய்விடும். இதனால் நாளாந்தக் கடமைகளை ஆற்றுவதற்குக்கூட, பிறரை நம்பியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம். மேலும் வரவு நிலைகள் பாதிப்படைந்து பொருளாதார நிலை பாதிப்படைகின்றது.
சில வகையான தீக்காயங்கள், கூடுதலாக மின்சாரம் தாக்கி ஏற்படுகின்ற தீக்காயங்கள், தசைக்கலங்களை அழிவடையச் செய்வதால் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் தீக்காயங்கள் மூலம் அதிகளவு நீர் தோலினூடக வெளியேறுவதால் சிறுநீரகப் பாதிப்பு நிலை ஏற்படலாம். தீக்காயங்களினால் ஏற்படுகின்ற தழும்புகள் அடையாளங்கள் போன்றவை உடல் அமைப்பையும் தோற்றத்தையும் மாற்றிவிடும். இது சமூகவடுவுக்குக் காரணமாகிறது. சமூக அங்கத்தவர்கள் இழிவாகப் பார்க்கின்ற நிலையும் தாமாகவே சமூகத் தொடர்புகளிலிருந்து விலகி ஒதுங்கிக் கொள்கின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது. இது ஒரு வகையான உளநோய் நிலைக்கு இட்டுச்செல்லும்.
மேலும் குடும்ப அங்கத்தவர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்ற, பாரபட்சம் காட்ப்படக்கூடிய நிலையைக் கூட ஏற்படுத்தலாம். இவ்வாறான தீக்காயங்களைத் தற்கொலை முயற்சியாகவோ, அன்றி கொலை முயற்சியாகவோ ஏற்ப்படுத்தப்படுதலை நிறுத்த வேண்டும். விபத்தாக ஏற்படுவது தவிர்க்க முடியாவிடினும், பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து விபத்து மூலம் தீக்காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பாதுகாப்பு கவசங்கள், நிதானமான செயற்பாடுகள், விழிப்புணர்வு நடைமுறைகள் போன்றனவற்றில் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும். வீட்டில் விபத்து தீக்காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கக் குழந்தைகள் மீது அவதானமாக இருத்தல், குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் சுடுநீர் வெப்ப பதார்த்தங்களை வைத்தல், மேசை விரிப்புக்கள் மேல் சுடுகறிகள், சூடான பதார்த்தங்களை வைத்தல், என்பவை மூலம் குழந்தைகள் அவற்றை இழுப்பதன் மூலம் விபத்து தீக்காயம் ஏற்பட வாய்ப்புண்டு அதிக முக்கியமாகத் தற்கொலை தீமூட்டல், என்பதை தவிர்க்க வேண்டும். அதனால் ஏற்படுகின்ற வலிகள், நோக்கள், உணர்வுகள் தனிமனிதனுக்கு மட்டுமன்றி அவனது குடும்பத்தினர், உறவினர், சமூகம் என எல்லோரதும் உடல், உள சமூக ரீதியான பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அரசுக்குக் கூட பெரியளவான செலவுத்தானத்தை ஏற்படுத்தி விடுகின்றது. எனவே அறிவுத் தன்மையுடன் சிந்தித்துத் தற்கொலை நோக்கில் தீ மூட்டலில் உள்ள பாதிப்பை உணர்ந்து செயற்படுவோம். எமது உடல் உள, சமூக ஆத்மிக பொருளாதார நிலையைப் பேணுவோம்.
திருமதி பரமேஸ்வரி பாலசூரியர்
பொறுப்பு விடுதி தாதிய சகோதரி
விபத்து சேவை விடுதி
யாழ் போதனா வைத்தியசாலை