பிறக்கும் போதே குழந்தைகளில் காணப்படும் உடல் கட்டமைப்பு அல்லது தொழிற்பாட்டுக் குறைபாடுகளை பிறவிக் குறைபாடுகள் என்பர். பிறக்கும் குழந்தைகளில் 33 பேரில் ஒருவர் பிறவிக் குறைபாடு உடையவராக பிறக்கின்றது இதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் 3.2 மில்லியன் குழந்தைகள் ஏதோவொரு அங்கவீன குறைபாடு உடையவர்களாக இவ்வுலகில் பிறக்கின்றனர்.
அதேபோல் ஒவ்வொரு வருடமும் பிறவிக்குறைபாட்டு நோய்களால், பிறந்து முதல் 28 நாட்களுள் ஏறத்தாழ 270, 000 பச்சிளங்குழந்தைகள் இறக்கின்றனர். யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருட இறுதி 5 மாதங்களில் பிறந்த 2700 குழந்தைகளில் 35 பேருக்கு ஏதோவொரு குறிப்பிடத்தக்க பிறவிக்குறைபாடு காணப்பட்டது. அவர்களில் 6 பேர் இறந்துள்ளனர்.
பிறவிக் குறைபாட்டு நோய்கள் ஏன் ஏற்படுகின்றன?
ஏறத்தாழ அரைவாசிக்கு மேற்பட்ட பிறவிக்குறைபாடுகளுக்கு நிச்சயமான ஒரு காரணத்தை கூறமுடியாதுள்ளது. எனினும் கீழ்வரும் காரணங்கள் பிறவிக்குறைபாடுகளுக்கு ஏதுவாக அமைகின்றன.
- சமூக பொருளாதார காரணிகள் –
இவை பிறவிக்குறைபாடுகளுக்கு மறைமுகமான காரணமாக அமைகின்றன. ஏறத்தாழ 94 வீதமான கடும் பிறவிக்குறைபாட்டு நோய்கள் பொருளாதார வளங்குன்றிய அல்லது இடைத்தர வளமுள்ள நாடுகளிலேயே பிறக்கின்றன. இந்நாடுகளில் பெரும்பாலான தாய்மாரில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள், பிறவிக்குறைபாட்டை உண்டுபண்ணும் இரசாயணங்களின் தாக்கம் அதிகமாக இருத்தல் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு நோய்க் கிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகம் காணப்படல் என்பன இதற்கான காரணங்களாகும். - வயது கூடிய பெண்கள் குழந்தைகளைப் பெறும் போது, மொங்கோலியன் (Down Syndrome) போன்ற பிறவிக் குறைபாடுகள் அதிகமாக ஏற்படலாம்.
- இரத்த உறவு முறைக்குள் திருமணஞ் செய்தல் எமது சமூகத்தில் இன்னும் காணப்படும் மச்சான் மச்சாள் உறவு முறை திருமணங்களால், பிறக்கும் குழந்தைகளுக்கு சில வகையான பரம்பரை குறைபாட்டு நோய்கள் அதிகமாக ஏற்படலாம்.
- குழந்தை வயிற்றுள் உள்ளபோது தாய்க்கு ஏற்படும் சிபிலிசு (Syphillis) றுபெல்லா (Rubella) போன்ற கிருமித் தொற்று நோய்களால் பிறக்கும் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள் உண்டாக்கலாம்.
- கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் இரும்பு, அயடீன் போலிக்கமிலம் போன்ற சத்துக்குறைபாடுகளாலும், சலரோகம், அதிக எடை அல்லது மிகக் குறைந்த நிறை போன்றவற்றாலும் பிறவிக் குறைபாட்டு குழந்தைகள் பிறக்கலாம்.
- சூழல் மாசடைதல் – சூழலில் காணப்படும் பூச்சி நாசினிகள், இரசாயனப் பொருட்களால் நீர் மாசடைதல், கர்ப்ப காலத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல், சில வகையான மருந்துப் பொருட்களையும், அதிக விற்றமின் A மாத்திரைகளை உட்கொள்ளுதல் மற்றும் கர்ப்பவேளையில் கதிரியக்கத் தாக்கத்திற்கு உள்ளாதல் என்பன குழந்தையில் பிறவிக் குறைபாட்டை உண்டாக்கலாம்.
பிறவிக் குறைபாடுகளை எவ்வாறு தவிர்க்கலாம்?.
தகுந்த பொது சுகாதார தடுப்பு முறைகளை பெண்ணொருவர் கர்ப்பமாக முன்னரும், கர்ப்பகாலத்திலும் பின்பற்றுவதன் மூலம் சில பிறவிக்குறைபாடுகளைத் தவிர்க்கலாம். மேலே கூறப்பட்ட பிறவிக்குறைபாடுகளுக்கான காரணிகள் ஒரு பெண்ணுக்கு ஏற்படாமல் தவிர்த்தால் அனேக பிறவி குறைபாடுகள் குழந்தைக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். குறிப்பாக பெண்களின் போசாக்கை மேன்படுத்துதலும், இரசாயனங்கள், மருந்துப்பொருட்கள், கதிர்வீச்சு தாக்கம், கிருமித் தொற்றுக்கள் என்பன கர்ப்பிணி பெண்களைத் பாதிக்காது பாதுகாத்தலும் முக்கிமானவையாகும். அவ்வாறே இரத்த உறவு முறை திருமணங்களைத் தவிர்த்தலும், வயதுகூடிய பெண்கள் கர்ப்பமாதலை தவிர்த்தலும் நல்லது. பெண்கள் கர்ப்பமாவதற்கு முன்னரே தகுந்த தடுப்பூசிகளை ( உதாரணம் றுபெல்லா) பெற்றுக்கொள்ளாம், போலிக்அமிலம் ( Falic acid) மாத்திரைகளை உட்கொள்ளுதலும் வேண்டும்.
பிறவிக்குறைபாடுகளை எவ்வாறு கண்டறியலாம்?
கீழ்வரும் மூன்று காலப் பகுதிகளிலும் தகுந்த சோதனைகள்மூலம், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிறவிக் குறைபாடுகளைக் கண்டறியலாம்.
- கர்ப்பமாவதற்கு முன்னர் – ஒரு குடும்பத்தில் வேறு யாரும் பாதிக்கப்பட்டிருப்பின், பெற்றோருடைய இரத்தத்தைச் சோதிப்பதன் மூலம் அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு அவ்வாறான குறைபாடுகள் ஏற்படலாமா என கண்டறியலாம். உதாரணமாக தலசீமியா எனும் குருதிச்சோகை நோய்க்கான காவிகளாக பெற்றோர் இருப்பின், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு அந்த நோய் இருப்பதற்கான வாய்ப்பு நான்கில் ஒரு பங்காகும்.
- கர்ப்பகாலத்தில் – பிறவிக் குறைபாடுகள் ஏற்படக்கூடிய காரணிகள் காணப்பட்டால், கர்ப்ப காலத்தில் தாயின் இரத்தத்தையோ, நச்சுக்கொடியின் துண்டையோ, கர்ப்பபையிலுள்ள அம்மினியோடிக் திரவத்தையோ சோதிப்பதன் மூலமும், கர்ப்பத்தை ஸ்கான் பண்ணுவதன் மூலமும் பல பிறவிக்குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறியலாம்.
- குழந்தை பிறந்த பின் – குழந்தையை சோதிப்பதன் மூலமும் குழந்தையின் இரத்ததினதும் இழையங்களினதும் மாதிரியை சோதிப்பதன் மூலமும் குழந்தையை ஸ்கான் பண்ணுவதன் மூலமும் பல குறைபாடுகளைக் அறியலாம்.
பிறவிக்குறைபாடுகளுக்கு எவ்வாறான சிகிச்சைகளைப் பெறமுடியும்.
இன்றைய நவீன மருத்துவ வசதிகளின் மூலம் பலவகையான பிறவிக்குறைபட்டு நோய்களுக்குரிய சிகிச்சைகளை பெறக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக இருதய சத்திர சிகிச்சைகள், அங்க சீரமைப்பு சிகிச்சைகள், என்பு மச்சை மாற்று சிகிச்சை, ஒமோன்கள் மற்றும் நொதியப் பொருட்களை செயற்கையாக வழங்குதல், பரம்பரையலகுக்கு சிகிச்சை வழங்குதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனவே பிறவிக் குறைபாட்டு நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், குழந்தைக்கும் அதிக பாதிப்புக்கள் வர முன்னரே உரிய சிகிச்சைகளை வழங்கலாம். உதாரணமாக பிறப்பின்போதே காணப்படும் தைரொக்சின் குறைப்பாட்டை கண்டறிய இன்று உலகின் பல நாடுகளிலும் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இரத்த மாதிரி சோதனை செய்யப்படுகிறது. அதன் மூலம் குறைபாடு இருப்பின் வேளைக்கே சிகிச்சை வழங்கமுடியும்.
இலங்கையில் குடும்பச் சுகாதார பணியகம், பிறவிக் குறைபாட்டு நோய்கள் பற்றிய பதிவுகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் தகுந்த தடுப்பு முறைகளையும், சோதனைகளையும் சிகிச்சை முறைகளையும் சுகாதார அமைச்சுனூடாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. எனினும் பிறவிக் குறைபாடுகள் சம்பந்தமான பல சோதனைகளை இன்னும் தனியார் ஆய்வுகூடங்களிலேயே மேற்கொள்ள கூடியதாகவுள்ளது. அதே போல் நவீன சிகிச்சை முறைகளை சில பிறவிக் குறைபாட்டு நோய்களுக்கு இலங்கையில் வழங்க முடியாதுள்ளதால் பல இறப்புகள் ஏற்படுகின்றன. எனினும் வளர்ந்து வரும் மருத்துவ வசதிகள் மூலமாக எதிர்காலத்தில் இவை நிவர்த்தி செய்யப்படும் என நம்பலாம்.
Dr.ந. ஸ்ரீசரவனபவானந்தன்
குழந்தை மருத்துவ நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை