ஏறத்தால 15 மில்லியன் குழந்தைகள் குறைமாதக் குழந்தைகளாக வருடந்தோறும் இவ்வுலகில் பிறக்கின்றார்கள். பிறக்கும் 10 குழந்தைகளில் ஒரு குழந்தை குறைமாதக் குழந்தையாக இருக்கின்றது. குறிப்பாக பிறக்கும் குழந்தைகளில் 12 வீதமானோர் குறைமாத குழந்தைகளாக வருமானம் குறைந்த நாடுகளிலும், 9 வீதமாக வசதிபடைத்த நாடுகளிலும் காணப்படுகின்றனர். இலங்கையில் 10.7 சதவீதமான குழந்தை பிறப்புக்கள் குறை மாதத்தில் நிகழ்கின்றன. உலகில் மிக அதிகளவு குறைமாத பிரசவங்கள் நடக்கும் நாடாக இந்தியாவும், அதற்கு அடுத்தாக சீனாவும் உள்ளன. மாறாக மிகக்குறைந்தளவு குறைமாதப் பிரசவங்கள் நிகழும் நாடுகளில் பெலாரஸ் (Belarus) என்ற நாடு முதலிடம் பிடித்துள்ளது. குறைமாதமாக பிற்கும் 15 மில்லியன் குழந்தைகள் வருடம் தோறும் தகுந்த சிகிச்சைகள் இன்றி இறக்கின்றார்கள். எனவே குறைமாதக் குழந்தைகளின் பிறப்பு இலங்கை போன்ற வருமானம் குறைந்த நாடுகளுக்கே அதிக பிரச்சினையாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O) வரைவிலக்கணப்படி கடைசி மாதவிடாய் காலத்தின் முதல் நாளிலிருந்து 37 வாரங்களுக்கு முன்னதாகப் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குறைமாதக்கு குழந்தைகள் ஆவர். குறைமாதமாகப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகள் ஏற்படாது.
கர்ப்ப வாரங்களுக்கு ஏற்ப குறைமாதப் பிரசவங்களை மூன்றாக வகைப்படுத்தலாம்.
- ஓரளவு குறைமாதக் குழந்தை (Late preterm) – 32 – 37 கிழமைக்குள் பிறந்த குழந்தைகள். 84 சதவீதமான குறைமாதக் குழந்தைக் இந்தக் காலப்புகுதியில் பிறப்பதுடன் அவர்களில் பெரும்பாலானோர் சிறிதளவு மருத்துவ உதவியுடன் உயிர் பிழைப்பார்கள்.
- மிகக் குறைமாதக் குழந்தைகள் (Very Preterm) – 28 – 32 கிழமை கர்ப்பகாலத்திற்குள் பிறப்பவர்கள். இவர்களுக்கு நவீன வைத்திய வசதிகள் கிடைப்பின் உயிர் பிழைப்பார்கள்.
- தீவிர குறைமாதக் குழந்தைகள் (Extreme Preterm) – 28 கிழமைகளுக்கு முன்னதாக பிறப்பவர்கள். இவர்களுக்கு அதிதீவிர, நவீன சிகிச்சைகள் முறைகள் தேவைப்படுவதுடன் இலங்கை போன்ற வசதி குறைந்த நாடுகளில் 10 வீதமானோர் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர்.
குறைமாதக் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள்
- முழு மாதக் குழந்தையைப் போலல்லாது பால் அருந்துவதில் சிரமங்கள் ஏற்படும். அதற்காக வேறு முறைகளான கிண்ணம், கரண்டி, அல்லது குழாய் மூலமாகவோ தாய்ப் பாலைக் குழந்தைக்கு கொடுக்கவேண்டி ஏற்படலாம்.
- சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். எனவே குறைமாதக் குழந்தைக்கு சுவாசிப்பதை இலகுவாக்கும் பல்வேறு சிகிச்சைமுறைகள் தேவைப்படுவதுடன், ஒட்சிசனும் வழங்கவேண்டி ஏற்படலாம்.
- குறைமாதக் குழந்தைகள், தமது உடல் வெப்பநிலையைப் பேண முடியாதவர்களாக இருப்பதனால் அவர்களின் வெப்பநிலையைப் பேணுவதற்காக இங்கு பேற்றர் ( Incubator) எனப்படும் கண்ணாடிப் பெட்டியில் வைக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஒரளவு குறைமாதக் குழந்தையின் தாயுடன் தோலுக்கு தோலாக அரவணைத்து வைப்பதன் மூலம் உடல் வெப்பநிலையைப் பேணலாம்.
- குறைமாதக் குழந்தைகளுக்கு இலகுவில் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மிகக் கவனமாக நியம பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி பராமரிக்க வேண்டியதேவை ஏற்படும். குறிப்பாக சரியான முறையில் கைகளைக் கழுவி குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும்.
- குறைமாதக் குழந்தைகள் அவர்களின் தகுந்த நிறையடையும் வரை நீண்ட நாள்களுக்கு விஷேட குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
- மேலும் சில சமயங்களில் குழந்தைகளின் மூளையிலோ, கண்களிலோ, காது கேட்பதிலோ பாதிப்புகள் ஏற்படலாம். எனவே அவற்றைத் தவிர்ப்பதற்கான தகுந்த சிகிச்சைகளும் பராமரிப்புக்களும் அவசியமாகும்.
- வளர்ந்த குறை மாதமாகப் பிறந்த குழந்தைகளுக்கு சுவாசத் தொற்று போன்ற தொற்று நோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் தொற்று நோய்களுக்கு எதிரான தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விடயங்களிலிருந்து இன்றைய காலத்தில் குறைமாதமா பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. என்பதை நாம் அறியலாம். இது சம்பந்தமாக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு உலகம் முழுவதும் கார்த்திகை 17ம் திகதியை உலக குறைமாதக் குழந்தைகள் தினமாக (world prematurely day) அனுஷ்டிக்கின்றனர்.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.