தாய்ப்பாலின் உன்னதத் தன்மையைப் பற்றியும், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றியும் பெரும்பாலானோர் அறிவர். எனினும் வெற்றிகரமாக தாய்ப்பாலூட்டலைச் செய்வதில் அநேக தாய்மார் சிரமப்படுகின்றனர். இதனால் தான் தாய்ப்பாலூட்டல் சம்பந்தமான ஆலோசனைகளும் அறிவூட்டல்களும் சுகாதார சேவையாளர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. எமது சுகாதார அமைச்சும் தாய்ப்பாலூட்டலை ஊக்குவிப்பதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதன் ஒர் அங்கமாக 2013ம் ஆண்டு ஆவணி மாதத்தின் முதல் வாரத்தை ( 1 – 7ம் திகதி) தேசிய தாய்ப்பாலூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தி தாய்ப்பாலூட்டல் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
தாய்ப்பாலூட்டல் செயற்பாடுகள் வெற்றியடைவேண்டுமாயின் குழந்தை பிறந்த ஆரம்ப நாள்களில் சரியான முறையில் தாய்ப்பாலூட்டலை தாய் ஆரம்பிக்க வேண்டும். அநேகமான தாய்மாருக்கு முதல் ஒரு சில நாள்களில் அதற்கான முறையான வழிகாட்டல் தேவைப்படும். அதன் பின்னர், தாய்ப்பாலூட்டல் தாய்க்கு மிகவும் இலகுவானதாக அமையும். புதிதாய் பிறந்த குழந்தைக்கு முதல் ஒருமணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டல் ஆரம்பிக்கப்பட்டு, எதுவித மருத்துவ காரணங்களும் இல்லையாயின் தனித்தாயப் பாலூட்டலை ( Exclusive Brest Feeding) ஆறுமாத காலம் முடியும் வரை தொடர வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் சிபார்சு ஆகும்.
கீழ்வரும் பந்திகளில் புதிதாய்ப் பிறந்த குழந்தையொன்றுக்கு தாய்ப்பாலூட்டலை சிறந்த முறையில் ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்களைப் பார்க்கலாம்.
A. தாய்க்குரிய நிலைகள்
- இயன்றவரைக்கும் தாயும் குழந்தையும் சௌகரியமாக இருக்க வேண்டும். தாய் தனக்குரிய வசதியான நிலையில் அதாவது கதிரையில் இருந்தோ அல்லது தனது கட்டிலில் படுத்திருந்தோ குழந்தைக்கு பாலூட்ட முடியும். கதிரையில் அமர்ந்து தாய்ப்பாலூட்டுவதற்கு இயலுமானவரை இரு கைகளையும் தாங்கக்கூடிய கைதாங்கி ( Arm Rest) உள்ள கதிரைகளையே பயன்படுத்தவேண்டும். தாய் படுத்திருப்பாராயின் தலைக்கு குறைந்தது இரு தலையணைகளும் அவரின் முதுகுக்கு சாய்வதற்கு வசதியும் செய்யப்பட வேண்டும்.
- தாய் இருந்தவாறு பாலூட்டுவாராயின் தனது உடலுக்குக் குறுக்காகப் படிக்கப்பட்ட ஒரு கையினாலோ அல்லது தொட்டில் போன்று பிடித்த இரு கைகளினாலோ குழந்தையைத் தாங்கிப்பிடிக்க முடியும். குழந்தைக்கும் தாயின் கைகளுக்குமிடையில் ஒரு போதும் தலையணை அல்லது துவாய் போன்றவற்றை வைத்திருக்ககூடாது. கதிரைகளிற் தாய் தனது கைகளை ஒய்வாக வைக்க முடியும். வேண்டுமாயின் தனது கைகளை ஒரு தலையணையின் மேல்வைக்க முடியும். எவ்வாறாயினும் தாய் சௌகரியமாக இருக்க வேண்டும்.
B. குழந்தையில் அவதானிக்க வேண்டியவை.
சிறந்த முறையில் ஒரு குழந்தை தாய்ப்பாலருந்த வேண்டுமாயின் குழந்தையின் நிலை , குழந்தை மார்புடன் இணையும் விகிதம், மற்றும் வினைத்திறனுடனான பாலூறிஞ்சல் என்பன முக்கியமானவையாகும்.
1. குழந்தையின் நிலையில் (Position) அவதானிக்க வேண்டியவை.
- குழந்தையை எவ்வாறு பிடித்திருப்பினும் குழந்தையின், காது, தோள்மூட்டு, இடுப்புப் பகுதி என்பனஒரே நேர் தளத்தில் இருக்க வேண்டும். ( in line) அதாவது குழந்தையின் கழுத்து முறுகுப் பட்டிருக்கக் கூடாது. கழுத்து மடிந்திருக்கக்கூடாது. தலையானது குழந்தையின் உடலின் நிலையிருந்து திரும்பியிருக்கக்கூடாது.
- புதிதாய்ப் பிறந்த குழந்தையின் முழு உடம்பும் தாயினால் தாங்கி பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். (Support) ஒரு போதும் புதிதாய் பிறந்த குழந்தையின் தலையையும் கழுத்தையும் மட்டுமு் தாய் தனது கைகளினால் தாங்கிக் கொள்ளக்கூடாது. மாறாக முழு உடம்பும் தலையின் பிடரி, கழுத்து, தோள்பட்டடைப்பகுதி என்பனவும் தாங்கிப் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- குழந்தையானது தாயின் மார்புக்கு மார்பை நோக்கியிருக்க வேண்டும் ( Close)
- குழந்தையின் முகம் தாயின் மார்பை நோக்கியிருக்க வேண்டும். (Face) அதேநேரம் குழந்தையின் மூக்கு முலைக்காம்புக்கு எதிராக இருக்க வேண்டும்.
2. குழந்தை மார்புடன் இணைப்பை ஏற்படுத்தும் போது அவதானிக்க வேண்டியவை ( Attachment)
- வாய் அகத்திறந்திருக்க வேண்டும். குழந்தையின் மூக்கு நுனியை முலைக்காம்புக்கு எதிரே பிடிக்கும் போதே. குழந்தை தானாக வாயை அகலத்திறக்கும்.
- ஆரியோலா ( areola) எனப்படும் மார்பின் கறுப்பு பகுதியின் பெரும்பகுதி குழந்தையின் வாய்க்குள் இருக்க வேண்டும். ஆரியோலாவின் கீழ் பகுதி பொதுவாக குழந்தையின் வாய்க்கு வெளியே தெரியாது.
- குழந்தையின் கீழ் உதடு வெளித்திரும்பியிருக்க வேண்டும்.
- குழந்தையின் நாடி மார்பைத் தொட்டிருக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்துமிருப்பின் மட்டுமே, ஒரு குழந்தை சரியான முறையில் நன்றாகப் பாலருந்த முடியும் என்பது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில் தாய்க்கு முலைக்காம்பில் புண், பாலூட்டும் போது வலி, தேங்கிய மார்பகம், மார்பக அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதேபோல் குழந்தையும் வினைத்திறனாக பாலருந்தாமல் நிறைகுறைவடையும். குழந்தை பசி தீராது தொடர்ந்து அழும். அதனால் தாய்மார் தமக்கு பால் இல்லை என நினைத்து மனச்சோர்வடையலாம்.
மேலே கூறியவாறு குழந்தையின் நிலையும், மார்புடன் இணையும் விதமும் முறையாக இருப்பின், குழந்தை வினைத்திறனுடன் பாலையுறிஞ்சும் ( Effetive Suckling) வினைத்திறனுடன் பாலருந்தும் குழந்தையின் கன்னம் உட்குழிவடைந்து செல்லுமானால் குழந்தை வினைத்திறனுடன் பாலை அருந்தவில்லை எனக் கருதலாம். வினைத்திறனுடன் பாலருந்தும் குழந்தை பாலை விழுங்குவதற்காக உறிஞ்சுவதை இடையிடையே நிறுத்தும். சில சமயங்களில் குழந்தை பாலை விழுங்கும் போது தொண்டையின் அசைவை அவதானிக்கலாம். சரியான முறையில் பாலருந்திய குழந்தை தனது பசி தீர்ந்தது நித்திரையாகி மார்பிலிருந்து தாகாகவிலகும்.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.