இன்புளுவன்சா A(Infuluenza A) எனப்படுவது ஒருவகை வைரஸ்ஸினால் ஏற்படும் நோய் ஆகும். இது பெரும்பாலும் சுவாசத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த நோயானது குறித்த பிரதேசத்திலோ அல்லது நாட்டிலோ பரவி பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோயானது சாதாரண காய்ச்சல், இருமல், என ஆரம்பித்து முடிவில் தீவிரமடைந்து இறப்பு வரை இட்டுச்செல்லும்.
இந்த நோயால் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள்
- 2வயதுக்கு குறைந்த சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்
- கர்ப்பிணித் தாய்மார்கள்
- ஏற்கனவே ஆஸ்துமா (Asthma) , COPD போன்ற நீண்டகால நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
- இருதயம், சிறுநீராகம், ஈரல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், சலரோக நோயாளிகள், குருதிச்சோகை நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், HIV தொற்று உடையவர்கள்.
- இளவயதில் (19 வயது) தொடர்ந்து அஸ்பிரின் (Aspirin) மாத்திரை பாவிப்பவர்கள்.
நோயின் அறிகுறிகள்
நோயின் அறிகுறிகள் நோயின் தீவிர நிலையைப் பொறுத்து வேறுபடுகின்றன. இதன் அடிப்படையில் நோய் நிலையை சாதாரண இன்புளுவன்சா (uncomlicated influenza) தீவிரமடைந்த இன்புளுவன்சா ( Complicated influenza) என சிகிச்சைக்காக வகைப்படுத்தப்படுகின்றது.
சாதாரண இன்புளுவன்சாவின் அறிகுறிகளாக –
- காய்ச்சல் (38°C)
- இருமல் (சளியற்ற இருமல்)
- தொண்டைநோ
- மூக்கினால் நீர் போன்று வடிதல் (Rhinorrhea)
- தலையிடி
- தசை நோ
சோம்பல் தன்மை போன்றவை காணப்படுகின்றன. இந்த சாதாரண நிலையானது. 24 மணித்தியாலங்களுக்கு உள்ளேயே தீவிர நிலைக்கு இட்டுச்செல்லலாம்.
நோயின் தீவிர நிலையில் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
மூச்சு எடுப்பதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுதல், விரைவாக மூச்சு எடுத்தல், சில சந்தர்ப்பங்களில் நிமோனியா போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.
நரம்புத்தொகுதி பாதிப்படைந்து மூளைக்காய்ச்சல் (Encephalitis) ஏற்படலாம்.
சிறுநீரகம் பாதிப்படைதல் (Ronal Failure) ஏனைய பல அங்கங்கள் செயலிழத்தல் (Multiorgan failure), உடல் முழுவதும் பரவுதல் (Septic Shock) , இதயத்தில் தாக்கம் ஏற்படுதல் ( Myocarditis) Rabdomyolysis போன்றன ஏற்படும்.
ஏற்கனவே நீண்டகால நோய்களான ஆஸ்துமா, COPD , சிறுநீரகம் செயலிழத்தல், ஈரல் செயலிழத்தல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நோய்நிலமை மேலும் தீவிரமடையும்.
சாதாரண நிலையில் உள்ளவர்கள் வீட்டிலிருந்தவாறே சிகிச்சை பெறமுடியும். தீவிர நிலையில் உள்ளவர்கள் அல்லது விரைவாக தீவிர நிலைக்கு செல்லும் நோயாளிகள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெறவேண்டும்.
சாதாரண நிலையில் உள்ளவர்கள் வீட்டில் தனியான இடத்தில் இருத்தல் சிறந்தது. முகத்துக்கு முகத்திரையை(Face mask) பயன்படுத்த வேண்டும். சாதாரண நிலையில் அன்ரிவைரஸ் மாத்திரைகள் தேவைப்படுவதில்லை. காய்ச்சலுக்கு பரசிற்றமோல் மாத்திரைகள் ( Paracetamol) பயன்படுத்த வேண்டும். காய்ச்சலுக்காக அஸ்பிரிக் ( Aspirin) மாத்திரைகளையோ NSAID வகையைச் சேர்ந்த வலி நிவாரணிகளையோ பயன்படுத்தக்கூடாது. போதிய அளவு நீர் அருந்துதல், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
நோய் தீவிரமடைவதற்குரிய அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது 3 தினங்களுக்கு மேல் காய்ச்சல் மற்றும் ஏனைய அறிகுறிகள் தொடர்ந்தும் இருந்தாலோ உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும்.
நோய் தீவிரமடைதலை எவ்வாறு அடையாளம் காணலாம்
- திடீரென மூச்சு எடுப்பதில் கடினம் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுதல், சிறுவர்கள் விரைவாக மூச்சு எடுத்தல்.
- கை, கால் விரல்கள் நீல நிறமாக மாற்றமடைதல்
- குருதியமுக்கம் குறைவடைதல்
- சிறுநீர் வெளியேறுதல் குறைவடைதல்
- திடீரென தலைச்சுற்று, தலையிடி ஏற்படுதல், உடல் சோர்வடைதல்
- நினைவில் தடுமாற்றம் ஏற்படுதல், நினைவிழத்தல், நரம்புத் தொழிற்பாடு குறைவடைதல் (Paralysis) வலிப்பு ஏற்படுதல்.
- தொடர்ச்சியாக வாந்தி எடுத்தல்
- நெஞ்சுவலி,, வயிற்றுவலி ஏற்படுதல்
- சிறுவர்கள் நீர், உணவு உள்ளெடுத்தல் குறைவடைதல்
நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தல்
- நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஏனையோருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.
- முகத்திரைகளை (Face Mask) பயன்படுத்துவது சிறந்தது.
- இருமும் போதும், தும்மும் போதும் முகத்தை மூடுதல் வேண்டும்.
- நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகும் சாத்தியம் கூடியவர்கள் சனநடமாட்டம் கூடிய இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- நோயாளியுடன் மற்றையோர் தொடர்பு கொள்ளும் பொது ஒரு மீற்றருக்கும் அதிகமான இடைவெளியை பேண வேண்டும்.
- கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் வேண்டும்.
- அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை வழமையாக பயன்படுத்தும் தொற்றுநீக்கியை பயன்படுத்திற கழுவவேண்டும்.
- சுற்றாடலை துப்பரவாக வைத்திருத்தல் வேண்டும்.
- நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் ஆரம்பித்து 7 நாள்களின் பின்னர் அல்லது பரசிற்றமோல் (Paracetamol) மாத்திரைகள் ஏதும் பயன்படுத்தாது காய்ச்சல் நின்று 24 மணித்தியாலத்தின் பின்னரே மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
- குழந்தைகள், சிறுவர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருப்பின் அவர்கள் பூரணமாக குணமடைந்து ஒரு வாரத்தின் பின்னரே மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
மேற்குறித்த இந்த நோயானது தற்பொழுது வடமாகாகணம் உட்பட எமது நாட்டின் பல்வேறு பகுதிகளையும் தாக்கியுள்ள ஒர் நோய் நிலைமையாக காணப்படுகின்றது.
எனவே கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், சிறுவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை எதிர்கொள்வதை இயன்றவரை தவிர்ப்பதுடன் சனநடமாட்டம் கூடிய பொது இடங்களுக்கு செல்லுதல், பொது போக்குரத்தை தவிர்த்தல் சிறந்தது.
அடிக்கடி கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதுடன், ஆரோக்கியமான உணவையும் உட்கொள்ள வுண்டும். ஏதாவது மேற்குறித்த அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியரை நாடி ஆலோசனை பெறுவது சிறந்தது.
மேற்குறிப்பிட்டவர்கள் தவிர உடல் ஆரோக்கிய நிலையில் நீண்டகால நோய்கள் எதனாலும் பாதிக்கப்படாதவர்கள் சாதாரண காய்ச்சல், தடிமன் ஏற்பட்டால் அவர்கள் பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரைகளை பயன்படுத்தி வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுவது சிறந்தது. இவர்கள் வீரியம் கூடிய அன்டிவைரஸ் மாத்திரைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டியது இல்லை. அத்துடன் இவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்த்து நோய் பரவுவதையும் தடுக்க வேண்டும். ஏதாவது மேற்குறிப்பிட்ட தீவிர நிலைக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவது சிறந்தது.
Dr.P.மேனகா
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.