வைத்தியர் – காய்ச்சல் உள்ள இந்த மூன்று நாளிலும் என்ன சாப்பாடு கொடுத்தீர்கள்
தாய் – அதிகமாக பிஸ்கட்டும், பிளேண்டியும் தான், சோறும் கேட்டவன் நான் கொடுக்கவில்லை.
வைத்தியர் – ஏன்?
தாய் – காய்ச்சலோட சமிக்காது என்றுதான். மற்றது சாப்பாடு கொடுத்தா சக்தி ( வாந்தி) வந்தாலும் பிள்ளைக்கு கஷ்டம் தானே!!
குழந்தைகளின் உணவூட்டல் சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்களின் தினசரிச் சவாலாக அமைகின்றது. ஆனால் குழந்தை நோயுற்ற வேளைகளில் உணவூட்டல் பற்றி எழுகின்ற பல வினாக்கள் பொதுவாக எல்லாப் பெற்றோர்களிடையேயும் காணப்படுகின்றன.நோயுற்ற வேளைகளில் உணவூட்டலைப் பாதிக்கின்ற சில நிலைமைகள் நோய்காரணமாக எழுகின்றன அவையாவன.
- பசிக்குறைவு
- வயிற்றுப்பிரட்டல்
- வாந்தி
- வாயில் ஏற்படும் புண்கள்
- தொண்டை நோவுடன் கூடிய விழுங்க முடியாத தன்மை
- உணவூட்டல் சுவாசத்தை சிக்கலாக்கும் நிலைமைகள் ( மூக்கடைப்பு, ஆஸ்துமா)
- சீரிய கிருமித் தொற்றுகளும், மோசமான உடல் நலக்குறைவும்.
- மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
உதாரணம் – வாந்தி, நாக்கிலுள்ள சுவையுணரும் தன்மை வேறுபடுதல்.
ஆயினும் நோயுற்ற வேளையில் உணவூட்டல் வைத்தியர்களால் தவிர்க்கப்படும் சந்தர்ப்பங்கள் தவிர, உணவூட்டவைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளுவது மிக முக்கியமான ஒரு விடயமாகும். நோய்க்குரிய சிகிச்சையைப் போன்றே பொருத்தமான உணவூட்டலும் நோய்க்காலப் பராமரிப்பில் மிக அவசியமான ஒரு அம்சமாகும்.
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்ற சில காரணிகளை உணவூட்டலில் சிரமத்தை ஏற்படுத்தினாலும் தொடர்ச்சியான உணவூட்டலைச் செய்வது சாத்தியமான ஒரு விடயமே ஆகும். ஆனால் பொதுவாகக் காணப்படுகின்ற சில தவறான நம்பிக்கைகள் உணவைத் தவிர்க்கவும் குழந்தையின் நோய் நிலைமை மோசமடையவும் காரணமாகின்றன. அத்தவறான நம்பிக்கைகளாவன
- நோய்க் காலத்தில் சமிபாடு குறைவு
- உணவு கொடுத்தால் வாந்தி ஏற்படும்
- வயிற்றோட்டத்தின் போது உணவூண்டால் நிலைமை இன்னும் மோசமடையும்.
- வயிறு காய்ந்தால் கிருமி பெருகுவது குறைவு
- சத்துள்ள உணவுகள் ( முட்டை, இறைச்சி) சமிபாடடைவது குறைவு
- பிஸ்கட், பிளேண்டீ (தேநீர்) போன்றனவே இலகுவாகச் சமிக்கக் கூடியவை.
- சில நோய் நிலைமைகளின் போது சைவ உணவுகளை மட்டுமு் எடுக்கின்ற மரபும் உணவுகளைத் தவிர்க்கின்ற நிலைமையும்.
- பழவகைகளை உண்பதைத் தவிர்த்தல் – மிகப் பொதுவாக காணப்படுகின்ற இத்தவறான நம்பிக்கைகள் குழந்தையின் உடல் நிலையை மோசமாக்கவும் சடுதியான நிறைக்குறைவை ஏற்ப்படுத்தவும் காரணமாகின்றன.
- மாறக, நோய் நிலைமைகளின் போது போஷாக்குள்ள உணவூட்டலைச் சாதாரண நாள்களை விடவும் கூடிய கவனத்துடன் மேற்கொள்ளப் பல காரணங்கள் உள்ளன.
- நோயின்போது ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்தல் ( உதாரணம் காய்ச்சல், வாந்தி வயிற்றொட்டம் போன்ற நிலைமைகள்)
- இரத்தத்தில் உள்ள வெல்லம், உப்புக்களின் அளவை பேணுதல் –
- கிருமித் தொற்றுகள் / நோய் நிலைமைகளின் போது ஏற்படுகின்ற அதிகரித்த அனுசேபத் தொழிற்பாடுகளினால் குழந்தையின் உடலிலிருந்து அதிக சக்தி இழப்பு ஏற்படுகின்றது. இதை ஈடு செய்ய போஷாக்குள்ள உணவுகளை வழங்குவது அவசியம்.
- நோய் சார்ந்த காரணிகளும், தவறான உணவூட்டல் முறைகளும் குழந்தையின் நிறைக்குறைவில் பங்களிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக போஷாக்கான உணவூட்டலை நோய் நிலைமைகளின் போதும் தொடர்வது அவசியமாகும். இதற்காகப் பின்வரும் முறைகளை கையாள முடியும்.
- சிறிய அளவில் அடிக்கடி உணவூட்டல்
- பிள்ளைக்கு விருப்பமான வாசனை / சுவையுள்ள வகையில் உணவைத் தயாரித்தல்.
- உண்பதற்கு இலகுவாக விதத்தில் உள்ள உணவை வழங்குதல்.
- பாற்கஞ்சி
- சூப் வகைகள்
- ஜெலி
- புடிங்
- பழவகைகள்
- யோகட், சீஸ், பால்
பொதுவாகக் காணப்படும் நோய் நிலைமைகளில் ( உதாரணம் காய்ச்சல்) நாளாந்த உணவை எடுக்ககூடிய நிலையிலுள்ள பிள்ளைகளில் வழமையான உணவைத் தொடரமுடியும்.
ஆகவே நோயுற்ற நிலைமைகளில் ஏற்ற சிகிச்சையைப் போன்றே உகந்த உணவூட்டலும் மிக அவசியமானது. உணவுத் தவிர்ப்பு வைத்தியரால் பரிந்துரைக்கப்படும் சந்தர்ப்பங்கள் தவிர ஏனைய நோய் நிலைமைகளில் உணவூட்டலைச் சரியான வித்தில் தொடர்வது பின்வரும் நன்மைகளை ஏற்படுத்துகின்றது.
- நோய்க்காலத்தில் பிள்ளை மிக மோசமாகப் பாதிக்கப்படுவதைக் குறைக்கின்றது.
- நோய்க்கு எதிராகப் போராடவும், விரைவில் குணமடையவும் உதவுகின்றது.
- நோயின் பின்னான போஷாக்குக் குறைவுள்ள நிலைமையையும், நிறைக்குறைவையும் தவிர்க்கின்றது.
வைத்தியர் குமுதினி கலையழகன்
குழந்தை நல வைத்தியர்
யாழ். போதனா வைத்தியசாலை