டெங்கு காய்ச்சல் இன்று எம்மிடையே விரைவாக பரவிவருகின்ற காய்ச்சல் ஆகும். பல உயிர் இழப்புக்கழையும் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுத்துகின்றது. டெங்கு காய்ச்சல் Dengue Virus எனப்படுகின்ற Flavivirus இனத்தை சேர்ந்த ஒரு வகையான வைரஸ் கிருமியால் ஏற்படுவதாகும். இந்த வைரஸில் பிரதானமாக நான்கு வகையான பிற பொருள்களைக்கொண்ட (Antigenic) வைரஸ் வகைகள் உள்ளன.
இந்த நோய்ககுரிய வைரஸ், பிரதானமாக பகல் வேளைகளில் கடிக்கின்ற ( Adesacgypti என்ற ஒரு வகையான நுளம்பால் ஒரு நோயுற்ற மனிதனில் இருந்து இன்னொரு சுகதேகிக்கு தொற்று ஏற்படுத்துகிறது. பொதுவாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளி அவருக்கு காய்ச்சல் தொடங்கி முதல் மூன்று நாள்களுக்கு அவரின் குருதியில் உள்ள வைரஸ் கிருமி அவருக்கு கடிக்கும் நுளம்பால் உள்ளெடுக்கப்படுகிறது. வைரஸ் தொற்ற ஏற்பட்ட ஒருவருக்கு நோய்க்குரிய அறிகுறிகள் ஏற்பட 5 – 6 நாள்கள் எடுக்கிறது.
நோய் அறிகுறிகள்
டெங்கு காய்ச்சலை பிரதானமாக இரண்டு வகைப்படுத்தலாம்
1. சாதாரண டெங்கு காய்ச்சல்
2. இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல்
இந்த நோய்க்குரிய அறிகுறிகள் உயர் காய்ச்சல், சோம்பல், தலையிடி, முகம் சிவந்து இருத்தல், கண்ணின் பின்புறம் நோ, கண் மடலின் உட்புறம் சிவந்து இருத்தல், உடல்நோ, குமட்டல், வாந்தி, வாய் காய்தல், என்பனவாகும். சில சந்தர்ப்பங்களில் நிணநீர் கணுக்களில் வீக்கம், வயிற்றோட்டம், தலைச்சுற்று என்பனவும் ஏற்படலாம். இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலில் பிரதானமாக வயிற்றுநோ, சிவப்புநிற புள்ளிகள், உடலிலும் வாயின் உட்புறத்திலும் கண்மடலின் உட்புறத்திலும் ஏற்படுகிறது.
சிலருக்கு இரத்தமாக வாந்தியோ, கோப்பி நிற வாந்தியோ, அல்லது கறுப்பு நிறமாக மலம் வெளியேறுதல், குருதி அமுக்கம் குறைதல் என்பன ஏற்படுகின்றன. இவை மிகவும் ஆபத்தான நோய் அறிகுறிகள் எனக் கருதப்படுகின்றன.
சாதாரணமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு 3 – 5 நாள்கள் வரை காய்ச்சல் தொடர்கிறது. பின்னர் காய்ச்சல் குறைவடைகின்ற போதே நோய்க்குரிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே காய்ச்சல் குறைந்த பின்னரும் சோம்பல், சாப்பாட்டுக்கு மனம் இன்மை, தலைச்சுற்று, வயிற்று நோ என்பன தொடர்ந்தும் இருந்தால் அவையும் ஆபத்தான அறிகுறிகளே.
பிசோதனைகள்
காய்ச்சல் ஏற்பட்டு மூன்று நாட்களின்பின் காய்ச்சல் தொடருமாயின் அல்லது மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் ஏதாயினும் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரின் உதவியை நாடி இரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பதன் மூலம் டெங்கு நோயை மற்றைய வைரஸ் நோய்களில் இருந்து வேறுபடுத்தி அறிவதுடன் அவற்றுக்கான உரிய சிகிச்சையையும் நோய் உக்கிரம் அடைவதற்கு முன்னதாக ஆரம்பிக்கலாம்.
குருதிப்பரிசோதனையாக முதலாவதாக Full Blood Count என்ற பரிசோதனை செய்யப்படுகின்றது. இதில் டெங்கு நோய்க்குரிய மாற்றங்களாக வெண்குருதி சிறுதுணிக்கைகளின் அளவு முதலில் குறைவடையும். பின்னர் குருதியில் உள்ள குருதிச் சிறுதட்டுகள் குறைவடையும். அதேவேளையில் PCV என்ற அளவும் உயர்வடைகின்றது. இம்மாற்றங்களைக் கொண்டே டெங்கு நோய் என பிரித்து அறியப்படுகிறது. டெங்கு காய்ச்சல் என்பதை சரியாக உறுதிப்படுத்த பல பரிசோதனைகள் உள்ள அவை.
1. டெங்கு Antibidy test
2. டெங்கு Virus PCR test என்பனவாகும்.
இந்த பரிசோதனைக்கான செலவுகள் அதிகம் என்பதால் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே வைத்தியர்களால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது.
சிகிச்சை முறை
இந்த நோய்க்கு உட்பட்டவர்களுக்கு எந்தவிதமான விசேட மருந்துகளும் இல்லாத போதிலும் நோயாளியை மிகவும் உன்னிப்பாக அவதானிப்பதோடு அவரின் குடிக்கும் நீரின் அளவையும் வெளியேறும் சிறுநீரின் அளவையும் அவதானிக்க வேண்டும். சாதாரணமான டெங்கு காய்ச்சல் பொதுவாக மேற்குறிப்பிட்ட மருத்துவமுறைகளால் சுகமளிக்கப்பட்ட போதிலும் சில நோயாளர்கள் இரத்தப் பெருக்குடன் கூடிய நோய் நிலைக்குச் செல்கின்றார்கள். இவர்களில் சிலரே இறப்புக்கும் உள்ளாகின்றனர். இந்த உக்கிர நிலையை அடையும் நோயாளர்களுக்கு விசேட மருத்துவக் கவனிப்புகள் தேவைப்படுகின்றன. சில வேளைகளில் அதிதீவிர சிகிச்சை பரிவுகளிலும் வைத்து பராமரிக்கப்படுகின்றனர்.
விசேடமாக டெங்கு நோயாளர்கள் கவனிக்க வேண்டியவை
அவர்கள் விடுதியில் இருக்கும் போது வைத்தியர்களின் அறிவுரைக்கு ஏற்றபடி ஒழுங்காக குடிக்கும் பானவகைகளின் அளவையும் வெளியேறும் சிறுநீரின் அளவையும் அளந்து வைத்தியருக்கோ அல்லது தாதியருக்கோ தெரியப்படுத்த வேண்டும். விடுதியில் பொதுவாக ஜீவனி அருந்தக் கொடுக்கப்படுகின்றது. விடுதியில் உள்ளோர் நீரிழிவு நோய் இல்லாதவர்கள் நீர் அருந்துவதை விட ஜீவனி அருந்துவது நன்று. நீரிழிவு நோயாளர்களுக்கு கஞ்சி, சூப் என்பன நல்லது. விடுதியில் இருக்கும் போது எவ்விதமான சிவப்பு நிற பானங்களையும் அருந்தக் கொடுக்க வேண்டாம். நோய்நிலை குறைவடையும் போது விடுதியில் இருந்து நீங்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டால் விசேடமாக கவனிக்க வேண்டியவை வருமாறு –
நீங்கள் வீடு சென்று போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். ( 3 – 5 நாள்கள்) ஏனெனில் சில நோயாளர்களுக்கு myocarduns என்ற நோய் நிலை இருதயத்திலும் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு விசேடமாக மருந்துகள் தேவையில்லை ஒய்வு எடுத்தல் போதுமானது.
நோயாளர்கள் விடுதியில் உள்ளபோது கவனிக்க வேண்டியவைகளில் தவறாமல் உங்களுடைய கட்டிலுக்குரிய நுளம்பு வலையை உபயோகிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தடுக்க முடியும்.
தடுப்பு முறைகள்
இந்த நோய் ஏற்படுவதிலிருந்து தடுப்பது இலகுவான முறை என்பதனால் நுளம்புக் கடியிலிருந்து விடுபட உரிய முறைகளைப் பாவிப்பதன் மூலம்இந்த நோய்க்குரிய வைரஸ் கிருமி தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். எமது வீட்டையும் சுற்றுப்புற சூழலையும் துப்பரவாக வைத்திருப்பதன் மூலம் நுளம்புகள் பெருக்கடைவதை தடுக்கலாம்.
குறிப்பாக நீர் தேங்கி நிற்கும் வாய்க்கால்கள், நீர் தேங்கும் சிறிய பாத்திரங்கள், குரும்பைகள், பழைய ரயர்கள், என்பவற்றை அகற்றி துப்பரவாக வைத்துக்கொள்வதன் மூலம் நோய் பரவுவதைக் குறைக்கலாம்
Dr.P.யோண்சன் MBBS MD