வருடந்தோறும் பெப்ரவரி 4ம் திகதி புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தினமாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது. அதாவது புற்றுநோய் பற்றிய சுமையை எல்லா நாடுகளும் உலகளாவிய ரீதியில் இணைந்து எவ்வாறு சிந்திக்கலாம் என்பதைப் பற்றி தம் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். அதேவகையில் 2015ம் ஆண்டின் தொனிப்பொருள் உணர்த்திநிற்பது யாதெனில் “எமக்குப் பின்னால் நிற்காதீர்” யாவரும் ஒன்றினைவோம்”
புற்றுநோயானது மனிதனின் உடலிலுள்ள கலங்களானவை கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி மற்றும் பரவிக்கொண்டு செல்லும் செயற்பாட்டிலான நிலைமையாகும். இந்நிலைமையானது உடலிலுள்ள அனேகமான பாகங்களிலும் ஏற்படக்கூடியது. உடலின் ஒரு பாகத்தில் ஏற்படும் கலங்களின் அதீத அசாதாரண வளர்ச்சியுடனான பரவல்மூலம் அயலிலுள்ள இழையக்களினுள்ளும் ஊடுருவி தூரவுள்ள இடங்களிற்கும் பரவக்கூடியது. பல விதமான புற்றுநோயானது கட்டுப்படுத்தக் கூடியது. அதாவது புற்று நோயை ஏற்படுத்தகூடிய காரணிகளிலிருந்து எம்மை பாதுகாப்பதன்மூலம் உதாரணமாக புகையிலை பாவனையை தவிர்ப்பதன் மூலம் வாய்ப் புற்றுநோயை தவிர்க்க முயலுதல், மேலதிகமாக ஆரம்பகட்டத்தில் இனங்காணப்படும் புற்றுநோயானது சத்திரசிகிச்சை மூலம், கதிர்வீச்சு சிகிச்சை மூலம், மருந்துகள் மூலம் குணமாக்கப்படலாம். ஆக மொத்தத்தில் 2015ம் ஆண்டின் தொனிப்பொருளானது நேரான பார்வையுடன் புற்றுநோயிற்கெதிராக நாம் குரலெழுப்பி அதற்குரிய தீர்வுமுறைகளை நாம் பின்பற்றி நோயின் வீரியததன்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதலாகும். இதன் மூலம் 30 வீதத்திலும் மேலதிகமான புற்றுநோயை தவிர்த்துக் கொள்ளலாம். முன்னர் குறிப்பிட்ட சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களுடன், அசுத்தமான காற்றை சுவாசித்தல், வீட்டினுள் புகைப்பிடித்தல் அல்லது புகையை சுவாசித்தல் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் குறிப்பிட்ட வைரசு தொற்று ஏற்படல் போன்ற பழக்கங்களை ஒதுக்கித் தள்ளவேண்டும்.
புற்று நோயின் ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்தால் இறப்பு வீதமானது குறைக்கப்படலாம். புற்றுநோயிற்கான ஆரம்ப குணங்குறிகள் பற்றிய அறிவைக்கொண்டிருத்தல் மீண்டும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. உதாரணமாக, வாயப்புற்று நோயானது ஆரம்ப நிலையில் எவ்வாறெல்லாம் குணங்குறிகளை காட்டும் என நோக்குவோம். வாயினுள் நிலையான சிவப்பு அல்லது வெள்ளை படலம் ஒன்று தென்படும் படிப்படியாக அளவில் அதிகரிக்கும். வீக்கம் ஏற்படும், திடீரென காரணமேயில்லாமல் பல் வருத்தம் ஏற்படும், வழக்கத்திற்கு மாறாக வாய் அல்லது மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்றவை அவதானிக்கப்படலாம். இதேபோன்று பெண்களிலேற்படக்கூடிய மார்பு புற்றுநோயிற்கான ஆரம்ப குணங்குறிகள் மார்பகத்தில் கட்டிபோன்ற அமைப்பு தென்படல் அல்லது உணருதல், அந்த கட்டி நாட்செல்ல சிறிதாகவோ அல்லது மாதவிடாய் சக்கரத்துடன் இல்லாமல் போகாமல் நிலையாகவே காணப்படல், கடினமேற்பரப்புடன் காணப்படும் அந்த கட்டி பொதுவாக வலியை தருவதில்லை. இவ்வாறு ஆரம்பநிலையில் கண்டறிவதுடன் எழுந்தமானதாக உடல் பரிசோதனை செய்வதன் மூலம் தப்பித்துக்கொள்ள முயலலாம். உதாரணமாக Mammography எனப்படும் பரிசோதனைமூலம் தமக்கு மார்பு புற்றுநோயிற்கான குணங்குறிகள் உண்டா இல்லையா என தெரிந்துகொள்ளலாம். ஆனால் இதற்கு பொருளாதார வசதி இருக்க வேண்டும். இலங்கையில் ஒரு தடவை இப்பரிசோதனை செய்ய ரூபா 5000 தேவைப்படுகின்றது.
புற்றுநோயினால் இறக்கும் மனிதரின் வீதமானது உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2012ம் ஆண்டில் 8.2 மில்லியன் கணக்கான இறப்புகள் புற்றுநோயினால் ஏற்பட்டது. நுரையீரல், இரைப்பை, ஈரல்., குடல் மற்றும் மார்பக புற்றுநோய்கள் பிரதான வகைகளாக காணப்படுகின்றன. மேலும், ஆண் மற்றும் பெண்களில் பெரும்பாலும் ஏற்படும் புற்றுநோயின் தன்மையானது வேறுபடுகிறது. புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் கிட்டத்தட்ட 30 வீதமானவை அதிகூடிய உடற்திணிவு சுட்டெண், குறைவாக பழங்கள் மற்றும் மரக்கறிவகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குறைவான உடற்பயிற்சி பழக்கத்தைக் கொண்டிருத்தல், புகையிலை பாவிக்கும் பழக்கம் மற்றும் மது பாவனை பழக்கம், போன்ற சுகாதாரமற்ற பழக்கமுறைகளால் ஏற்படுகின்றது. உலகளாவிய ரீதியில் 22 வீதம் ஆன புற்றுநோயானது புகையிலை பாவனையால் ஏற்படுகையில் 71 வீதம் ஆன நுரையீரல் புற்றுநோயிற்கும் இப்பழக்கம் காரணமாகிறது.
குறிப்பிட்ட சில வைரசுக்களால் ( Hepatitis B Virus, Hepatitis C Virus, Hepatitis Papilloma Virus) ஏற்படும் நாட்பட்ட தொற்றுக்களும் புற்று நோய் நிலைமை ஏற்படக் காரணமாகின்றன. உதாரணமாக பெண்களில் ஏற்படும் கருப்பை புற்றுநோயானது Hepatitis Papilloma virus எனப்படும் ஒரு வகை வைரசால் ஏற்படுகின்றது. இந்நிலைமை குறைவான வருமானம் பெறும் நாடுகளில் பரவலாக காணப்படுகின்றது. இவ்வாறாக தரவு அடிப்படையில் 2030ம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 13.1 மில்லியன் இறப்புகள் புற்றுநோயினால் ஏற்பட சாத்தியமூள்ளதாம்.
புற்றுநோயை தூண்டும் காரணங்கள் பற்றி ஆராய்ந்த நாம் எவ்வாறெல்லாம் புற்றுநோயின் தன்மையை குறைக்கலாம் என்பதைப் பற்றியும் சிறிது நோக்குவோம். மேற்கூறிய விடயங்கள் பற்றி அறிவை எப்படியாயினும் அறிந்து வைத்திருத்தல் முதல் செய்முறையாகும். ஏனேனில், சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களை அறவே இல்லா தொழிப்பதன் மூலம் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதோடு புற்றுநோயிற்குரிய சிகிச்சைகளை வைத்திய குழுவின் வழிகாட்டலின்படி மேற்கொள்வதன் மூலம் பெரும்பாலான வரை புற்றுநோயின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ளலாம். மேலும் மருத்துவ சிகிச்சையுடன் புற்றுநோயாளரின் உடல், உள, ஆன்மீக ரீதியில் ஆறுதல்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் இன்றியமையாததாகும்.
சி.சஸ்ரூபி
B.Sc (Nursing) M.Phil (Reading)