உலகில் அறியப்பட்ட உடற்பயிற்சிகளில் நீச்சலே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்கின்றது விஞ்ஞானம். ஒரு மணிநேர நீச்சலில் உடலின் அத்தனை தொகுதிகளும் பழுது பார்க்கப்பட்டு அவற்றின் தொழிற்பாடு சீராகி விடுகிறது. இன்று எம்மை அச்சுறுத்தும் நீரிழிவு, கொலஸ்ரோல், இதய நோய்கள், உயர் குருதியமுக்கம் என்று அத்தனைக்குமே ஒழுங்கான நீச்சல் பயிற்சி ஒரு சிறந்த நிவாரணி! இன்றைய நிலையில் வெகு சீக்கிரத்தில் வீட்டுக்கு ஒரு நீரிழிவு நோயாளி என்ற பெருமை இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் ஏற்படும் என்று ஆய்வுகள் அபாயமணி அடிக்கின்றன. இதற்கு காரணம் எமது ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையும் தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்தப்பழக்க வழக்கங்கள், அதிகரித்த உடற்பருமனை ஏற்படுத்துகின்றன. அதிகரித்த உடற்பருமன் எல்லா நோய்களுக்கும் நுழைாயிலாகி இறுதியில் சொர்க்க வாசலையே காண்பித்து விடுகிறது. இந்தப் பழக்க வழக்கங்களை மாற்ற முடியாதவர்கள் ( பல வழிகளையும் கையாண்டு தோற்றுப் போனவர்கள் மாற்ற வேண்டும் என்பதை மட்டும் மாற்றமில்லாமல் சொல்பவர்கள் அதாவது நம்மில் பெரும்பான்மையானோர்) ஆகக் குறைந்தது நீச்சலையாவது ஒழுங்காகச் செய்தால் நல்லது என்பது விஞ்ஞானிகள் கருத்து. நீச்சலில் கிடைக்கும் எல்லாப் பயன்களையும் தரையில் செய்யும் ஏனைய உடற்பயிற்சிகளில் முழுமையாகப் பெறமுடிவதில்லை.
எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் நீச்சல் பெரியளவில் பிரபல்யமடையாததற்கு அதற்குரிய வளங்கள் இருக்காமையும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால் கொழும்பு போன்ற பிரதேசங்களைப் பொறுத்தவரையில் சிறுவயதிலிந்தே நீச்சலைப் பழக்கத் தொடங்கி விடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் தற்போது யாழ் மத்திய கல்லூரியில் சிறந்த ஒரு நீச்சல் தடாகம் உள்ளது. அது தவிர ஏனைய சில தனியார் தடாகங்களும் உள்ளன. ஆனால் நீச்சல் பழகுவதற்கு நீச்சல் தடாகங்கள் தான் அவசியம் என்றல்ல. ஆழம் குறைந்த பாதுகாப்பான கடற்தரை பிரதேசங்களிலும் ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளர், உயர்காப்பாளர் இருக்கும் பட்சத்தில் நீச்சல் பயிற்சியினை மேற்கொள்ளலாம். அத்துடன் எமது வீடுகளில் கூட இடம் இருக்கும் பட்சத்தில் சிறிய நீச்சல் தடாகங்களை அமைத்துக் கொள்ளலாம். அது எதிர்கால சந்ததியின் ஆரோக்கியத்திற்கான முதலீடாக அமையும்.
நீச்சல் ஒரு Aerobic வகையைச் சேர்ந்த அதாவது ஒழுங்கான சந்த்துடன் கூடிய சீரான சுவாசத்தின் உதவியோடு செய்யப்படும் உடற்பயிற்சியாகும். நீச்சலின் போது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதால் நீந்துபவருக்கு நீச்சல் மீதான ஆர்வம் அதிகரிக்கின்றது. இது ஒரு சுழற்சி வட்டமாக மாறுவதால் எமது உடலும் உள்ளமும் உச்ச வினைத்திறனுடனும் இயங்குவதற்கான ஆரோக்கியம் தானாகவே கிடைத்துவிடுகிறது. ஒழுங்கான நீச்சல் பயிற்சியின் மூலம் நாம் பின்வரும் பயன்களை அடைய முடியும்.
- கழுத்தளவு நீரில் ஒரு மனிதன் மிதக்கும் போது 90 வீதம் நிறை நீரினால் தாங்கப்படுவதனால் உடலிலுள்ள மூட்டுக்களில் வழமையாகப் பரியோகிக்கப்படும் அழுத்தம் குறைந்து தசைகளும் மூட்டுக்களும் இலகுவாக இயங்க முடிகிறது. நீங்கள் நீந்தாவிட்டாலும் கழுத்தளவு நீரில் நின்று சில உடற்பயிற்சிகளைச் செய்தாலே மூட்டு சம்பந்தமான பல நோய்களைத் தவிர்க்கலாம் என்பது மூட்டு வாதத்திற்கான ( Arthritis) உலக அமைப்பின் அறிவுரை.
- தரையில் ஒடும் போது காற்றில் ஏற்படும் எதிர்ப்பை விட பன்னிரன்டு மடங்கு அதிக எதிர்ப்பு நீந்தும் போது நீரினால் முழு உடலுக்கும் ஏற்படுகின்றது. இது எமது தசைகளின் வலிமையையும், இழுவிசையையும் ( Tone) அதிகரிக்க உதவுகின்றது. நீச்சல் என்புகளின் வலிமையையும் அதிகரிப்பதால் மாதவிடாய் நின்ற பின் பெண்களுக்கு ஏற்படும் என்பு சம்பந்தமான நோய்களுக்கு நீச்சலே சிறந்த நிவாரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
- உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் போது குறித்த ஒரு உடற்பகுதி அல்லது தசை மட்டுமே குறித்த நேரத்தில் பயிற்சிக்கப்படும். நீச்சலில் முழு உடலும் ஒரே நேரத்தில் சம்பந்தப்படுவதால் முழு உடலினதும் நெகிழ்வுத்தன்மை (Flexibity) அதிகரிக்கின்றது. (குனிய நிமிர ஏலாமல் கிடக்கு என்று சதா புலம்புவர்கள் கவனிக்க)
- நீச்சலின் போது எமது இதயத்தசை நார்கள் பலமடைவதுடன் குருதியைப் பம்பும் திறனும் அதிகரிக்கிறது. அமெரிக்க இருதய நோய்ச்சங்கத்தின் அறிக்கையின்படி தினமும் 30 நிமிடங்கள் நீச்சலில் ஈடுபடுபவர்களில் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு 30 – 40 வீதத்தால் குறைந்துவிடுகிறதாம்.
- சாதாரண நீச்சலில் ( Free style) ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 100 கலோரி சக்தி பயன்படுத்தப்படுவதால் உடல் நிறையைக் குறைக்க அல்லது கட்டுப் பாட்டில் வைத்திருக்க மிகவும் இலகுவான முறையாக உள்ளது. செலவிடும் சக்தியின் அளவு நீச்சல் பாணிகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.
- ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்குப் பயம் இருக்கலாம். ஆனால் நீச்சல் அவ்வாறல்ல. நீச்சல் தடாகத்திலுள்ள ஈரலிப்பான காற்று, நீந்தும்போது ஆஸ்துமா தூண்டப்படுவதை் தவிர்க்க உதவுகிறது. அத்துடன் நீச்சலானது நுரையீரலின் கொள்தகவை (Capacity) அதிகரித்து நோய் அறிகுறிகளைக் குறைக்கிறது.
- கொலஸ்ரோல் அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களில் LDL வகைக் கொலஸ்ரோலின் அளவைக் குறைப்பதும் HDL வகைக் கொலஸ்ரோலின் அளவை அதிகரிப்பதும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. நீச்சல் ஒரு சிறந்த Aerobic வகைப் பயிற்சியாதலால் இவை இரண்டையும் இலகுவாகச் செய்துவிடுகிறது.
- கிரமமாக நீச்சலில் ஈடுபடுபவர்களில் உடலில் மேலதிக குளுக்கோஸ் தொடர்ந்து பயன்படுத்துவதால், நீரிழிவுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஒவ்வொரு வாரமும் 500 கலோரியை செலவித்தால் நீரிழிவுக்கான வாய்ப்பு 6 வீதம் குறையும் என்கிறது ஆய்வு. நீரிழிவு நோயாளர்களில் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் இன்சுலின் ஒமோனுக்கான உணர்திறணை அதிகரிக்கச் செய்து நோய்க்கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
- எல்லாவற்றுக்கும் மேலாக உள ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் வழங்குவதில் நீச்சலுக்கு நிகரான உடற்பயிற்சி இல்லை என்கின்றன ஆய்வுகள். எமக்கு மகிழ்ச்சி ஏற்படும்போது உடலில் சுரக்கும் Gdorphin எனும் ஒரு இரசாயனம் நீச்சலின்போது தானாகவே சுரக்கின்றதாம். மேலும் மூளையில் Hippo campus என்ற பகுதியில் நடைபெறும் கலங்களைப் புதுப்பிக்கும் செயற்பாடு ( Neurogenesis) நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளால் துரிதப்படுகிறதாம். ஆக உற்சாகமாக வாழ நீச்சல் ஒரு சிறந்த பொழுது போக்கு.
- அதிகநாள் வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை. அமெரிக்காவில் நடந்த ஆய்வில் நீச்சல் பயிற்சி செய்பவர்களின் இறப்பு வீதம் ஏனையவர்களுடன் ஒப்பிடும்போது 50 வீதத்தால் குறைவாக இருந்தது. இது ஒன்றே போதும் நீச்சலின் பயன்பாட்டை வளர்க்க, ஆகவே சந்தோஷத்திற்காகவேணும் நீந்தப் பழகுங்கள்.
யாழ்ப்பாணத்தில் முறையாக நீச்சல் பயிற்சிக்கான வசதிவாய்ப்புகள் உருவாகிவரும் சூழ்நிலையில் அவ்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு நீச்சல் பயிற்சி வழங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது. இது வரவேற்க வேண்டிய ஒன்று. அத்துடன் இங்கு பெண்களுக்கு பிரத்தியேக நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் உணவுக்கடைகளில் குளிர்பானங்களுக்கும் ஏனைய தேவையற்ற உணவுகளுக்கும் செலவு செய்யும் பணத்தை இவ்வாறான இடங்களில் செலவிடலாம். நான் சொன்னது போல பாதுகாப்பான கடற்கரை அல்லது வீட்டில் அமைக்கப்பட்ட பெரிய தடாகங்களும் நீச்சல் பயிற்சிக்கு உகந்தவையே.
நீச்சலின் போது எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
- நீச்சல் பயிற்றுவிப்பாளரும், உயிர்காப்பாளரும் இல்லாது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தடாகத்தில் இறங்கக்கூடாது.
- நீச்சல் பழகுபவர்கள் எப்போதும் தடாகத்தின் மிக ஆழம் குறைந்த பகுதியிலேயே இறங்குவதுடன், தற்பாதுகாப்பு அங்கி அல்லது உபகரணத்தை உடன் வைத்திருக்கவும்.
- எக்காரணம் கொண்டும். மதுபோதையில் இருக்கும்போது தடாகத்தினுள் இறங்காதீர்கள். அது ஆழம் மிகக் குறைந்த பகுதியாக இருந்தால் கூட.
ஆக மொத்தத்தில் நீச்சலை வரவேற்போம்!!. எமது இளைய சந்ததியைப் பயிற்றுவிப்போம்!! ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழி சமைப்போம்!!