அப்பப்பா! நான் உங்களுடைய பேரன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். நான் தொலைதூர தேசத்திலே இருப்பதால் உங்கள் பூட்டனை உங்களுக்குக் காட்டமுடியவில்லையே என்ற குற்ற உணா்வு என்றும் என்னுள்ளே இருந்துகொண்டிருக்கிறது. அவனைப் பார்த்திருந்தால் நீங்கள் எவ்வளவு பூரித்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்த பரந்த பூமியிலே எங்களை நிலைநிறுத்த நீங்கள் பட்ட துயரங்கள் அப்பப்பா! அண்ட சராசரம் அளவு பரந்து விரிந்திருந்த உங்களது உலகம் கடைசிக்காலங்களில் வீடு என்ற வட்டத்துக்குள் முடங்கிப்போனபோது உங்களுக்கு ஏற்பட்ட உள்ளுணா்வுகளைப் புரிந்துகொண்டவர்கள் யார்?
அன்று எனது விருப்பங்களை நீங்கள் ஒவ்வொன்றாகக் கேட்பது ஞாபகம் வருகிறது. கடைசிக்காலத்திலே உங்களது விருப்பு வெறுப்புகளை எவர்தான் கேட்டார்கள்? அன்று எனக்கு தும்மல் எடுத்தாலே நீங்கள் பதறிப்போவீர்களே, ஆனால் உங்களது கடைசிக்காலத்திலே உங்களது உடல், உள சுகத்திலே நான் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
அந்தத் துயரங்கள் தெரியாத வயதிலே நீங்கள் என் வலக்கரம் பற்றி பொடி நடையாய் நடந்த தூரங்கள், பள்ளிக்கூட வாசலிலே என்னைக் கூட்டிச்செல்வதற்காகக் கறுப்புக்குடையுடன் நீங்கள் காத்திருந்த காட்சிகள், என்னைக் கண்டிக்கும் பெற்றோரிடம் எனக்காக வக்கீலாய் நீங்கள் வாதாடிய வார்த்தைகள் என எத்தனையோ நினைவுகள் நித்தமும் என் நெஞ்சில் நிழலாடும்.
உங்களது கைப்பிடிக்குள் அன்று நான் உணா்ந்த பாதுகாப்பை அதன் பின் என்றுமே உணா்ந்ததில்லை. நீதிக்குப் பெயா்போன உங்களது நோ்கொண்ட பார்வை, செங்கோல் போன்ற உங்களது கைத்தடியைப் பிடித்துக்கொண்டு நடக்கும் ராஜகம்பீர நடை, போலி கலவாத உங்களது பேச்சு, பெருமை கலவாத உங்கள் போக்கு, ஊரவரையும் உற்றவரையும் நெறிப்படுத்துவதையே மூச்சாகக்கொண்ட உங்கள் வாழ்க்கைமுறை இவை அனைத்தும் பிற்காலத்திலே மறக்கப்பட்டுப் போனது ஏன்?
இயந்திரமாகி உருண்டோடும் இந்த உலக ஓட்டத்திலே உங்களது உள்ளுணா்வுகளைப் புரிந்துகொள்ள யாருக்கு நேரமிருந்தது? உங்களுக்கு உடம்பு முடியாமல் போன பொழுது நீங்கள் நீங்களாகவே வாழ முடியாமல் தடுத்தது ஏது? கடைசிக்காலத்தில் உங்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது ஏன்? வயது போனால் பிறா் விதிக்கும் வரைவிலக்கணத்திற்குள்தான் வாழவேண்டும் என்ற விதியை எழுதியது யார்? சிறுவா்களினதும் பெண்களினதும் உரிமைகள் பற்றிப் பேசத்தான் எத்தனை அமைப்புக்கள்? எத்தனை நிறுவனங்கள்? அவா்களுக்காக குரல்கொடுக்க எத்ததனை மனிதா்கள்? ஆனால் பிரயோசனங்களைப் பிழிந்தெடுத்த பின் வீசி எறியும் சக்கைகள் போல பரிதவிக்கும் முதியவா்களின் உரிமை காக்க, முதியோர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க பலமான அமைப்பொன்று கூட உருவாக்கப்படாமல்போனது ஏன்?
அப்பப்பா! நீங்கள் செய்துமுடித்தவை எல்லாம் எனக்குத் தெரியும் ஆனால் நீங்கள் செய்ய நினைத்தும் செய்ய முடியாமல் போனவை எவை என்று எனக்குத் தெரியாது. அன்று எனது ஆசைகள் ஒவ்வொன்றையும் கேட்டு நிறைவேற்றிய உங்களது நிறைவேறாத ஆசைகள் எவை என்று கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூட எனக்கு நேரமில்லாமல் போனது ஏன்?
உங்களது வாழ்வின் இறுதிப் பகுதி உறவுகளின்றி உப்புச்சப்பின்றிப் போனதற்கு யார் காரணம்? உலக சுகாதார மேம்பாட்டுக்காய் எத்தனை முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலே உங்களது உடல், உள, சமூக நன்னிலையைப் பற்றி சிந்திக்க யாருக்கு நேரமிருந்தது? உங்களது அந்திச் சடங்குகளுக்கு கூட என்னால் வரமுடியாது போய்விட்ட எனது துரதிஷ்டத்துக்காக எவரை நொந்துகொள்ள முடியும்? அப்பப்பா! கையாலாகாத உங்களது பேரனை வழமைபோல மன்னித்துவிடுங்கள்.
சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை